
KKR vs MI , May 20: சுனில் நரேன் – ரோஹித் சர்மா இடையிலான பலப்பரீட்சை; கொல்கத்தாவின் பிளேஆஃப் கனவை கலைக்குமா மும்பை?
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ள சூழலில், கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நடப்பு சீசனின் ஆரம்பத்தில் மும்பை அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய கொல்கத்தா, தற்போது மீண்டும் அதே அணியை எதிர்கொள்கிறது. புள்ளிப்பட்டியலில் பிளேஆஃப் சுற்றை எட்ட மீதமுள்ள ஒரு இடத்திற்காக பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் ஆகிய அணிகளுடன் கொல்கத்தாவும் கடுமையான போட்டியில் உள்ளது. மழையால் ஒரு போட்டி கைவிடப்பட்டு கிடைத்த ஒரு புள்ளியும் கொல்கத்தாவின் இந்த வாய்ப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்னும் இரண்டு போட்டிகளில் வென்றால் 15 புள்ளிகளுடன் பிளேஆஃப் தகுதி பெறலாம் என்ற நிலையில் கொல்கத்தா உள்ளதால், அவர்களுக்கு இது வாழ்வா சாவா போராட்டமாகும். மறுபுறம், மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துவிட்டாலும், மற்ற அணிகளின் வாய்ப்பை கெடுக்கும் ‘பார்ட்டி ஸ்பாய்லராக’ மாறக்கூடிய வல்லமை படைத்தது என்பதால் இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
also read: இந்திய ராணுவத்தை வலுப்படுத்த அமெரிக்காவுடன் ரூ.4100 கோடி ஒப்பந்தம்
இந்த ஆட்டத்தில் அனைவரின் கவனமும் மும்பை அணியின் நட்சத்திர பேட்டர் ரோஹித் சர்மா மீது திரும்பியுள்ளது. ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் ரோஹித் சர்மாவுக்கு எப்போதும் சிறப்பான சாதனை உள்ளது. குறிப்பாக, 2012ஆம் ஆண்டு சீசனில் இதே கொல்கத்தா அணிக்கு எதிராக அவர் அடித்த சதம் இன்றும் ரசிகர்களால் பேசப்படுகிறது. காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள ரோஹித், நடப்பு சீசனில் அதிரடி தொடக்கத்தை தந்து வருகிறார். இந்த சீசனில் ரயான் ரிக்கல்டனுடன் இணைந்து பவர் பிளேயில் ரோஹித் சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்த போட்டிகளில் எல்லாம் மும்பை அணி எளிதாக வெற்றி பெற்றுள்ளது. இந்த ஜோடி ஆரம்பத்திலேயே பிரிந்துவிட்டால் மும்பை அணி தோல்வியை தழுவுகிறது என்பது இந்த சீசனின் முக்கிய புள்ளிவிவரமாக உள்ளது.
இருப்பினும், ரோஹித் சர்மாவுக்கு கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரேன் மிகப்பெரிய சவாலாக விளங்குவார். ஐபிஎல் வரலாற்றில் ரோஹித் சர்மாவை அதிகமுறை ஆட்டமிழக்கச் செய்த பந்துவீச்சாளர் சுனில் நரேன் தான். இதுவரை 25 இன்னிங்ஸ்களில் மோதியுள்ள இந்த இருவரில், 10 முறை ரோஹித்தின் விக்கெட்டை நரேன் வீழ்த்தியுள்ளார். இதனால், பவர் பிளே ஓவர்களிலேயே நரேன் பந்துவீச வரும் பட்சத்தில், ரோஹித் சர்மா மிகுந்த எச்சரிக்கையுடன் விளையாட வேண்டிய கட்டாயம் உள்ளது.
மும்பை அணியின் நடப்பு சீசன் கண்டுபிடிப்பாக பார்க்கப்படும் ரயான் ரிக்கல்டன், ஆரம்பத்தில் வெவ்வேறு வரிசைகளில் களம் இறக்கப்பட்டாலும், தற்போது டாப் ஆர்டரில் தனது இடத்தை நிலைநிறுத்தியுள்ளார். சுழற்பந்து வீச்சை லாவகமாக எதிர்கொள்ளும் திறன் கொண்ட இவரின் ஸ்ட்ரைக் ரேட் மற்றும் பவர் பிளே அதிரடி மும்பை அணியின் பேட்டிங்கிற்கு பலம் சேர்க்கிறது. இந்த சீசனில் ஒரு சதம் மற்றும் தொடர்ச்சியான ரன் குவிப்பு மூலம் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் ரிக்கல்டன், சுழற்பந்து வீச்சில் வலுவாக உள்ள கொல்கத்தாவுக்கு எதிராக முக்கிய வீரராக இருப்பார்.
மறுபுறம், கொல்கத்தா அணியின் தொடக்க பேட்டர் பின் ஆலன் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறார். இந்த சீசனில் ஒரு சதம் மற்றும் ஒரு போட்டியில் 90 ரன்கள் குவித்து தனது அதிரடி ஆட்டத்தை நிரூபித்துள்ள இவரை ஆரம்ப ஓவர்களிலேயே கட்டுப்படுத்துவது மும்பை பந்துவீச்சாளர்களுக்கு சவாலானது. குறிப்பாக ஜஸ்பிரித் பும்ரா, தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் புல்லர் லென்த் மற்றும் வைடு ஆஃப் கிரீஸ் கோணங்களை பயன்படுத்தி இவருக்கு பந்துவீச திட்டமிட வேண்டும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கருதுகின்றனர். ஏனெனில், பந்தை சற்றே ஷார்ட் லென்தாக வீசினாலும் தனது அசாத்திய கைகளின் வேகம் மூலம் அதனை மிட்-விக்கெட் திசையில் சிக்ஸர்களாக மாற்றும் திறன் பின் ஆலனுக்கு உள்ளது.
கொல்கத்தா அணியின் மிடில் ஆர்டரில் விக்கெட் கீப்பராகவும், 3வது வரிசை பேட்டராகவும் களம் இறங்கும் இளம் வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி இந்த சீசனில் முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஏற்கனவே 400க்கும் அதிகமான ரன்களை குவித்துள்ள இவர், நெருக்கடியான நேரங்களில் அணியை மீட்கும் திறனை பெற்றுள்ளார். பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பின் ஆலன் ஆட்டமிழந்த பிறகும், அதே வேகத்தில் ரன் குவித்து இவர் விளையாடிய விதம் பலரது பாராட்டை பெற்றது. சுழற்பந்து வீச்சை திறம்பட எதிர்கொள்ளும் இவரை கட்டுப்படுத்துவது மும்பை அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான அல்லாஹ் கஜன்ஃபர் மற்றும் ரகு சர்மாவுக்கு சவாலாக இருக்கும்.
அதேபோல் மும்பை அணியில் திலக் வர்மாவின் ஆட்டம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியா ஏ அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள அவர், பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகளுக்கு எதிராக ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா இல்லாத நிலையிலும் பொறுப்பை உணர்ந்து, இலக்கை துரத்தும்போது நிதானமாக இன்னிங்ஸை கட்டமைத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருப்பது இவரது தனிச்சிறப்பாகும்.
இப்போட்டியின் இறுதி ஓவர்களில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரிங்கு சிங் இடையிலான மோதல் ஆட்டத்தின் போக்கை தீர்மானிக்கும் முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது. பும்ரா இந்த சீசனில் தனது முழுமையான ஃபார்மில் இல்லை என்ற விமர்சனங்கள் எழுந்தாலும், கேப்டன்சி பொறுப்பை ஏற்ற பிறகு அவரது உடல்மொழி மற்றும் ஆட்டத்தை அணுகும் விதம் நேர்மறையாக மாறியுள்ளது. கடந்த போட்டியில் சரியான நேரத்தில் பந்துவீச்சாளர்களை மாற்றி விக்கெட்டுகளை வீழ்த்தியது அவரது தலைமைத்துவ பண்பை காட்டியது. உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளரான பும்ராவின் பந்துகளை, கடைசி ஓவர்களில் அதிரடியாக ஆடக்கூடிய ரிங்கு சிங் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதைப் பொறுத்தே இரு அணிகளின் வெற்றி வாய்ப்பு அமையும். பிளேஆஃப் பந்தயத்தில் நீடிக்க கொல்கத்தாவுக்கும், கௌரவப் போராட்டமாக மும்பைக்கும் இந்த ஆட்டம் அமைந்துள்ளதால் ஈடன் கார்டன்ஸில் இன்று விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.













