நெல்லை சரக டிஐஜியாக திருநாவுக்கரசு பொறுப்பேற்பு: 6 முக்கிய இலக்குகள் அறிவிப்பு

நெல்லை, ஜூன் 7 : நெல்லை சரகத்தின் புதிய டி.ஐ.ஜி-யாக (துணை போலீஸ் ஐஜி) திருநாவுக்கரசு இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். முன்னதாக,நெல்லை சரக காவல்துறை அலுவலகத்திற்கு வருகை தந்த அவருக்கு,காவல்துறையினரின் அணிவகுப்பு மாரியாதை அளிக்கப்பட்டது. மாரியாதையை ஏற்றுக்கொண்டு,கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பைத் துவங்கினார்.

Tirunelveli Range Gets New DIG: Thirunavukarasu Assumes Charge, Announces Six Key Priorities

பொறுப்பேற்றதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த டி.ஐ.ஜி திருநாவுக்கரசு,நெல்லை சரகத்தில் சட்டம் – ஒழுங்கைப் பராமரிப்பதற்கும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் ஆறு முக்கிய இலக்குகள் உடனடியாக நிர்ணயிக்கப்பட்டு,அதனடிப்படையில் பணிகள் முடுக்கிவிடப்படும் என்று தெரிவித்தார். நெல்லை சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பிற்கு முதன்மை முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர்,பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு மிகத் தீவிரமாக உறுதி செய்யப்படும் என்றார். இதற்காகப் பிரத்யேக கண்காணிப்புப் பணிகள் மற்றும் ரோந்து நடவடிக்கைகள் பலப்படுத்தப்படும் என்றும் உறுதி அளித்தார்.

தென் மாவட்டங்களில் சமீபகாலமாக சவாலாக உருவெடுத்து வரும் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவது குறித்துப் பேசிய அவர்,நெல்லை சரகத்தில் போதைப்பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலுமாகக் குறைக்கவும்,அதன் விநியோகச் சங்கிலியைக் கண்டறிந்து தீவிரமாகக் கண்காணிக்கவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். குறிப்பாக,பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே சாதிய ரீதியிலான மோதல்கள் ஏற்படுவதைத் தடுக்கும் விதமாக,தொடர் விழிப்புணர்வுத் திட்டங்கள் மற்றும் கவுன்சிலிங் முறைகள் காவல்துறை தரப்பில் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

Also read : தமிழகத்திற்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு ஓரவஞ்சனை: மயிலாடுதுறையில் எம்.பி.ஆர்.சுதா குற்றச்சாட்டு

சமூக வலைதளங்களின் வழியாகத் திட்டமிட்டு பரப்பப்படும் வன்முறைகள் மற்றும் மோதல்கள் குறித்தும் டி.ஐ.ஜி எச்சரித்தார். முகநூல்,வாட்ஸ்அப்,எக்ஸ் (ட்விட்டர்) உள்ளிட்ட தளங்களில் சாதிய அல்லது சமூக மோதல்களைத் தூண்டும் விதமாக வீடியோக்களையோ,பதிவுகளையோ இடுபவர்கள் மீது சட்ட ரீதியாகக் கடுமையான பிரிவுகளின் கீழ் நடவடிக்கை பாயும் என்று அவர் எச்சரித்தார். மேலும்,இப்பகுதிகளில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் குறைப்பதற்கும்,போக்குவரத்து விதிகளை முறைப்படுத்துவதற்கும் தீவிரக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார். நெல்லை சரகத்தின் பிரதான சட்டம் – ஒழுங்குப் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து,இதற்குட்பட்ட நான்கு மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்களுடன் (SP) அவசர ஆலோசனை நடத்தி,அதற்கேற்ப அடுத்தகட்ட நடவடிக்கைகள் உடனடியாகத் திட்டமிடப்படும் என்றும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள டி.ஐ.ஜி திருநாவுக்கரசு,தமிழக காவல்துறையில் மிக நீண்ட மற்றும் அதிரடியான களப் பின்னணியைக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று,கடந்த 1999ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டாக (DYSP) தனது காவல் பணியைத் துவங்கினார். தொடர்ந்து,2004ஆம் ஆண்டில் சந்தனக்கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படையில் (STF) ‘ஆபரேஷன் கக்கூன்’ திட்டத்தில் திறம்படப் பணியாற்றினார். வீரப்பன் என்கவுன்டருக்குப் பின்பு,அவரது சிறப்பான பணிக்காகக் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக (ADSP) பதவி உயர்வு பெற்றார்.

அதன்பின்னர் திண்டுக்கல் மாவட்டத்தில் பணியாற்றிய போது,கொடைக்கானல் மலைப்பகுதியில் பதுங்கியிருந்த நவீன் உள்ளிட்ட நக்சலைட்டுகளை என்கவுன்டர் மூலம் ஒடுக்கிய அதிரடி நடவடிக்கையிலும் இவர் முக்கியப் பங்காற்றினார். 2009ஆம் ஆண்டில் தமிழக காவல்துறையில் ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வுப் பிரிவு (Organized Crime Intelligence Unit) முதன்முறையாகத் தொடங்கப்பட்டபோது,அதன் முதல் போலீஸ் சூப்பிரண்டாக (SP) நியமிக்கப்பட்டு அந்தப் பிரிவின் அடித்தளத்தை உருவாக்கினார்.

கடந்த 2010ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் (IPS) அந்தஸ்தைப் பெற்ற திருநாவுக்கரசு,அதன் பின்னர் தமிழக காவல்துறையின் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் பொறுப்பான பதவிகளை வகித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,மதுரை மற்றும் திருப்பூர் மாநகரங்களின் துணை கமிஷனர்,சென்னை சென்னை மாநகரின் தி.நகர் மற்றும் மயிலாப்பூர் ஆகிய முக்கியப் பிரிவுகளின் துணை ஆணையர்,சட்டம்-ஒழுங்கு பிரிவின் உதவி ஐ.ஜி (Assistant IG),சென்னை நகர நுண்ணறிவுப்பிரிவு (Intelligence) துணை கமிஷனர் மற்றும் தமிழக உளவுப்பிரிவின் பாதுகாப்புப்பிரிவு (Core Cell Security) போலீஸ் சூப்பிரண்டு எனப் பல முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு.

தேனி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர்,கல்வித் தகுதியிலும் சிறந்து விளங்குபவர். பி.எல். (சட்டம்) பட்டம்,எம்.எஸ்சி.,மற்றும் முதுகலை எம்.ஏ. பட்டங்களைப் பெற்றதோடு,தனது முனைவர் பட்டத்தையும் (Ph.D) நிறைவு செய்துள்ளார். காவல்துறையில் ஆற்றிய வீர தீர செயல்களுக்காகப் பல்வேறு உயரிய விருதுகளையும்,ஜனாதிபதியின் காவல் பதக்கத்தையும் பெற்றுள்ள டி.ஐ.ஜி திருநாவுக்கரசு,சிறந்த வாசிப்பாளர் மட்டுமின்றி,காவல்துறை மற்றும் சமூகம் சார்ந்த ஏராளமான புத்தகங்களையும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பரந்த கள அனுபவம்,நெல்லை சரகத்தில் சட்டம் – ஒழுங்கைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1134

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »