திருவண்ணாமலை , ஜூன் 12 : வட மாவட்டங்களில் நிலவும் போதைப்பொருள் புழக்கம், கள்ளச்சாராயம், சிறுமி திருமணங்கள் உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு உட்கட்டமைப்பு மற்றும் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான போர்க்கால நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் நடைபெற்ற முக்கிய ஆய்வுக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இத்தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். வறுமை, போதைப்பழக்கம், வேலைவாய்ப்பின்மை மற்றும் பொருளாதார பின்தங்கிய நிலை உள்ள பகுதிகளைக் கண்டறிந்து அங்கு நிர்வாக ரீதியான மாற்றங்களைச் செய்வதே இந்த ஆய்வின் முதன்மை நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார். ஒட்டுமொத்த வட மாவட்டங்களின் பிரச்சினைகளையும் தீர்க்கும் ஒரு முக்கிய மையமாக அதன் தலைநகராக விளங்கும் திருவண்ணாமலைக்கு சிறப்புப் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
கடந்த வாரம் கள்ளக்குறிச்சி மற்றும் கல்வராயன்மலை போன்ற பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்போது 13 மற்றும் 14 வயதுகளிலேயே பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைக்கப்படும் அவலமும் குழந்தை தொழிலாளர் முறையும் அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையை மாற்றி வட மாவட்டங்களில் உள்ள பெண் குழந்தைகளை உயர்கல்வி மற்றும் தொழில்முறை படிப்புகளை நோக்கி (Professional Education) கொண்டு செல்வதே இந்த அரசின் மிக முக்கிய தொலைநோக்குப் பார்வை (Vision) ஆகும்.
Also read : அன்று எம்ஜிஆர்.. இன்று முதல்வர் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவில் ஸ்பெஷல் என்ன?
திருவண்ணாமலை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கம், கள்ளச்சாராய விற்பனை ஆகியவை மிகத்தீவிரமான சவாலாக உருவெடுத்துள்ளன. இதனை ஒடுக்கக் காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. எந்தவிதமான அரசியல் அழுத்தங்களுக்கும் இடமளிக்காமல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்களை எவ்வித தட்சிண்யமும் இன்றி உடனடியாகக் கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அண்டை மாநில மற்றும் மாவட்ட எல்லைகளைக் கண்காணித்து மூடுவதன் மூலம் கள்ளச்சாராயப் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் பிறப்பு விகிதம் குறைந்து வரும் வேளையில் வட மாவட்டங்களில் பிறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. இதனை அரசு முக்கியத்துவத்துடன் அணுகுகிறது. திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தபோது மகப்பேறு பிரிவுகளில் போதிய இடவசதிகளும், சிறப்புப் பிரிவுகளும் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. எனவே தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்காகத் தனியாக ஒரு பிரத்யேக குழந்தைகள் நல மருத்துவமனையை (Child Specialist Hospital) உருவாக்கவும் தற்போதைய மருத்துவக் கல்லூரியின் தரத்தை மேம்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் விளையாட்டு உள்கட்டமைப்புகள் கடந்த 40 ஆண்டுகளாக எந்தவித புதுப்பித்தலும் இன்றி மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன. விளையாட்டு மைதானங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களை (Gym) நவீன காலத்திற்கு ஏற்ப உடனடியாக மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்படவுள்ளன. நெடுஞ்சாலைத் துறையைப் பொறுத்தவரை அதிக விபத்துகள் நடக்கும் பகுதிகள் (Black Spots) கண்டறியப்பட்டு விபத்துகளைக் குறைப்பதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வார இறுதி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். ஆனால் இன்றும் நகரைச் சுற்றியுள்ள சாலைகள் இருவழிக் பாதைகளாகவே (Two Lane) நீடிக்கின்றன. இதனால் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க இந்தச் சாலைகள் அனைத்தும் உடனடியாக நான்கு வழிப் பாதைகளாக (Four Lane) மாற்றப்படும்.
கோயிலுக்குள் வரும் சாமானிய மக்கள் எவ்வித விஐபி (VIP) கார் குறுக்கீடுகளும் இன்றி சமத்துவமான முறையில், மிக விரைவாகச் சென்று வழிபடுவதற்கான ஒரு தனித்துவமான வழிபாட்டுத் திட்டம் (Separate Plan) வகுக்கப்பட்டு வருகிறது. இதனுடன் உள்ளூர் மக்களின் கல்வித் தேவைகளுக்காகச் சென்னைக்குச் சென்று படிக்க வேண்டிய அவசியமில்லாமல், இங்கேயே தரமான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உருவாக்கப்படும். அனைத்து மத வழிபாட்டுத் தலங்களின் தேவைகளும் கேட்டறியப்பட்டு, ஒட்டுமொத்த மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கு மற்றும் வளர்ச்சிக்கான திட்டங்கள் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.








