திருச்சி , ஜூன் 3: திருச்சி அரசு மருத்துவமனையில் மூக்கு அறுவை சிகிச்சையின் போது செவிலியர் மாணவி சீதாலட்சுமி உயிரிழந்த சம்பவத்திற்கு, அவருக்கு செலுத்தப்பட்ட தரமற்ற ‘டெக்சாமெதாசோன்’ (Dexamethasone) மருந்தே காரணம் என்பது விசாரணைக் குழுவின் ஆய்வறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த அதிர்ச்சித் தகவலைத் தொடர்ந்து, குறிப்பிட்ட அந்த ‘பேட்ச்’ (Batch) மருந்தை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பயன்படுத்துவதற்கு மாநில சுகாதாரத்துறை உடனடியாகத் தடை விதித்துள்ளதுடன், அந்த மருந்துகளைத் திரும்பப் பெறவும் உத்தரவிட்டுள்ளது.

கடந்த வாரம் திருச்சி அரசு மருத்துவமனையில் மூக்குவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட செவிலியர் மாணவி சீதாலட்சுமிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.அப்போது எதிர்பாராத விதமாக அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது.இதன்பேரில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மருத்துவர் பாஸ்கர் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.இந்த உயர்மட்டக் குழுவில் காது, மூக்கு, தொண்டை (ENT) மருத்துவ நிபுணர் மருத்துவர் பாரதி மோகன், உயிர்வேதியியல் (Biochemistry) நிபுணர் மருத்துவர் சண்முகசுந்தரம் மற்றும் மருத்துவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
Also read : இருசக்கர வாகனத்தை 2 நாளில் தராமல் இழுத்தடித்த ஏஜென்சி: ₹60,000 நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சம்பவம் நடந்த திருச்சி மருத்துவமனையில் தீவிர விசாரணை மேற்கொண்ட இந்த மருத்துவக் குழுவினர் தங்களது விரிவான ஆய்வறிக்கையை தற்போது சமர்ப்பித்துள்ளனர்.அதில் அறுவை சிகிச்சையின் போது மாணவி சீதாலட்சுமிக்கு செலுத்தப்பட்ட ‘டெக்சாமெதாசோன்’ என்ற குறிப்பிட்ட ஒரு பேட்ச் மருந்து தரம் குறைவாக இருந்ததே இந்த மரணத்திற்கு முதன்மைக் காரணம் என்று குழுவினர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை மிக முக்கிய அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.அதன்படி, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ள அந்த குறிப்பிட்ட பேட்ச் ‘டெக்சாமெதாசோன்’ மருந்துகளை உடனடியாகப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் அந்த குறிப்பிட்ட தயாரிப்புப் பிரிவைச் சேர்ந்த மருந்துகள் அனைத்தையும் அரசு மருத்துவமனைகளில் இருந்து உடனடியாகத் திரும்பப் பெறவும் அவற்றுக்குப் பதிலாக புதிய தரமான மருந்துகளை நோயாளிகளின் பயன்பாட்டிற்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் இருந்து திரும்பப் பெறப்படும் அந்த குறிப்பிட்ட பேட்ச் மருந்துகள் அனைத்தையும் அதன் தரக் குறைபாடுகளை விரிவாக ஆராய்வதற்காக உடனடியாக ஆய்வக சோதனைக்கு அனுப்ப வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த இளம் செவிலியர் மாணவி தரமற்ற மருந்து காரணமாகவே உயிரிழந்தார் என்ற விசாரணைக் குழுவின் அறிக்கை மருத்துவ வட்டாரத்திலும் பொதுமக்களிடத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.








