சென்னை: தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு நிறைவடைந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுதினம் வெளியாகவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இதன் தொடர்ச்சியாக கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 1-ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிய கல்வியாண்டை முன்னிட்டு அனைத்து அரசுப் பள்ளிகளையும் முழுமையாகத் தயார் நிலைக்குக் கொண்டு வரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறக்கப்பட இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் அரசுப் பள்ளிகளில் தூய்மைப் பணிகள் மற்றும் குடிநீர் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து அதிவேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதேபோல புதிய கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய விலையில்லாப் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு அவை மாவட்ட வாரியாக உள்ள கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டு அந்தந்தப் பள்ளிகளுக்கு விநியோகம் செய்யும் பணிகளும் தற்பொழுது இறுதிப் கட்டத்தை எட்டியுள்ளன.பள்ளி வளாகங்கள் அனைத்தும் புத்துணர்ச்சியுடன் மாற்றப்பட்டு வருவதைக் குறிப்பிட்ட அமைச்சர் பறவைகள் தங்களின் இருப்பிடமான சரணாலயத்திற்குத் திரும்புவதைப் போல கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியோடு மீண்டும் பள்ளிகளுக்கு வர வேண்டும் என்பதே அரசின் முதன்மை நோக்கம் என்று சுட்டிக்காட்டினார்.மாணவர்களின் வருகையை அதிகரிக்கவும் கற்றல் சூழலை மேலும் எளிமையாக்கவும் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கமளித்தார்.
Also read : அ.தி.மு.கவில் இருந்து முன்னாள் அமைச்சர் செம்மலை அதிரடி விலகல்.. ஈபிஎஸ்க்கு உருக்கமான கடிதம்
அதே வேளையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் திட்டமிட்டபடி ஜூன் 1-ஆம் தேதியே பள்ளிகள் திறக்கப்படுமா அல்லது தேதியில் ஏதேனும் மாற்றம் இருக்குமா என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது.இதுகுறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் வெயிலின் தீவிரத்தை அரசு தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்டார்.பள்ளிகள் திறப்பதற்கு இன்னும் 10 நாட்கள் கால அவகாசம் இருப்பதால் அந்தந்த மாவட்டங்களின் வானிலை நிலவரம் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படும் என்றும் வெயிலின் தாக்கம் குறையாத பட்சத்தில் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு முதலமைச்சருடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இதற்கிடையே அரசுப் பள்ளி மாணவர்களின் ஆங்கிலப் பேச்சுத்திறனை மேம்படுத்துவது குறித்தும் கல்வித்துறை முக்கிய கவனம் செலுத்தி வருகிறது.அரசுப் பள்ளி மாணவர்கள் தங்களின் தாய்மொழியான தமிழில் சிறந்த புலமையுடன் விளங்கும் அதே வேளையில் உலகளாவிய வாய்ப்புகளைப் பெறுவதற்குக் கூடுதல் மொழியாக ஆங்கிலத்தையும் எவ்விதத் தயக்கமும் இன்றி பேச வேண்டும் என்பதே அரசின் இலக்காகும்.இதற்காக கல்வித்துறையின் முதலாவது ஆலோசனைக் கூட்டத்திலேயே விரிவான விவாதங்கள் நடத்தப்பட்டு அரசுப் பள்ளி மாணவர்களின் திறன்களை உலகத் தரத்திற்கு உயர்த்துவதற்கான பிரத்யேகச் செயல்திட்டங்கள் மற்றும் புதிய பயிற்சித் திட்டங்கள் தற்போது ஆலோசிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
தமிழகத்தின் கல்விப் பாரம்பரியம் குறித்துப் பேசிய அவர் சங்க காலத்திலிருந்தே தமிழ்நாடு கல்வியில் முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருவதை நினைவுகூர்ந்தார்.பெருந்தலைவர் காமராசர் காலத்தில் கல்வி எவ்வாறு பொதுமக்களைச் சென்றடைந்ததோ அதேபோல தற்போதைய அரசும் கல்வித் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.குறிப்பாக அனைத்துத் தரப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய சமத்துவக் கல்வி முறையை வலுப்படுத்தும் நோக்கில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.








