மயிலாடுதுறை , ஜூன் 16: மயிலாடுதுறை கூறைநாட்டில் அமைந்துள்ள புனுகீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் பல ஆண்டுகளாகக் குடியிருந்து வரும் பொதுமக்களின் வீடுகள் மற்றும் கடைகளுக்குப் பூட்டி சீல் வைக்க இந்து சமய அறநிலையத்துறை எடுத்துள்ள நடவடிக்கையைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் இன்று தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் குடியேறும் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள புனுகீஸ்வரர் திருக்கோயில் அப்பகுதியைச் சேர்ந்த சாலியர் சமுதாய மக்களுக்குச் சொந்தமான வழிபாட்டுத் தலமாக விளங்கி வருகிறது.இந்தத் திருக்கோயிலுக்குச் சொந்தமான அடிமனை நிலத்தில் ரவி, சரவணன், சித்ரா, ராஜசேகர், ராமமூர்த்தி, சீனிவாசன் மற்றும் அமுதா ஆகிய ஏழு பேர் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகள் கட்டியும், கடைகள் அமைத்தும் வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.
நெல்லையில் 15 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: முதியவர் போக்சோவில் கைது
இந்த நிலையில், நியாய விலை வாடகை என்ற புதிய நடைமுறையின் கீழ் இவர்களுக்கான வாடகைத் தொகையை அறநிலையத்துறை அதிகாரிகள் கணிசமாக உயர்த்தியுள்ளனர்.மேலும், இந்த உயர்த்தப்பட்ட தொகையின் அடிப்படையில் நீண்டகாலமாக வாடகை நிலுவை உள்ளதாகக் கூறி, சம்பந்தப்பட்ட ஏழு பயனாளிகளையும் அங்கிருந்து வெளியேற்றும் நோக்கில் அவர்களின் வீடுகள் மற்றும் கடைகளை பூட்டி சீல் வைக்கப் போவதாக இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.
துறை அதிகாரிகளின் இந்த தன்னிச்சையான அறிவிப்புக்கு அடிமனை பயனாளிகள் மற்றும் உள்ளூர் மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் மற்றும் குத்தகை விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.விஜய் தலைமையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மயிலாடுதுறையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தை நோக்கித் திரண்டனர்.
திடீரென அலுவலக வளாகத்திற்குள் நுழைந்த நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள், அலுவலகத்தின் முக்கிய நுழைவாயிலை முற்றுகையிட்டு அங்கேயே அமர்ந்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அரசுப் பணிகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டன.போராட்டத்தின் போது, அறநிலையத்துறையின் இந்த மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்தும், புனுகீஸ்வரர் கோயில் கணக்கர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறி அவரை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தியும் போராட்டக் குழுவினர் தொடர் முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டத்தின் போது பேசிய சங்க நிர்வாகிகள், இந்தச் சொத்துகளின் உண்மையான உரிமையாளர்களான சமுதாய மக்கள் தங்களுக்கு வாடகை வேண்டாம் என்று தெளிவாகக் கூறும் நிலையிலும், கோயில் கணக்கர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் தங்களின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி கட்டாயமாக வாடகை வசூலில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டினர்.
அலுவலக வேலை நேரத்தில் இந்த முற்றுகைப் போராட்டம் நடைபெற்றதால், சம்பவ இடத்திற்கு மயிலாடுதுறை வட்டாட்சியர் சுகுமாறன் மற்றும் காவல் துறையினர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர்.இருப்பினும், அதிகாரிகளின் விளக்கத்தை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள் தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால், காலையில் தொடங்கிய இந்த முற்றுகைப் போராட்டம் மதியம் 2.30 மணிக்கும் மேலாகத் தொடர்ந்து நீடித்தது.
இப்போராட்டம் குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் துரைராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் மக்களின் வீடுகள் மற்றும் கடைகளை சீல் வைக்க முயற்சிப்பது முற்றிலும் சட்டவிரோதமான செயலாகும் என்று சாடினார்.மேலும், தற்போதைய ஆட்சி நிர்வாகத்திற்குப் பொதுமக்களிடம் கெட்ட பெயரை உருவாக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடுதான் அறநிலையத்துறை அதிகாரிகள் தொடர்ந்து இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
அநியாயமான முறையில் செயல்பட்டு வரும் இந்து சமய அறநிலையத்துறையின் இந்த அராஜகப் போக்கை மாவட்ட நிர்வாகமும், மாநில அரசும் உடனடியாகக் தலையிட்டுக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் மயிலாடுதுறை பகுதியில் தொடர்ச்சியான சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகள் உருவாகும் என்றும், அதற்கு முழுமையாக இந்தத் துறை அதிகாரிகள் மட்டுமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் துரைராஜ் எச்சரித்தார்.








