நெல்லை , ஜூன் 10 : நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் நடைபெறவிருந்த இளம் வழக்கறிஞர் வீட்டைச் சுத்தம் செய்தபோது காம்பவுண்ட் சுவரில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராதாபுரம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தவர் தீபிகா (23). கூடங்குளம் பகுதியைச் சேர்ந்த இவருக்கு இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் நடைபெறவிருந்தது. இதனால் இவர்களது குடும்பத்தினர் திருமணத்திற்கான முன்னேற்பாடுகளைத் தீவிரமாகச் செய்து வந்தனர். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகையால் வீடே சுபநிகழ்ச்சிக்குத் தயாராகி வந்த சூழலில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இன்று காலை தீபிகா தனது வீட்டைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டின் காம்பவுண்ட் சுவரில் இருந்து அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்குத் தலை மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
ஓட்டுநருக்கு ரூ.3.5 லட்சம் வட்டி: அதிகாரிகள் சம்பளத்தில் பிடிக்க கோர்ட் உத்தரவு
அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் தீபிகாவை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி தீபிகா பரிதாபமாக உயிரிழந்தார்.
மகிழ்ச்சியான திருமணக் கொண்டாட்டங்களுக்குத் தயாராகி வந்த வீட்டில் நேர்ந்த இந்த எதிர்பாராத விபத்து மற்றும் உயிரிழப்பு கூடங்குளம் மற்றும் ராதாபுரம் நீதிமன்ற வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து கூடங்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







