தமிழ்நாடு சிங்கப்பெண் அதிரடிப்படை: முதல் திருநங்கையாகக் களமிறங்கும் காவலர் தீபிகா காமராஜ் நெகிழ்ச்சிப் பேட்டி

சென்னை, ஜூன் 9: தமிழக காவல்துறையின் வரலாற்றிலும், திருநங்கைகளின் சமூகப் போராட்டப் பயணத்திலும் ஒரு புதிய மைல்கல்லாக மாநில அரசின் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ பிரிவில் முதல் திருநங்கையாகக் காவலர் தீபிகா காமராஜ் இணைந்துள்ளார்.

image 122

கடந்த 2022-ஆம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்த இவர் தற்போது சென்னை சேத்துப்பட்டு (G7) சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் தமிழக முதலமைச்சரின் நேரடிப் பார்வையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’யில் தீபிகா காமராஜ் தகுதி பெற்றுள்ளார். இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள சுமார் 600 பெண் காவலர்களில் ஒரே ஒரு திருநங்கையாகத் தான் இணைந்திருப்பது தமக்குக் கிடைத்த பெருமை என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Also : தமிழகத்தில் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை பணிகள் என்ன?: வெளிவந்த முழு விவரங்கள்

புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள இந்தச் சிறப்புப் பணி குறித்துப் பேசிய காவலர் தீபிகா காமராஜ் “600 பெண்கள் இருக்கும் ஒரு படையில் முதல் திருநங்கையாக என்னைச் சேர்த்திருப்பது உண்மையிலேயே பெருமையளிக்கிறது. எங்களுக்கு இப்படி ஒரு அரிய வாய்ப்பை வழங்கிய காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும், ஐ.ஜி புவனேஸ்வரி ஐ.பி.எஸ் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதே இந்தச் சிறப்புப் படையின் முதன்மை நோக்கம். இதில் என்னைப் போன்றவர்களின் பங்களிப்பு நிச்சயம் அதிகமாக இருக்கும். களத்தில் உள்ள பெண்களையும் குழந்தைகளையும் என் சொந்த அம்மா, அக்கா, தங்கையாகக் கருதி, இந்தச் சமூகத்திற்கு என்னால் இயன்ற கடமைகளை முழுமையாகச் செய்வேன்” என்று உறுதியளித்தார்.

சமூக ஊடகங்கள் மற்றும் அன்றாட நிகழ்வுகளில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட பல்வேறு அத்துமீறல்களைத் தாம் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், அத்தகைய குற்றங்களைத் தடுப்பதே இந்தப் படையின் பிரதான இலக்கு என்றார். இதற்கென வழங்கப்பட்ட சிறப்புப் பயிற்சிகள் குறித்துப் பேசுகையில், “காவல்துறை சார்பில் எங்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சிகளில் நடைமுறை ரீதியாகவும் (Practical), கோட்பாடு ரீதியாகவும் (Theory) பல முக்கியக் குற்றத்தடுப்பு வழிமுறைகளைக் கற்றுத் தந்துள்ளனர். அவற்றை நான் முறையாகக் குறிப்பெடுத்து வைத்துள்ளேன். அந்தப் பயிற்சியின் துணையோடு, தமிழகப் பெண்களுக்குத் தேவையான முழுமையான பாதுகாப்பை என்னால் வழங்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று தீபிகா காமராஜ் கூறினார்.

இத்திட்டத்தின் தொடக்க விழாவில் தமிழக முதலமைச்சர் நேரடியாகப் பங்கேற்ற நிகழ்வு குறித்தும், தமக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்தும் அவர் பகிர்ந்து கொண்டார். முதலமைச்சரை மிக அருகில் சந்திக்கும் வாய்ப்பு அமையவில்லை என்ற சிறிய வருத்தம் இருந்தாலும், அதிகாரிகள் தம்மைக் நடத்திய விதம் பெரும் மகிழ்ச்சியளித்ததாகக் குறிப்பிட்டார். “அங்கு கூடியிருந்த 600 பெண் காவலர்களுடன் நானும் ஒரு பெண்ணாகவே அமர வைக்கப்பட்டிருந்தேன். என்னை ஒரு திருநங்கையாகத் தனியாகப் பிரித்துக் காட்டாமல், சக பெண் காவலராகவே எனது உயர் அதிகாரிகள் நடத்தினார்கள். அந்தச் சமத்துவமான அணுகுமுறை எனக்கு மிகப்பெரிய சந்தோஷத்தையும், இந்தத் துறையின் மீது கூடுதல் மரியாதையையும் ஏற்படுத்தியுள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.

தமது இந்த வளர்ச்சிக்குத் தொடக்கப்புள்ளியாக இருந்த கீழ்ப்பாக்கம் உதவி ஆணையர் (AC) மணிமேகலை மற்றும் சென்னை காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும், முதலமைச்சருக்கும் தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறிய தீபிகா காமராஜ், இப்புதிய பொறுப்பின் மூலம் சமூக மாற்றத்திற்கானப் பணியில் முழு வீச்சில் ஈடுபட ஆயத்தமாகி வருகிறார்.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1179

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »