chennai, May 18 : தலித் முதல்வர் விவகாரம் : தமிழ்நாட்டில் தலித் ஒருவர் முதல்வராவது எளிதல்ல என விசிகா தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திமுக-அதிமுக பேச்சு ‘காசிப்ஸ்’ மட்டுமே என்றும் விளக்கம் அளித்தார்.
தமிழ்நாட்டில் “தலித் ஒருவர் முதல்வராவது எளிதல்ல” என்ற விசிகா தலைவர் தொல். திருமாவளவனின் கருத்து தற்போது மாநில அரசியலில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. அதிமுக மற்றும் திமுக தரப்பிலிருந்து தன்னை முதல்வர் வேட்பாளராக முன்வைப்பது குறித்து அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என்றும், அவை அனைத்தும் “காசிப்ஸ்” மட்டுமே என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
“அதிகாரப்பூர்வ பேச்சு இல்லை” – திருமாவளவன் தெளிவு
திமுக அல்லது அதிமுக தலைவர்கள் யாரும் தன்னை அதிகாரப்பூர்வமாக அணுகவில்லை என்று திருமாவளவன் தெளிவாக கூறினார். “இது எல்லாம் காசிப்ஸ். பொதுவாக பலரும் பேசிக்கொண்டிருக்கும் அரசியல் யூகங்கள். மூடப்பட்ட அறையில் நடந்த ரகசிய பேச்சுவார்த்தை அல்ல,” என்று அவர் குறிப்பிட்டார். அரசியலில் இத்தகைய முணுமுணுப்புகள் இயல்பானவை என்றும், சிலர் ‘ஏன் ஒரு தலித் முதல்வர் வரக்கூடாது?’ என்ற கோணத்தில் பேசுவது புதிதல்ல என்றும் அவர் கூறினார். ஆனால் அந்த விவாதங்களை அதிகாரப்பூர்வ அரசியல் நகர்வாக எடுத்துக்கொள்ள முடியாது என்று வலியுறுத்தினார்.
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்”
விசிகா தொடர்ந்து திமுக கூட்டணியில்தான் இருக்கும் என்றும் திருமாவளவன் மீண்டும் உறுதி செய்தார். “நாங்கள் திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். எங்களது அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை,” என்று அவர் தெரிவித்தார்.
TVKவுக்கு ஆதரவு அளித்தது தொடர்பாக எழுந்த விமர்சனங்களுக்கும் அவர் பதில் அளித்தார். மாநிலத்தில் அரசியல் நிலைத்தன்மை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே அந்த ஆதரவு வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.
“குடியரசுத் தலைவர் ஆட்சி வரக்கூடாது”
“இரண்டு இடங்களின் காரணமாக அரசு அமைக்க முடியாமல் போகக்கூடாது. மீண்டும் தேர்தல் வரக்கூடாது. குடியரசுத் தலைவர் ஆட்சி வரக்கூடாது என்பதற்காகவே ஆதரவு அளித்தோம்,” என்று திருமாவளவன் விளக்கமளித்தார். அதே நேரத்தில், அந்த ஆதரவு “Unconditional Support” எனவும், அமைச்சரவையில் இடம்பெறும் எண்ணம் விசிகவுக்கு இல்லை என்றும் அவர் கூறினார். கட்சியின் சில நிர்வாகிகள் அமைச்சரவை இடம் குறித்து கருத்து தெரிவித்தாலும், அதிகாரப்பூர்வ நிலைப்பாடு வேறுபட்டது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
“தலித் முதல்வர்” விவாதம் ஏன் முக்கியம்?
தமிழ்நாட்டில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக வருவது குறித்து பல ஆண்டுகளாகவே அரசியல் மற்றும் சமூக அமைப்புகளில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. சமூகநீதி அரசியலை முன்னிறுத்தும் தமிழகத்தில் கூட அதிகார மையங்களில் தலித் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பதாக பல ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த சூழலில் திருமாவளவனின் “தலித் ஒருவர் முதல்வராவது எளிதல்ல” என்ற கருத்து, சமூக அமைப்பு, சாதி ஆதிக்கம், கூட்டணி அரசியல் ஆகியவற்றின் நிதர்சனத்தை வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் பார்க்கின்றனர்.
“காசிப்ஸ் தான்” – மீண்டும் மீண்டும் வலியுறுத்திய திருமாவளவன்
செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்த திருமாவளவன், “யாரும் என்னிடம் வந்து இந்த முடிவை எடுக்கலாம் என்று பேசவில்லை. இது எல்லாம் அரசியல் காசிப்ஸ் மட்டுமே,” என்றும் , மேலும் “சிலர் நல்லெண்ண அடிப்படையில் பேசுகிறார்கள். அதையே அரசியல் ஒப்பந்தம் போல மாற்றுவது தவறு,” என்றார்.
விசிக உள்ளக ஆலோசனைகள் பற்றியும் விளக்கம்
கட்சியின் அரசியல் முடிவுகள் அனைத்தும் உயர்நிலை குழுவில் ஆலோசித்த பிறகே எடுக்கப்படும் என்றும் திருமாவளவன் தெரிவித்தார். உடனடி முடிவுகளை எடுக்க முடியாது என்பதையும், கட்சித் தோழர்களுடன் ஆலோசனை நடத்துவது ஜனநாயக நடைமுறை என்றும் “சில மணி நேர தாமதத்தையே பேரம் பேசுவதாக மாற்றி காட்டுவது சரியல்ல,” என்ற அவர், விசிக எந்த அரசியல் பேரத்திலும் ஈடுபடவில்லை என்று மறுத்தார்.








