வேலூர் , ஜூன் 13: வேலூர் கோட்டை பூங்காவில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சீருடையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித் திரிந்த உமா மகேஸ்வரி என்ற 33 வயது பெண்ணை வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். தனது காதலனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக போலியாக போலீஸ் வேடமிட்டு வந்தபோது அவர் காவல்துறையிடம் சிக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த உமா மகேஸ்வரிக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த சூழலில் அவருக்கும் லாரி ஓட்டுநர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது. புதன்கிழமையன்று தனது காதலனின் பிறந்தநாளை வித்யாசமான முறையில் கொண்டாடி அவரை மகிழ்விக்க உமா மகேஸ்வரி திட்டமிட்டுள்ளார். இதற்காகத் தையல் காரரிடம் கொடுத்து டிஎஸ்பி பதவிக்கான அதிகாரப்பூர்வ போலீஸ் சீருடையைத் தைத்துப் பெற்றுள்ளார்.
Also : பெப்பர் ஸ்பிரே அடித்து நகைக்கடையில் கொள்ளை முயற்சி.. இளம் பெண்களை லாக் செய்த ஓனர்!
திட்டமிட்டபடி புதன்கிழமை மாலை வேலூர் மாநகரின் முக்கிய சுற்றுலாத் தலமான கோட்டை பூங்காவிற்கு உமா மகேஸ்வரி டிஎஸ்பி சீருடையில் வந்துள்ளார். காலை முதல் இரவு வரை பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் கூடும் அந்தப் பூங்காவில் அவர் காவல்துறை உயர் அதிகாரி போன்ற மிடுக்கான தோரணையில் அங்குமிங்கும் உலா வந்துள்ளார். அப்போது அந்தப் பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் சீருடையில் இருந்த உமா மகேஸ்வரியைப் பார்த்து உயர் அதிகாரி என எண்ணி மரியாதை நிமித்தமாகச் சல்யூட் அடித்துள்ளனர்.
அதற்கு அவரும் வணக்கம் தெரிவித்துள்ளார். எனினும் உமா மகேஸ்வரியின் தோற்றத்திலும் செயல்பாட்டிலும் போலீசாருக்கு லேசான சந்தேகம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அவர் காவல்துறை அதிகாரிகள் அணியும் முறையான காலணிகளுக்குப் பதிலாக காலுறைகளுடன் (சாக்ஸ்) சாதாரண செருப்பு அணிந்திருந்ததை ரோந்து போலீசார் கவனித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி விசாரித்தபோது அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறியுள்ளார்.
விஷயம் எல்லை மீறுவதைப் புரிந்துகொண்ட ரோந்து போலீசார் உடனடியாக வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ஜெயலட்சுமிக்குத் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆய்வாளர் ஜெயலட்சுமி அந்தப் பெண்ணிடம் விரிவான விசாரணை நடத்தினார். அப்போது தன்னைச் சென்னை குற்றப்பிரிவு டிஎஸ்பி என்று உமா மகேஸ்வரி அறிமுகப்படுத்தியுள்ளார். ஆனால் ஆய்வாளர் கேட்ட அடுத்தடுத்த தொழில்முறை கேள்விகளுக்கு அவரிடம் முறையான பதில்கள் இல்லை. மேலும் தனது காதலனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக இங்கு வந்ததாகக் கூறியுள்ளார்.
இதையடுத்து உமா மகேஸ்வரியைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார் என்பதும் சென்னைக்கு வீட்டு வேலைக்குச் சென்ற இடத்தில் பணத்தையும் நகையையும் திருடிய வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுச் சிறைக்குச் சென்றவர் என்பதும் தெரியவந்தது. அதுமட்டுமின்றி சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்றபோதும் அங்கிருந்த பொருட்களைத் திருடியதாக வடபழனி மற்றும் பூக்கடை காவல் நிலையங்களில் அவர் மீது வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் அம்பலமானது.
பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காகச் சென்னைக்கு லாரி ஓட்டச் சென்றிருந்த உமா மகேஸ்வரியின் காதலன் வேலூர் வருவதற்குத் தாமதமானதால் அந்த இடைவெளியில் உமா மகேஸ்வரி போலீசாரிடம் மாட்டிக்கொண்டார். காதலனைத் தொடர்புகொண்டு பேசியபோதும் பிறந்தநாள் கேக் வெட்டுவதற்காகத் தான் வேலூர் வந்துகொண்டிருப்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அரசு அதிகாரியின் சீருடையைப் போலியாகப் பயன்படுத்திய குற்றத்திற்காக உமா மகேஸ்வரி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர். மேலும் இந்த டிஎஸ்பி சீருடையைப் பயன்படுத்திப் பூங்காவிற்கு வந்த பொதுமக்களிடமோ அல்லது வேறு நபர்களிடமோ அவர் அச்சுறுத்திப் பணம் பறிப்பில் ஈடுபட்டாரா அல்லது அபராதம் என்ற பெயரில் வசூல் செய்தாரா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.








