Delhi , June 11 : நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான எச்டிஎஃப்சி (HDFC) வங்கியில், வாடிக்கையாளர்களின் வைப்புத்தொகை முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டு, போலி இன்வாய்ஸ்கள் மூலம் பல கோடி ரூபாய் நிதி திசைதிருப்பப்பட்டுள்ளதாக வங்கியின் உள் விழிப்புணர்வுத் துறை நடத்திய தணிக்கையில் தெரியவந்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறி, குறிப்பிட்ட ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு கூடுதல் வட்டி தருவதற்காக, ‘மார்க்கெட்டிங் செலவு’ என்ற பெயரில் 45 கோடி ரூபாய் கணக்கு காட்டப்பட்டு, இந்த முறைகேடு அரங்கேறியுள்ளதாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் வெளியிட்டுள்ள புலனாய்வுச் செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் ராஜினாமாவும் பின்னணியும்
சில மாதங்களுக்கு முன்பு, எச்டிஎஃப்சி வங்கியின் Independent Director அதுனு சக்ரவர்த்தி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். 1985 பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான அவர், தனது ராஜினாமா கடிதத்தில், “வங்கியின் தற்போதைய சில செயல்பாடுகள் எனது நெறிமுறைகளுக்கு உட்பட்டு அமையவில்லை” என்று மிகச் சுருக்கமாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, வங்கியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த சில நடைமுறைகள் குறித்து உள் விழிப்புணர்வுத் துறை விரிவான விசாரணையைத் தொடங்கியது. அதன் முடிவில் தயாரான, வங்கியின் நிர்வாகக் குழுவால் இன்னும் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படாத அந்த தணிக்கை அறிக்கைதான் தற்போது கசிந்துள்ளது.

25,000 கோடி கணக்கிற்காக மீறப்பட்ட ரிசர்வ் வங்கி விதிமுறை
வங்கிகளில் வாடிக்கையாளர்கள் வைக்கும் டெபாசிட்களுக்கு, ஒரே மாதிரியான வட்டி விகிதத்தைத்தான் வழங்க வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் கட்டாய விதியாகும். குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வட்டி விகிதத்தை வங்கியின் விருப்பப்படி மாற்றி வழங்க சட்டத்தில் இடமில்லை. அவ்வாறு அனுமதித்தால், வங்கிகள் தங்களுக்குச் சாதகமான பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் கூடுதல் பலன்களை வழங்கி, சாதாரண வாடிக்கையாளர்களை வஞ்சிக்கத் தொடங்கிவிடும்.
ஆனால், மகாராஷ்டிர மாநில சாலை மேம்பாட்டுக் கழகம் என்ற மிகப்பெரிய அரசு நிறுவனம், சுமார் 25,000 கோடி ரூபாய் மதிப்பிலான கணக்கைத் தொடங்க எச்டிஎஃப்சி வங்கியை அணுகியது. இந்த மிகப்பெரிய வர்த்தகத்தைப் பிடிக்க நினைத்த வங்கி நிர்வாகத்திற்கு, MSRDC விதித்த நிபந்தனைதான் சிக்கலை ஏற்படுத்தியது. தங்களுக்கு 6.01 சதவீத வட்டி வேண்டும் என்று அந்நிறுவனம் கோரியது.
அச்சமயத்தில் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி 3.5 சதவீதத்திற்கு மேல் வட்டி வழங்க முடியாத சூழல் இருந்தது. இதனால், வங்கியின் விதிகளைத் தளர்த்தி அதிகாரப்பூர்வமாக 4.5 சதவீதமாக வட்டியை உயர்த்திய நிர்வாகம், மீதமுள்ள வட்டித் தொகையைத் தருவதற்காக ஒரு மாற்று வழியைக் கையாண்டது.
சாலைப் பாதுகாப்பு விளம்பரம் என்ற பெயரில் ‘கேமப்ளாஜ்’ (Camouflage)
MSRDC நிறுவனத்திற்குத் தர வேண்டிய மீதத் தொகையான 45 கோடி ரூபாயை, வங்கியின் மார்க்கெட்டிங் பட்ஜெட்டில் இருந்து வழங்க எச்டிஎஃப்சி முடிவு செய்தது. இதற்காக, MSRDC நிறுவனம் நடத்திய சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரத்திற்கு எச்டிஎஃப்சி வங்கி ஸ்பான்சர் செய்ததாக கணக்குக் காட்டப்பட்டது.
Also : மோடி ஆட்சியின் மல்டிபேக்கர் பங்குகள் : ₹1 லட்சம் முதலீடு ₹2 கோடியாக மாறியதா? 206X லாபம்!
உண்மையில் அப்படி ஒரு பிரச்சாரமே நடக்கவில்லை என்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதற்காகப் பயன்படுத்தப்பட்ட இன்வாய்ஸ்கள் அனைத்தும் போலி -Fake Invoices என்பதும், இரண்டு நிதியாண்டுகளில் வழங்கப்பட்ட 45 கோடி ரூபாய் மதிப்பிலான பில்களில், 9 கோடி ரூபாய் மதிப்பிலான இன்வாய்ஸ்கள் ஒரே புகைப்படத்தையும், ஒரே ஆவணங்களையும் கொண்டு ‘காப்பி பேஸ்ட்’ செய்யப்பட்டு போலியாகத் தயாரிக்கப்பட்டவை என்பதும் தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வங்கி நிர்வாகம் இதனை ‘கேமப்ளாஜ்’ (Camouflage) அதாவது ‘மறைப்புச் செயல்’ என்ற நாகரீகமான ஆங்கில வார்த்தையால் குறிப்பிட்டாலும், எளிய மக்களின் பார்வையில் இது பொதுப் பணத்தைக் கையாடல் செய்த ஒரு மோசடியே என்று சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கார்ப்பரேட் கவர்னன்ஸ் தோல்வி
முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான பிஸ்வஜித் பட்டாச்சார்யா மற்றும் மூத்த வங்கி நிபுணர் நாசிர் சலீம் ஆகியோர் இந்த விவகாரம் குறித்து கடுமையான கவலைகளைப் பகிர்ந்துள்ளனர்.
நாட்டின் நடப்பு நிதியாண்டுக்கான பெயரளவு ஜிடிபி மதிப்பை விட, இந்தியாவின் ஒட்டுமொத்த வங்கி வர்த்தக மதிப்பு மிக அதிகம். இதில் முதன்மைத் தனியார் வங்கியான எச்டிஎஃப்சி வங்கியின் மீதான இத்தகைய குற்றச்சாட்டு, நாட்டின் பொருளாதார கட்டமைப்பின் மீதான நம்பிக்கையை உலுக்கியுள்ளது.
வங்கி நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த விவகாரம் நான்கு முக்கியத் தவறுகளை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது:
- ரிசர்வ் வங்கி விதிமீறல்: வட்டி விகிதக் கட்டுப்பாட்டை ஏமாற்ற குறுக்கு வழியைக் கையாண்டது.
- வெளிப்படைத்தன்மை இன்மை: வட்டிப் பணத்தை விளம்பரச் செலவு என்று கணக்குக் காட்டி, நிதிநிலை அறிக்கையைத் தவறாகச் சித்தரித்தது. இது செபி (SEBI) அமைப்பின் விதிமுறைகளையும் மீறுவதாகும்.
- நிர்வாகக் குழுவின் தோல்வி: இத்தகைய சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்திற்கு வங்கியின் சட்டக் குழுவோ அல்லது நிர்வாகக் குழுவோ உரிய தணிக்கையை மேற்கொள்ளவில்லை.
- உள் தணிக்கை முடக்கம் (Internal Control Breakdown): போலி இன்வாய்ஸ்கள் எளிதாகக் கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டதால், வங்கியின் உள் தணிக்கை மதிப்பீடு ‘திருப்தியற்றது’ என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இது பனிப்பாறையின் நுனிதானா?
எச்டிஎஃப்சி வங்கிக்கு நாடு முழுவதும் சுமார் 12 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். நடுத்தர மற்றும் எளிய மக்கள் தங்களின் வாழ்நாள் சேமிப்பை இந்த வங்கியில் நம்பி வைத்துள்ளனர். “தற்போது வெளிவந்துள்ள 45 கோடி ரூபாய் என்பது வெறும் ஆரம்பப் புள்ளிதானா? முறையான விசாரணை நடத்தப்பட்டால் இந்த முறைகேட்டின் மதிப்பு 400 கோடியாகவோ அல்லது 1000 கோடியாகவோ நீளுமா?”என்ற கேள்வியை ஊடகங்கள் எழுப்பியுள்ளன.
இந்த அறிக்கை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டால், வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் பதவிகளுக்கே ஆபத்து ஏற்படலாம். தற்போதைய சூழலில், எச்டிஎஃப்சி வங்கியின் நிதிநிலை மற்றும் மூலதன வலிமை (Financial Strength) மிகவும் வலுவாகவே உள்ளது. வாடிக்கையாளர்களின் பணத்திற்கோ அல்லது வங்கியின் பணப் புழக்கத்திற்கோ (Liquidity) உடனடி ஆபத்து எதுவும் இல்லை. ஆனால், வங்கியின் மீதான நம்பகத்தன்மையும், கார்ப்பரேட் நிர்வாக ஒழுங்கும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பட்டியலிடப்பட்ட நிறுவனமான எச்டிஎஃப்சியின் பங்குகள் சந்தை குறியீட்டில் முக்கியப் பங்கு வகிப்பதால், கோடிக்கணக்கான முதலீட்டாளர்களின் பணமும் இதில் அடங்கியுள்ளது. எனவே, ரிசர்வ் வங்கியும், எச்டிஎஃப்சி வங்கி நிர்வாகமும் இந்த விவகாரத்தில் மௌனம் காக்காமல், முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் உண்மையை மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்பதே தற்போதைய கோரிக்கையாக உள்ளது.








