சென்னை ,ஜூன் 16 : தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்னும் இரண்டு நாட்களில் தொடங்க உள்ள நிலையில் ,சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் இன்று நிதித்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்பட உள்ள முதல் முழு நீள பட்ஜெட் என்பதால் ,இந்த சந்திப்பு அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

வருகின்ற ஜூன் 18ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் முறைப்படி தொடங்குகிறது.ஆளுநர் உரையைத் தொடர்ந்து 2026-27ஆம் நிதியாண்டிற்கான முழுமையான நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு முதன்முறையாக பேரவையில் தாக்கல் செய்ய உள்ளது.இதற்கான ஆரம்பகட்டப் பணிகள் மற்றும் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்களை இறுதி செய்வதற்காகவே இன்றைய உயர் மட்டக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
also : நீட் மறுத்தேர்வு: நெல்லையில் ஹெலிகாப்டர் மூலம் வினாத்தாள் கொண்டுவர ஒத்திகை
தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு முதலமைச்சர் விஜய் தலைமை தாங்குகிறார்.இதில் நிதித்துறை அமைச்சர் ,தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ,நிதித்துறைச் செயலாளர் மற்றும் முதலமைச்சரின் தனிச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.நடப்பு நிதியாண்டில் தமிழகத்தின் நிதி நிலைமை எவ்வாறாக இருக்கிறது என்பது குறித்தும் ,வருவாயைப் பெருக்குவதற்கும் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கின்றனர்.
பொதுமக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை தங்கு தடையின்றி செயல்படுத்துவது ,அதற்குத் தேவையான நிதியை எவ்வாறு திரட்டுவது மற்றும் துறை வாரியாக ஒதுக்கப்பட வேண்டிய நிதிப் பங்கீடு குறித்தும் முதலமைச்சர் இந்த கூட்டத்தில் ஆலோசித்து வருகிறார்.குறிப்பாக ,கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மக்களுக்குப் பல்வேறு அதிரடி வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன.
பெண்களுக்கு மாதந்தோறும் 2,500 ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் ,குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு ஆறு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் அன்னபூரணி திட்டம் மற்றும் ஏழைப் பெண்களுக்குத் திருமண நிதியுதவியாக தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகள் இதில் முதன்மையானவை ஆகும்.தங்களது முதல் பட்ஜெட்டிலேயே இந்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் ,அதற்கான நிதித் தேவை மற்றும் அதனால் ஏற்படும் சாதக பாதகங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுடன் விரிவாக விவாதித்து வருகிறார்.
அதேவேளையில் ,கடந்த ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் தொய்வின்றி இந்த ஆட்சியிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.எனவே ,முந்தைய அரசின் திட்டங்களைத் தொய்வின்றித் தொடர்வதற்குக் காலாண்டு வாரியாக ஒதுக்கப்பட வேண்டிய நிதிப் பகிர்வு குறித்தும் ,புதிய திட்டங்களை அறிவிக்கும்போது நிதிச் சுமை ஏற்படாமல் நிர்வாகத்தைச் சீரமைப்பது குறித்தும் இன்றைய கூட்டத்தில் இறுதி முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான தொலைநோக்குப் பார்வைகளுடன் ,2026-27ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அனைத்து முக்கிய அறிவிப்புகளும் இந்த ஆலோசனையின் அடிப்படையில் இறுதி வடிவம் பெற உள்ளன.








