தமிழகத்தில் போதைப்பொருளுக்கு எதிராக அதிரடி! 65 சிறப்பு காவல் நிலையங்கள் விரைவில் தொடக்கம் ! முதல்வர் விஜய் விரைவில் அறிவிப்பு

சென்னை , ஜூன் 12 : தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், மாநிலம் முழுவதும் 65 பிரத்யேக காவல் நிலையங்களுடன் கூடிய புதிய சிறப்புப் பிரிவை அமைக்க தமிழக அரசு தீவிர ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. அண்டை மாநில எல்லைகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் வழியாக நடக்கும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் வகையில் இந்த புதிய அமைப்பிற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் விஜய் விரைவில் வெளியிட உள்ளார்.

Tamil Nadu Cracks Down on Drugs: 65 Special Police Stations to Be Launched Soon, CM Vijay Expected to Make Major Announcement

தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா ஆகியவற்றின் எல்லைகளில் உள்ள தீவிர போலீஸ் பாதுகாப்பையும் மீறி ரயில்கள் மற்றும் பேருந்துகள் மூலமாக தமிழகத்திற்குள் போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவது தொடர்கதையாக உள்ளது. கடத்தலில் ஈடுபடும் நபர்களைப் போலீஸார் தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைத்து வந்தாலும் புதிய நபர்களின் ஊடுருவலும் விற்பனை உத்திகளும் சவாலாகவே நீடிக்கின்றன.

தற்போது போதைப்பொருள் விற்பனையாளர்கள் டிஜிட்டல் தளங்களை நோக்கித் தங்களின் உத்திகளை மாற்றியுள்ளனர். மொபைல் போன் டிராக்கிங், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் மூலமாகவே தற்போதைய போதைப்பொருள் நெட்வொர்க் இயங்கி வருகிறது. தொழில்நுட்ப உதவியுடன் ஆன்லைன் மூலம் தமிழகத்திற்குள் போதைப்பொருட்கள் ஊடுருவுவதை முற்றிலும் தடுப்பதே இந்த புதிய சிறப்புப் பிரிவின் முதன்மைப் பணியாக இருக்கும்.

இந்த புதிய திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்காக மட்டுமே 65 பிரத்யேக காவல் நிலையங்கள் உருவாக்கப்பட உள்ளன. இதில் சென்னை மண்டலத்தில் மட்டும் 12 பிரத்யேக காவல் நிலையங்கள் செயல்படத் தொடங்கும். தற்போது நடைமுறையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு (NIB-CID) போலீஸார் குறிப்பிட்ட எல்லைகளில் போதைப்பொருட்களுடன் பிடிபடும் நபர்களைப் பிடித்து, அந்தந்தப் பகுதி சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்களில் ஒப்படைப்பது மட்டுமே வழக்கமாக உள்ளது. ஆனால் இனி அமைய உள்ள புதிய சிறப்புப் பிரிவுக்கு முழுமையான சட்ட அதிகாரங்கள் வழங்கப்பட உள்ளன.

Also : 60 மாதம் மிக மோசமாக ஆட்சி செய்த திமுகவிற்கு 50 நாட்கள் கூட பொறுமையில்லை: அனந்தஜித் அதிரடி!!

புதிய திட்டத்தின்படி இந்த சிறப்புப் பிரிவு போலீஸாரே நேரடியாக வழக்குகளைப் பதிவு செய்து குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கான முழு அதிகாரங்களையும் கொண்டிருப்பார்கள். முதற்கட்டமாகப் பிடிபடும் நபர்களிடம் இருந்து பெறப்படும் விவரங்களின் அடிப்படையில் அவர்கள் யாரிடமிருந்து போதைப்பொருட்களை வாங்குகிறார்கள், அதன் பின்னணியில் உள்ள மொத்த விநியோகஸ்தர்கள் யார் போன்ற விபரங்கள் சேகரிக்கப்படும். இதன் மூலம் போதைப்பொருள் கடத்தலின் ஒட்டுமொத்த நெட்வொர்க் மற்றும் மாஃபியா கும்பலை வேரோடு கண்டறிந்து கைது செய்வதே இந்த புதிய போலீஸ் பிரிவின் இலக்காகும்.

சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு செயல்பட வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் தன்னிடம் பொறுப்பேற்றவுடன் அறிவுறுத்தியதாகக் குறிப்பிட்டிருந்தார். போதைப்பொருட்களை ஒழிக்க அரசு முழு வீச்சில் செயல்படும் என்றும் அவர் உறுதியளித்திருந்தார்.

தமிழகத்தில் அண்மையில் பெண்களின் பாதுகாப்பிற்காக ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை தொடங்கப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்குப் போதைப்பொருள் புழக்கமே மிக முக்கிய மூலக்காரணமாகப் பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த புதிய போதைப்பொருள் தடுப்பு காவல் நிலையங்கள் மற்றும் சிறப்புப் பிரிவுக்கான திட்டத்தை முதலமைச்சர் விஜய் முறைப்படி வெகுவிரைவில் தொடங்கி வைக்க உள்ளார்.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1213

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »