
Chennai, May 19:தமிழக அரசு பள்ளிகளில் புதிய பாடத்திட்ட பயிற்சி, ஆசிரியர்களுக்கு சுமையில்லா அணுகுமுறை, அடிப்படை வசதிகள் மேம்பாடு குறித்து அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்.
தமிழக அரசு பள்ளிகளில் புதிய பாடத்திட்டம், ஆசிரியர்களுக்கான பயிற்சி முறை, பள்ளி அடிப்படை வசதிகள் மேம்பாடு மற்றும் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.புதிய பாடத்திட்டத்தை பயிற்றுவிப்பது தொடர்பாக மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் தேவையற்ற சுமை வரக்கூடாது” என்ற அணுகுமுறையில்தான் அரசு செயல்படுகிறது என தெரிவித்தார்.
தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 1ஆம் தேதி திறக்கப்படவுள்ள நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான வகுப்புகள் மட்டும் ஜூன் 4ஆம் தேதி தொடங்கப்படும் என அவர் கூறினார்.இதற்கான காரணத்தையும் அவர் விளக்கினார்.கோடை விடுமுறை காலத்திலேயே ஆசிரியர்களை அழைத்து பயிற்சி அளித்து, அனைத்து வகுப்புகளையும் ஒரே நாளில் தொடங்கியிருக்கலாம்.ஆனால் அது ஆசிரியர்களுக்கு மறைமுக சுமையாக மாறியிருக்கும் என்பதால் அந்த முடிவு எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.
“ஜூன் 1 முதல் 3 வரை அந்த வகுப்புகளுக்கு பாடம் எடுக்கவுள்ள ஆசிரியர்களே மாணவர்களாக அமர்ந்து புதிய பாடத்திட்டத்தை கற்றுக்கொள்ளப் போகிறார்கள்.அதன் பிறகுதான் அவர்கள் மாணவர்களை சந்திக்கப் போகிறார்கள்” என்று கூறிய ராஜ்மோகன், தொடக்க நிலை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் இடைநிலை, உயர்நிலை உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களையும் அரவணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதே நேரத்தில், பள்ளிக்கல்வித்துறைக்கான எதிர்கால திட்டங்கள் குறித்தும் அவர் முக்கிய தகவல்களை பகிர்ந்தார்.“பெண்ணுரிமை, மண்ணுரிமை போன்ற விஷயங்களில் எந்த சமரசமும் கிடையாது” என்று கூறிய அவர், தமிழக அரசின் அணுகுமுறை சமூக ரீதியாக பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக இருப்பதாக தெரிவித்தார்.
மாண்புமிகு முதலமைச்சரின் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் நலன் உள்ளிட்ட பல துறைகள் ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் செயல்படுகின்றன என்றும், சமூகத்தில் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ள பிரிவுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.“இது ஒரு Inclusive Government” என குறிப்பிட்ட அவர், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பலவீனமாக உள்ள மக்களுக்கான திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதாக விளக்கினார்.
அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்பாடு
தமிழக அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் குறித்தும் ராஜ்மோகன் விரிவாக பேசினார்.மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் ஆய்வு செய்யப்பட்டு, மோசமான நிலையில் உள்ள கழிப்பறைகள் புதுப்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதோடு குடிநீர் வசதி அனைத்து பள்ளிகளிலும் உறுதி செய்யப்படும் என்றும், சேதமடைந்த வகுப்பறைகள் சீரமைக்கப்படும் என்றும் கூறினார்.சில பள்ளிகளில் வெளிச்ச வசதி குறைவாக இருப்பது, கரும்பலகை தேவைகள், Smart Class வசதிகள் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Also read : மேற்குத் தொடர்ச்சி மலை கனமழை: நெல்லை அணைகளுக்கு நீர்வரத்து உயர்வு
இந்த தேவைகள் அனைத்தும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அதற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
அரசு பள்ளி சேர்க்கையை உயர்த்த புதிய பாடத்திட்டம்
தமிழகத்தில் அரசு பள்ளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், மாணவர் எண்ணிக்கையில் தனியார் பள்ளிகளே முன்னிலையில் உள்ளன என்ற நிலையை மாற்ற வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என ராஜ்மோகன் கூறினார்.அதற்கான முயற்சிகளில் முக்கியமான ஒன்றாக புதிய பாடத்திட்டம் அமையும் என அவர் விளக்கினார்.
“இது Student-Centric, Child-Centric Approach” என கூறிய அவர், அனைத்து வகை மாணவர்களையும் உள்ளடக்கும் வகையில் புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.வேகமாக கற்றுக்கொள்ளும் மாணவர்கள் மட்டுமல்லாமல், Slow Learners மற்றும் Average Students ஆகியோரும் சமமாக முன்னேற வேண்டும் என்பதே நோக்கம் என கூறினார்.
தனது வாழ்க்கை அனுபவத்தையும் பகிர்ந்த அமைச்சர், “நானும் ஒரு Average Student தான்.என்னுடைய ஆசிரியர்கள் என்னை அரவணைத்ததால்தான் வாழ்க்கையில் முன்னேற முடிந்தது” என்றார்.ஒரு குழந்தைக்கு தமிழ் பாடம் நன்றாக வரலாம்; இன்னொரு குழந்தைக்கு கணக்கு பாடம் சிரமமாக இருக்கலாம்.ஆனால் அத்தகைய மாணவர்களும் ஆசிரியர்களின் பொறுப்பே என்றும் அவர் கூறினார்.
“ஒவ்வொரு குழந்தையும் பெற்றோரின் குழந்தை மட்டுமல்ல; படிப்பில் சிரமப்படும் மாணவர் அந்த ஆசிரியரின் முதல் குழந்தை” என்ற அவரது கருத்து கவனம் பெற்றது.மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஏற்கனவே படித்து வரும் மாணவர்கள் இடைநிற்றல் செய்யாமல் இருப்பதற்கும் பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
பொருளாதார பிரச்சினை, சமூக சூழல், மருத்துவ காரணங்கள் உள்ளிட்ட எந்த காரணத்தாலும் மாணவர்கள் கல்வியை விட்டு விலகக்கூடாது என்பதில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும், அதற்கான திட்டங்கள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.








