கோவில்பட்டி அம்மா உணவகத்தில் மண்டல இயக்குநர் அதிரடி ஆய்வு: பார்சல்களுக்கு தடை

கோவில்பட்டி , ஜூன் 17 : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் அருகே செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் இட்லிகள்,தனியார் ஹோட்டல்களுக்கு முறைகேடாக விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து,நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வைத் தொடர்ந்து இட்லி பார்சல் வழங்க அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளதுடன்,முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏழை எளிய மக்களின் பசிப்பிணியைப் போக்கும் நோக்கில் தமிழக அரசால் அம்மா உணவகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கு மலிவு விலையில் தரமான உணவுகள் வழங்கப்படுவதால்,தினக்கூலி தொழிலாளர்கள்,முதியவர்கள் மற்றும் ஏழை எளிய மக்கள் பெருமளவில் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில்,கோவில்பட்டி நகராட்சி அருகே உள்ள அம்மா உணவகத்தில் ஒரு ரூபாய்க்கு விற்கப்படும் இட்லிகள்,பொதுமக்களுக்கு முறையாகக் கிடைப்பதில்லை என்று நீண்ட நாட்களாகக் குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

இடைத்தரகர்கள் இன்றி ஒரு பைசா இல்லாமல் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம்: தவெக அரசுக்கு நிர்வாகிகள் நன்றி

இங்கு அதிகாலையிலேயே தயாரிக்கப்படும் நூற்றுக்கணக்கான இட்லிகளைப் பொதுமக்களுக்கு வழங்காமல்,வெளிச்சந்தையில் உள்ள தனியார் ஹோட்டல்களுக்குக் கூடை கூடையாக விற்பனை செய்வதாகப் புகார் கூறப்பட்டது. இவ்வாறு ஒரு ரூபாய்க்கு வாங்கப்படும் அம்மா உணவக இட்லிகளை,தனியார் ஹோட்டல் உரிமையாளர்கள் தங்களது கடைகளில் பத்து ரூபாய்க்கு மறுவிற்பனை செய்து லாபம் ஈட்டி வந்ததாகத் தெரிகிறது. இதனால்,காலை நேரத்தில் உணவகத்திற்குச் சாப்பிட வரும் ஏழை மக்களுக்கு,உணவகம் திறந்த சில நிமிடங்களிலேயே ‘இட்லி தீர்ந்துவிட்டது’ என்ற பதிலே கிடைத்து வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இந்த முறைகேடு குறித்த புகார்கள் நகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன. இதனைத் தொடர்ந்து,நெல்லை மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் ரவிச்சந்திரன் இன்று காலை கோவில்பட்டி அம்மா உணவகத்திற்கு நேரில் வந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டார். வழக்கமான ஆய்வுகளைப் போலன்றி,ஆரம்பத்தில் உள்ளூர் நகராட்சி அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல்,ரகசியமான முறையில் அம்மா உணவகத்தின் செயல்பாடுகளையும்,அங்கு நடைபெற்ற விற்பனையையும் அவர் தூரத்திலிருந்து கண்காணித்தார். முறைகேடுகள் நடப்பதை உறுதி செய்த பின்னரே,அவர் அதிகாரிகளுடன் உணவகத்திற்குள் நுழைந்தார்.

இந்த திடீர் ஆய்வின் போது கோவில்பட்டி நகராட்சி ஆணையர் சுகந்தியும் உடனிருந்தார். உணவகத்தில் இட்லி வாங்குவதற்காக டோக்கன் வழங்கப்படும் கவுண்டர் மற்றும் இட்லி விநியோகம் செய்யப்படும் பகுதிகளை மண்டல இயக்குநர் ரவிச்சந்திரன் விரிவாகப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு நிலவிய சூழலை ஆய்வு செய்த அவர்,அம்மா உணவகத்தில் இருந்து இட்லிகளைப் பார்சலாக வெளியில் எடுத்துச் செல்ல முழுமையாகத் தடை விதித்தார். உணவகத்திற்கு வரும் பொதுமக்கள் டோக்கன் பெற்று,அங்கேயே அமர்ந்து மட்டுமே சாப்பிட வேண்டும் என்பதை ஊழியர்கள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

மண்டல இயக்குநரின் இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து,இன்று காலை அம்மா உணவகத்திற்குப் பார்சல் வாங்க வந்த வெளிநபர்கள் மற்றும் தனியார் ஹோட்டல் ஏஜெண்டுகளுக்கு இட்லி வழங்க ஊழியர்கள் மறுத்துவிட்டனர். டோக்கன் வாங்கிய பொதுமக்களுக்கு மட்டுமே இட்லி விநியோகிக்கப்பட்டதுடன்,அவர்கள் உணவக வளாகத்திலேயே அமர்ந்து உணவருந்த வைக்கப்பட்டனர். இதனால் எப்போதும் இல்லாத வகையில்,இன்று காலை நீண்ட நேரம் இட்லி தடையின்றிக் கிடைத்தது. வழக்கமாக ஏமாற்றத்துடன் திரும்பும் ஏழை எளிய மக்கள்,இன்று மகிழ்ச்சியுடன் உணவகத்தில் அமர்ந்து சாப்பிட்டுச் சென்றனர். அதேநேரம்,வணிக நோக்கில் பார்சல் வாங்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இந்த ஆய்வு குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய நெல்லை மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் ரவிச்சந்திரன்,அம்மா உணவகத்தில் உணவுப் பொருட்கள் வெளிச்சந்தையில் தனியார் ஹோட்டல்களுக்கு விற்பனை செய்யப்பட்டதா என்பது குறித்துத் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்த விசாரணையின் முடிவில்,முறைகேடுகளில் தொடர்புடைய ஊழியர்கள் அல்லது நபர்கள் மீது சட்டப்படியும்,துறை ரீதியாகவும் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1307

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »