கேரளா ,ஜூன் 16 : கேரளாவில் அரசுப் பேருந்துகளில் அனைத்து மாநிலப் பெண்களும் திருநங்கைகளும் இலவசமாகப் பயணிக்கும் புதிய திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கேரள முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ள இத்திட்டத்தின் கீழ் ,கேரள அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் (கேஎஸ்ஆர்டிசி) சாதாரண பேருந்துகளில் அனைத்து வயதுப் பெண்களும் திருநங்கைகளும் கட்டணமின்றிப் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு ,இத்திட்டத்தின் கீழ் பயணிப்பதற்கு எவ்வித முன்அதிவோ அல்லது ஆவணச் சரிபார்ப்போ தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் பேருந்தில் ஏறிய பிறகு நடத்துனரிடம் இருந்து ‘பூஜ்ஜிய கட்டணப் பயணச்சீட்டை’ (Zero Fare Ticket) பெற்றுக் கொண்டு தங்களது பயணத்தைத் தொடரலாம். இந்தச் சலுகை முற்றிலும் சாதாரண கேஎஸ்ஆர்டிசி பேருந்துகளுக்கு மட்டுமே பொருந்தும் எனப் போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழக நிதிநிலை குறித்து வெளியான வெள்ளை அறிக்கை: 8 முக்கியக் குறியீடுகளில் கடைசி இடத்தில் தமிழ்நாடு!
கேரள மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் இந்த இலவசப் பயணத் திட்டம் செல்லுபடியாகும் அதே வேளையில் ,மாநில எல்லைகளைக் கடந்தும் இச்சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ,கேரளாவில் இருந்து தமிழகத்திற்கும் ,தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கும் இயக்கப்படும் சாதாரண கேஎஸ்ஆர்டிசி பேருந்துகளிலும் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் கேரளா ,தமிழ்நாடு மட்டுமின்றி எந்தவொரு மாநிலத்தைச் சேர்ந்த பெண்களும் ,திருநங்கைகளும் கட்டணமின்றி எல்லையோரப் பயணங்களை மேற்கொள்ள முடியும் என்று பேருந்து நடத்துனர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் ,இந்த இலவசப் பயணப் பலனைப் பெறுவதற்குக் குறிப்பிட்ட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான எந்தவொரு அடையாள ஆவணங்களையும் (Identity Proof) நடத்துனரிடம் கட்டாயமாகக் காண்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறப்படுகிறது. எளிய நடைமுறைகள் காரணமாக இத்திட்டம் எல்லையோர மாவட்டங்களில் வசிக்கும் உழைக்கும் வர்க்கப் பெண்கள் மற்றும் அன்றாடப் பயணிகளுக்குப் பெருமளவில் பயனளிப்பதாக அமைந்துள்ளது.
கேரள அரசின் இந்த விரிவான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ,அண்டை மாநிலமான தமிழகத்தின் எல்லையோரப் பகுதி மக்களிடையேயும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் இந்த எல்லையோர இலவசப் பேருந்து சேவையைப் போலவே ,தமிழக அரசும் அனைத்துப் பெண்களுக்கும் பயன்படும் வகையில் விரிவான இலவசப் பேருந்து பயணத் திட்டத்தை எல்லைப் பகுதிகள் வரை முழுமையாக விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. குறிப்பாகக் கோவை ,தென்காசி உள்ளிட்ட தமிழக-கேரள மாநில எல்லைப் பகுதிகளில் வசிக்கும் பெண்கள் இத்தகைய விரிவான திட்டத்தைத் தமிழக அரசும் முழு வீச்சில் அமல்படுத்த வேண்டும் என்று தங்களது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.








