சென்னை, ஜூன் 3: தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற ஒரு மாத காலத்திற்குள், நிர்வாகப் பணிகளைத் துரிதப்படுத்துவதற்காகவும், மக்கள் நலத்திட்டங்கள் தடையின்றிச் சென்றடைவதைக் கண்காணிப்பதற்காகவும் அனைத்து வருவாய் மாவட்டங்களுக்கும் மாவட்ட பொறுப்பு அமைச்சர்களை நியமித்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.மொத்தம் 34 அமைச்சர்களுக்கு பல்வேறு மாவட்டங்களின் பொறுப்புகள் பரவலாகப் பிரித்து வழங்கப்பட்டு, இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள இந்த அரசு, நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், அடிமட்ட அளவில் மக்கள் குறைகளைக் களையவும் எடுத்து வரும் மிக முக்கியமான தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இம்முடிவு பார்க்கப்படுகிறது.
நியமனத்தின் முக்கிய நோக்கங்கள்
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி, நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் பின்வரும் பணிகளை முதன்மையாக மேற்கொள்வார்கள்:
- திட்டங்கள் கண்காணிப்பு: அரசின் அனைத்துத் துறை சார்ந்த நலத்திட்ட உதவிகளும் பொதுமக்களுக்கு விரைவாகவும், நேரடியாகவும் சென்றடைவதை உறுதி செய்தல்.
- ஒருங்கிணைப்புப் பணிகள்: மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் (ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்) மற்றும் அனைத்துத் துறை சார்ந்த அதிகாரிகளை ஒருங்கிணைத்து வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்துதல்.
- அவசரகால மேலாண்மை: இயற்கைச் சீற்றங்கள், பேரிடர் காலங்கள் மற்றும் நோய்த்தொற்று பரவல் போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் களத்தில் நின்று அவசரகால நிவாரணப் பணிகளை மேற்கொள்வதோடு, தேவையான ஆலோசனைகளை வழங்குதல்.
ஏற்கனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் திட்டப் பணிகளைப் பரிசீலிக்கவும் கண்காணிக்கவும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மட்டத்திலான கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பிரதிநிதிகளான அமைச்சர்களை நேரடியாக இதில் ஈடுபடுத்துவதன் மூலம் நிர்வாகம் மேலும் வலுவடையும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALso read : Tamil Nadu Government Appoints Ministers-in-Charge for 34 Districts; Official Government Order Issued
அமைச்சர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட மாவட்டங்களின் விவரம்
அமைச்சர்களின் சீனியாரிட்டி மற்றும் அவர்கள் போட்டியிட்டு வென்ற தொகுதிகளின் புவியியல் பின்னணியைக் கருத்தில் கொண்டு மாவட்டப் பொறுப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.மூத்த அமைச்சர்கள் சிலருக்கு இரண்டு மாவட்டங்களும், மற்றவர்களுக்கு தலா ஒரு மாவட்டமும் ஒதுக்கப்பட்டுள்ளன.அதன் முழு விவரம் பின்வருமாறு:
- அமைச்சர் ஆனந்த் (ஊரக வளர்ச்சித்துறை): விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள்.(கடலூர், புதுச்சேரி எல்லைப் பகுதி மக்களுக்கு இவருடன் உள்ள பரீட்சயத்தின் அடிப்படையில் இப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது).
- அமைச்சர் ஆலோஜனா (பொதுத்துறை): சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்.
- அமைச்சர் வெங்கட்ராமன் (உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை): மயிலாடுதுறை மாவட்டம்.
- அமைச்சர் குமார் (தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைத்துறை): திருவள்ளூர் மாவட்டம்.
- அமைச்சர் மரிய வில்சன் (நிதி மற்றும் வளர்ச்சித்துறை): திருநெல்வேலி மாவட்டம்.(அப்பகுதி மக்களுடன் உள்ள நெருங்கிய தொடர்பின் அடிப்படையில் இப்பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது).
- அமைச்சர் ராஜமோகன் (பள்ளிக்கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை): பெரம்பலூர் மாவட்டம்.
- அமைச்சர் தென்னரசு (வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை): காஞ்சிபுரம் மாவட்டம்.
- அமைச்சர் ரஞ்சித்குமார் (வனத்துறை): திருப்பத்தூர் மாவட்டம்.
- அமைச்சர் சரத்குமார் (மழைநீர் மேலாண்மைத்துறை): செங்கல்பட்டு மாவட்டம்.(தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான இவர், அப்பகுதிக்கு மிக நெருக்கமானவர் என்பதால் இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது).
- அமைச்சர் வன்னியரசு (சமூக நீதித்துறை): கள்ளக்குறிச்சி மாவட்டம்.(அவரது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இப்பகுதியில் வலுவாக உள்ளதால், மக்கள் இணைப்புக்காக இப்பொறுப்பு தரப்பட்டுள்ளது).
- அமைச்சர் காந்திராஜ் (கூட்டுறவுத்துறை): ராணிப்பேட்டை மாவட்டம்.(இவர் அதே மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது).
- அமைச்சர் ராஜ்குமார் (வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை): தர்மபுரி மற்றும் அரியலூர் மாவட்டங்கள்.
- அமைச்சர் ஷாஜகான்: நாகப்பட்டினம் மாவட்டம்.(கட்சிப் பணிகள் மற்றும் பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் இவருக்கு உள்ள அணுகுமுறையின் அடிப்படையில் இப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது).
- அமைச்சர் வினோத் (வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை): தஞ்சாவூர் மாவட்டம்.
- அமைச்சர் ரமேஷ்: திருச்சி மாவட்டம்.(திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டவர் என்பதால், திருச்சி மாவட்டப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது).
- அமைச்சர் விஜயலட்சுமி பால் (பால்வள மேம்பாட்டுத்துறை): கரூர் மாவட்டம்.(குளித்தலையில் போட்டியிட்ட இவருக்கு, கொங்கு மண்டலப் பின்னணியில் இப்பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது).
- அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் (வணிகவரி மற்றும் பதிவுத்துறை): நாமக்கல் மாவட்டம்.
- அமைச்சர் அருண்ராஜ் (மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை): திருப்பூர் மாவட்டம்.(திருச்செங்கோடு தொகுதியில் வென்றவர்).
- அமைச்சர் கமலி (கால்நடை பராமரிப்புத்துறை): நீலகிரி மாவட்டம்.
- அமைச்சர் விஜய் பாலாஜி (கைத்தறி, துணிநூல் மற்றும் காதித்துறை): வேலூர் மாவட்டம்.
- அமைச்சர் செங்கோட்டையன் (வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை): ஈரோடு மாவட்டம்.(அரசின் மூத்த அமைச்சரான இவருக்கு சொந்த மாவட்டப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது).
- அமைச்சர் சம்பத்குமார் (பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை): கோவை மாவட்டம்.(கோவை வடக்கு தொகுதியில் வென்றவர்).
- அமைச்சர் நிர்மல்குமார் (எரிசக்தி மற்றும் சட்டத்துறை): மதுரை மற்றும் தேனி மாவட்டங்கள்.(திருப்பரங்குன்றம் தொகுதியில் வென்றவர் என்ற அடிப்படையில் இ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது).
- அமைச்சர் முகமது பர்வேஸ் (பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை): புதுக்கோட்டை மாவட்டம்.(அறந்தாங்கி தொகுதியில் வென்றவர்).
- அமைச்சர் பிரபு (இயற்கை வளங்கள் துறை): சிவகங்கை மாவட்டம்.(அம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்).
- அமைச்சர் கீர்த்தனா (தொழில்துறை): கிருஷ்ணகிரி மாவட்டம்.
- அமைச்சர் ஜெகதீஸ்வரி (சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை): விருதுநகர் மாவட்டம்.
- அமைச்சர் விஸ்வநாதன் (உயர்கல்வித்துறை): திருவாருர் மாவட்டம்.(மேலூர் தொகுதியில் வென்றிருந்தாலும் திருவாரூர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது).
- அமைச்சர் ஸ்ரீநாத் (மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை): தூத்துக்குடி மாவட்டம்.(அத்தொகுதியில் வென்றவர் மற்றும் கடலோரப் பகுதி என்பதால் இப்பொறுப்பு தரப்பட்டுள்ளது).
- அமைச்சர் மதன்ராஜா (குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை): ராமநாதபுரம் மாவட்டம்.(ஒட்டப்பிடாரத்தில் வென்றவர்).
- அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் (போக்குவரத்துத்துறை): சேலம் மாவட்டம்.(சொந்த மாவட்டம் என்பதால் இப்பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது).
- அமைச்சர் ராஜேஷ்குமார்: கன்னியாகுமரி மாவட்டம்.(காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான இவருக்குச் சொந்த மாவட்டப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது).
- அமைச்சர் ராஜீவ் (சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை): தென்காசி மாவட்டம்.
- அமைச்சர் விக்னேஷ் (மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை): திண்டுக்கல் மாவட்டம்.(கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிட்டு வென்றவர்).
நிர்வாக ரீதியிலான முக்கியத்துவம்
முந்தைய திமுக ஆட்சிக் காலத்திலும் இதே போன்ற மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கும் நடைமுறை நடைமுறையில் இருந்தது.தற்போது புதிய அரசு அமைந்த ஒரு மாத காலத்திற்குள்ளேயே இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது, தேர்தல் வாக்குறுதிகளையும் திட்டங்களையும் செயல்படுத்துவதில் அரசு காட்டும் தீவிரத்தைக் காட்டுகிறது.








