சென்னை, ஜூன் 5: தனியார் பள்ளிகள் தங்களின் கல்வி கட்டண விவரங்களை இணையதளத்திலும், பள்ளியின் விளம்பரப் பலகைகளிலும் வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், “கல்வி கட்டணம் என்பது ஒன்றும் கருப்பு பணம் அல்ல, அதை வெளியிடுவதில் என்ன ரகசியம் இருக்க முடியும்?” என்று நீதிபதி காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும், தமிழக அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கல்வி கட்டண விவரங்களை தங்களது பள்ளிகளில் உள்ள விளம்பரப் பலகைகளிலும், இணையதளங்களிலும் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிட வேண்டும் என்று தகவல் ஆணையம் கடந்த மே மாதம் 25-ஆம் தேதி ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்தது. இந்த உத்தரவின் தொடர்ச்சியாக தமிழக தனியார் பள்ளிகள் இயக்குனர் கடந்த ஜூன் 1-ஆம் தேதி அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அவசர சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதில் ஜூன் 5-ஆம் தேதிக்குள் அனைத்து தனியார் பள்ளிகளும் தங்களின் கட்டண விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அரசின் இந்த உத்தரவை எதிர்த்து அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பழனியப்பன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
ALso read : பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்? ராஜினாமாவை ஏற்ற தேசிய தலைமை – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
விசாரணையின் போது தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) என்பது தனியார் கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்தாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே பல தீர்ப்புகளில் தெளிவுபடுத்தியிருப்பதாக வாதாடினார். மேலும் சிபிஎஸ்இ (CBSE) போன்ற மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளைத் தமிழக அரசு கட்டுப்படுத்த முடியாது என்றும் எனவே இந்த உத்தரவு சட்டப்படி செல்லாது என்றும் மனுதாரர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இதற்குத் தமிழக அரசு தரப்பில் கடுமையான ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில் தகவல் ஆணையத்தின் சட்டப்பூர்வ உத்தரவின் அடிப்படையில் தான் இந்த சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் விதிகளின்படி பள்ளிகள் தங்களின் கட்டண விவரங்களைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய கடமை கொண்டுள்ளன என்றும் குறிப்பிட்டார். அத்துடன் இந்த உத்தரவால் ஏதேனும் பாதிப்பு இருந்தால் தனிப்பட்ட பள்ளிகள் தான் நீதிமன்றத்தை நாட முடியுமே தவிர பள்ளிகளின் சங்கம் ஒட்டுமொத்தமாகப் பொதுப் பிரதிநிதித்துவ அடிப்படையில் இந்த வழக்கைத் தொடர சட்ட இடமில்லை என்றும் அரசு தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் விரிவாகக் கேட்ட நீதிபதி தண்டபாணி தனியார் பள்ளிகளின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சில விலக்குகள் அளிக்கப்பட்டிருந்தாலும் பொதுநலன் சார்ந்த விவரங்களை வெளியிட வேண்டும் என்ற பிரிவு அதில் இருப்பதை நீதிபதி சுட்டிக்காட்டினார். கல்வி கட்டண விவரங்களை வெளியிடுவதை எந்த வகையிலும் மறுக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதி “கல்வி கட்டணம் ஒன்றும் கருப்பு பணம் கிடையாது. அது உங்கள் பள்ளியின் கட்டண விகிதம் மட்டுமே. அப்படியிருக்க அதில் மறைப்பதற்கு என்ன ரகசியம் இருக்கிறது? அதை ஏன் வெளிப்படையாக வெளியிடக் கூடாது?” என்று தனியார் பள்ளிகள் தரப்பிற்குக் கேள்வி எழுப்பினார்.
இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய தனியார் பள்ளிகள் சங்கத்தின் கோரிக்கையை முற்றிலுமாக நிராகரித்த நீதிமன்றம் வழக்கில் எந்தவொரு இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்தது. மேலும், இந்த மனு குறித்துத் தமிழக அரசு விரிவான பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜூன் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.








