திருநெல்வேலி , ஜூன் 12: நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் உத்தரவை நீண்ட நாட்களாக நிறைவேற்றத் தவறிய யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் டிவிஷனல் மேனேஜருக்கு (கோட்ட மேலாளர்) எதிராக திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் இன்று பிடிவாரண்ட் பிறப்பித்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கின் பின்னணி விபரம் வருமாறு. திருநெல்வேலியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியை மரிய தேன்மொழி என்பவர் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் உரிய காப்பீடு செய்திருந்தார். தனக்கு கிடைக்க வேண்டிய காப்பீட்டுத் தொகையை கோரி அவர் இன்சூரன்ஸ் நிறுவனத்தை அணுகியபோது காப்பீட்டுத் தொகை வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மரிய தேன்மொழி தனக்குரிய காப்பீட்டுத் தொகையை பெற்றுத்தரக் கோரி திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் காப்பீட்டு நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் போலி சிபிஐ அதிகாரி கைது : அடையாள அட்டைகளை கண்டு அதிர்ந்த காவலர்கள்!
இந்த மனுவை விரிவாக விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணையம் ஓய்வுபெற்ற ஆசிரியை மரிய தேன்மொழிக்கு கிடைக்க வேண்டிய காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு ஏற்கனவே அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் ஆணையம் உத்தரவிட்ட பிறகும் இன்சூரன்ஸ் நிறுவனம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அந்த உத்தரவை செயல்படுத்த முன்வரவில்லை என்று தெரிகிறது. காப்பீட்டுத் தொகை வழங்கப்படாமல் தொடர்ந்து காலம் கடத்தப்பட்டு வந்தது.
நீதிமன்ற அந்தஸ்து கொண்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் உத்தரவை காப்பீட்டு நிறுவனம் திட்டமிட்டு நிறைவேற்றத் தவறியதை அடுத்து இந்த விவகாரம் மீண்டும் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. உத்தரவை மதிக்காமல் செயல்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்த நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவை நிறைவேற்றாத யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் டிவிஷனல் மேனேஜருக்கு எதிராக இன்று பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.








