
Trichy , May 20: கிட்னி திருட்டு வழக்கு : நாமக்கல், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் நடந்ததாக கூறப்படும் கிட்னி திருட்டு வழக்கை தமிழக சுகாதாரத்துறை மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளது.
தமிழகத்தை அதிரவைத்த கிட்னி திருட்டு மற்றும் சட்டவிரோத கிட்னி விற்பனை விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் காலத்தால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசாரணையை, தற்போது தமிழக சுகாதாரத்துறை மீண்டும் கையில் எடுத்துள்ளது. தமிழ்நாடு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் சித்ரா தலைமையில் இந்த விசாரணை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, கடந்த ஆட்சிக்காலத்தில் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், திருச்சி, ஈரோடு மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் ஏழை தொழிலாளர்களை குறிவைத்து சட்டவிரோதமாக கிட்னி அகற்றப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன. இந்த விவகாரம் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், மூன்று பேர் கைது செய்யப்பட்டிருந்ததும் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.
Also read; நெல்லை பழவூர் அருகே பாதயாத்திரை பக்தர்கள் மீது கார் மோதி 2 சிறுவர்கள் பலி
தேர்தல் நடவடிக்கைகள் காரணமாக விசாரணை சில மாதங்கள் மந்தமான நிலையில் இருந்ததாக கூறப்படும் சூழலில், தற்போது மீண்டும் எந்தத் தொய்வும் இல்லாமல் விசாரணையை தீவிரப்படுத்த தமிழக சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் விரிவான விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்களிடம் கிட்னி மோசடி நடைபெற்றதாக முன்பு வெளிவந்த தகவல்கள் பெரும் கவலையை ஏற்படுத்தியிருந்தன. பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் குறிவைக்கப்பட்டதாக கூறப்படும் இந்த வழக்கில், இடைத்தரகர்கள் மூலம் ஏமாற்றப்பட்டு பலர் சட்டவிரோத அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்திருந்தது.
இதனிடையே, புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, இந்த விவகாரத்தில் மீண்டும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பல தரப்பிலிருந்து எழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் இந்த வழக்கை மறுபரிசீலனை செய்து மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளனர்.
இந்த விசாரணை தற்போது நாமக்கல், பள்ளிப்பாளையம், திருச்சி மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்குள் மட்டும் கட்டுப்படுத்தப்படாமல், மற்ற மாவட்டங்களிலும் இதுபோன்ற சட்டவிரோத கிட்னி அகற்றும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளனவா என்பது தொடர்பாகவும் ஆய்வு செய்யப்படுகிறது. இதற்காக தனி விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், இடைத்தரகர்கள் உள்ளிட்ட யார் இதில் தொடர்புடையவர்களாக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவ அமைப்பின் நம்பகத்தன்மையை பாதிக்கும் வகையில் இந்த குற்றச்சாட்டுகள் இருப்பதால், விசாரணை மிகுந்த கவனத்துடன் முன்னெடுக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தமிழக எல்லைகளைத் தாண்டியும் பரவலாக பேசப்படும் நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சில விவசாயிகள் தரப்பிலிருந்தும் புகார்கள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த கும்பலின் துணையுடன் கிட்னி திருட்டு சம்பவங்கள் நடந்திருக்கலாம் என மகாராஷ்டிரா தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதால், அந்த மாநிலத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.
இதனுடன் தொடர்புடையதாக கூறப்படும் சில மருத்துவமனைகள் மீதும் மீண்டும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக திருச்சி மற்றும் பெங்களூரில் செயல்பட்டு வரும் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் திருச்சியில் உள்ள சிதம்பரம் மருத்துவமனை உள்ளிட்ட சில மருத்துவ நிறுவனங்களில் நடைபெற்றதாக கூறப்படும் சிறுநீரக அறுவை சிகிச்சைகள் தொடர்பாக அதிகாரிகள் மீண்டும் ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த மருத்துவமனைகளில் நடைபெற்ற அறுவை சிகிச்சைகள் விதிமுறைகளுக்கு உட்பட்டவையா, நோயாளிகளின் ஒப்புதல் முறையாக பெறப்பட்டதா, இடைத்தரகர்கள் மூலம் சட்டவிரோத பண பரிவர்த்தனைகள் நடந்துள்ளனவா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சில மருத்துவமனைகளுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த நடவடிக்கைகள் மீண்டும் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
கிட்னி திருட்டு விவகாரம் என்பது ஒரு சாதாரண குற்றச்சாட்டு மட்டுமல்ல; மருத்துவ துறையின் நம்பகத்தன்மை, ஏழை மக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட அமைப்பின் செயல்திறன் ஆகியவற்றை நேரடியாக கேள்விக்குள்ளாக்கும் விவகாரமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக பொருளாதார நெருக்கடியில் இருக்கும் தொழிலாளர்கள் குறிவைக்கப்பட்டதாக வெளியாகும் தகவல்கள் சமூக ரீதியாகவும் கடும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளன.













