ரஜினி கிளியர் விளக்கம்: “விஜய் மீது பொறாமை இல்லை”.. திமுக-அதிமுக கூட்டணி பேச்சுக்கும் முற்றுப்புள்ளி வைத்த சூப்பர் ஸ்டார்

விஜய் மீது பொறாமை இல்லை : விஜய் முதல்வரானதை வரவேற்ற ரஜினிகாந்த், திமுக-அதிமுக கூட்டணி பேச்சு, பொறாமை விமர்சனம் உள்ளிட்ட சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்தார்.

image 361

சென்னை, May 17: தமிழக அரசியல் களத்தில் கடந்த சில நாட்களாக விவாதப் பொருளாக மாறியிருந்த பல்வேறு விமர்சனங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் நடிகர் ரஜினிகாந்த் நேரில் தோன்றி விரிவான விளக்கங்களை அளித்துள்ளார். சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் தன்னைச் சுற்றிப் பரப்பப்பட்ட தகவல்களை மறுத்த அவர், புதிய முதலமைச்சர் விஜயின் அரசியல் வெற்றியைத் திறந்த மனதுடன் பாராட்டியுள்ளார்.

தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, தமிழக அரசியலில் பல்வேறு ஊகங்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ரஜினிகாந்த் நேரில் சந்தித்தது, புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு அவர் உடனடியாக வாழ்த்து தெரிவிக்காதது போன்ற நிகழ்வுகள் விவாதங்களை உருவாக்கின. மேலும், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் இணைக்கும் முயற்சிகளுக்குப் பின்னணியில் ரஜினிகாந்த் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டுகளும் பரவின.

இந்தச் சூழலில், நீண்ட மௌனத்தைக் கலைத்துச் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், “நான் பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தால், பரப்பப்படும் வதந்திகள் உண்மை என மக்கள் எடுத்துக்கொள்ளக்கூடும். அதனால்தான் இன்று நேரடியாகப் பேசுகிறேன்” என்று குறிப்பிட்டுத் தனது விளக்கங்களைத் தொடங்கினார்.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மு.க.ஸ்டாலினைச் சந்தித்ததன் பின்னணியை விளக்கிய அவர், “ஸ்டாலின் அவர்கள் எனக்கு 38 முதல் 40 ஆண்டுகால நண்பர். எங்களுடைய இந்த நட்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது. ஜனநாயக ரீதியிலான தேர்தலில் வெற்றியும் தோல்வியும் சகஜமானதுதான். ஆனால், கொளத்தூர் தொகுதியில் அவர் தோல்வியடைந்தது எனக்குத் தனிப்பட்ட முறையில் வருத்தத்தை அளித்தது. அந்த வருத்தத்தின் காரணமாகவே ஒரு நண்பனாக அவரை நேரில் சென்று பார்த்தேன்” என்று கூறினார்.

இதே சந்திப்பை முன்வைத்து, “விஜய் முதலமைச்சராக வருவதைத் தடுப்பதற்காகவே ரஜினி செயல்படுகிறார்” என்றும், “திமுக – அதிமுக கூட்டணிக்கான முயற்சிகளை மேற்கொள்கிறார்” என்றும் எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு அவர் கடுமையான வார்த்தைகளால் பதிலடி கொடுத்தார். “அந்தச் சூழ்நிலையில் அப்படிப்பட்ட அரசியல் பேச்சுக்களைப் பேச முடியுமா? அத்தகைய தரங்கெட்ட செயல்களில் ஈடுபடும் நபர் ரஜினிகாந்த் இல்லை” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

விஜய் மீது ரஜினிகாந்துக்குப் பொறாமை இருப்பதாகச் சமூக வலைதளங்களில் எழுதப்படும் விமர்சனங்கள் குறித்தும் அவர் விரிவாகப் பேசினார். “நான் அரசியலிலேயே இல்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து, அதிலிருந்து முற்றிலும் விலகி இருக்கிறேன். அப்படியிருக்கும்போது விஜய் மீது எனக்கு ஏன் பொறாமை வரப்போகிறது? அவர் தனது 52 வயதில் எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் ஆகியோரின் சாதனைகளை விடப் பெரியதொரு விஷயத்தைச் சாதித்துக் காட்டியிருக்கிறார். மத்தியில் பெரும் சக்தியாக விளங்கும் பாஜக, மாநிலத்தில் உள்ள இரு பெரும் திராவிடக் கட்சிகள் ஆகியவற்றை எதிர்த்துத் தனித்துப் போட்டியிட்டுப் பெருவெற்றி பெற்றுள்ளார். அதுவும் நம் சினிமா துறையிலிருந்து சென்ற ஒருவர் இந்தச் சாதனையைச் நிகழ்த்தியிருப்பது எனக்குப் பொறாமையைத் தரவில்லை; மாறாக ஆச்சரியத்துடன் கூடிய சந்தோஷத்தையே தருகிறது” என்றார்.

மேலும், இருவருக்குமான ஒப்பீடுகள் குறித்துப் பேசுகையில், “எனக்கும் விஜய்க்கும் இடையே சுமார் 25 வருட தலைமுறை வித்தியாசம் உள்ளது. நான் என்னைக் கொண்டு போய் விஜயுடன் ஒப்பிட்டுக் கொண்டாலும் அது எனக்கு நல்லது இல்லை; விஜய் தன்னை என்னுடன் ஒப்பிட்டுக் கொண்டாலும் அது அவருக்கு நல்லது இல்லை. அவர் சிறு வயது முதலே என்னைப் பார்த்து வளர்ந்தவர்” என்று குறிப்பிட்டார்.

புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய் குறித்துப் பேசிய ரஜினிகாந்த், “மக்கள் மத்தியில் விஜய் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவர் மக்களுக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதே நேரத்தில், மக்கள் அவருக்குக் குறைந்தது இரண்டு வருட காலமாவது அவகாசம் கொடுக்க வேண்டும். ஒரு பெரிய மாற்றத்தை உடனே எதிர்பார்த்துவிடக் கூடாது” என்றார். தொடர்ந்து விஜயின் தொண்டர்களுக்கும் ரசிகர்களுக்கும் எச்சரிக்கை விடுத்த அவர், “அவருடைய ரசிகர்கள் மிகவும் ஜாக்கிரதையாகவும் பொறுப்புடனும் நடந்துகொள்ள வேண்டும். அவர்கள் செய்யும் எந்தவொரு தவறும் நேரடியாக முதலமைச்சர் விஜயையே போய்ச் சேரும், அவரைப் பாதிக்கும்” என்று அறிவுறுத்தினார்.

தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள இந்த அரசியல் மாற்றம் குறித்துப் பேசுகையில், “இங்கு கடந்த 60 ஆண்டுகளாக ஒரே மாதிரியான அரசியல் கட்டமைப்புதான் நிலவி வந்தது. மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள். அந்தச் சரியான தருணத்தில் விஜய் அரசியலுக்குள் வந்தார். இளைஞர்கள், பெண்கள் மற்றும் சமூக வலைதளங்களின் ஆதரவு விஜயின் வெற்றிக்கு முக்கியக் காரணியாக அமைந்திருக்கிறது” என்று ரஜினிகாந்த் ஒப்புக்கொண்டார்.

“கடந்த 2001ஆம் ஆண்டிலேயே நீங்கள் தனிக்கட்சி தொடங்கியிருந்தால் வெற்றி பெற்றிருக்க வாய்ப்பிருந்ததா?” என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “அப்போது கட்சி தொடங்கியிருந்தால் நூறு சதவீதம் வெற்றி பெற்றிருப்பேன், அதில் எந்தச் சந்தேகமும் இல்லை” என்று வெளிப்படையாகத் தெரிவித்தார். எனினும், தான் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்பதற்கான காரணங்களை மூன்று பக்க அறிக்கையில் ஏற்கனவே தெளிவாக விளக்கியுள்ளதை நினைவு கூர்ந்த அவர், அதற்குப் பிறகும் சிலருக்கு வருத்தம் நீடிக்கலாம் என்றார். ரசிகர்களின் எதிர்கால அரசியல் நிலைப்பாடு குறித்துப் பேசுகையில், தத்தமது விருப்பப்படி எந்தக் கட்சியிலும் இணைந்து செயல்படலாம் என்று ஆரம்பத்திலேயே தான் கூறிவிட்டதாகத் தெரிவித்தார்.

முதலமைச்சரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்காதது குறித்துப் பேசுகையில், “இதுவரை எந்தவொரு முதலமைச்சரின் பதவியேற்பு விழாவிலும் நான் கலந்துகொண்டதில்லை. மேலும், அதற்கான அழைப்பும் எனக்கு வரவில்லை” என்றார். கமல்ஹாசன் முதலமைச்சரை நேரில் சந்தித்துக் கோரிக்கைகளை முன்வைத்தது போல் நீங்களும் செல்வீர்களா என்ற கேள்விக்கு, “தற்போது தயாரிப்பாளர் சங்கம் முதலமைச்சரைச் சந்திக்கவுள்ளது. கமல்ஹாசனும் பார்த்துவிட்டார். நான் வெறும் சம்பிரதாயத்திற்காகச் சென்று சந்திப்பதில் விருப்பமில்லாதவன்” என்று பதிலளித்தார்.

இறுதியாக, ஒரு நடிகராக இருப்பதற்கும் அரசியல்வாதியாக மாறுவதற்கும் உள்ள வேறுபாட்டை ரஜினிகாந்த் சுட்டிக்காட்டினார். “சினிமாவில் ஒருவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டால் கூட குணமடைந்து மீண்டும் வந்து நடித்துவிட முடியும். ஆனால், அரசியல் என்பது அப்படியல்ல; அது கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையோடு பிணைக்கப்பட்ட மிக உன்னதமான, பெரிய பொறுப்பு” என்று கூறித் தனது பேட்டியை நிறைவு செய்தார்.

ரஜினிகாந்தின் இந்தச் செய்தியாளர் சந்திப்பு, வெறும் வதந்திகளுக்கான விளக்கமாக மட்டுமில்லாமல், தமிழக அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள புதிய அதிகார மாற்றத்தை அவர் முழுமையாக ஏற்றுக்கொண்டதன் வெளிப்பாடாகவும் பார்க்கப்படுகிறது. புதிய ஆட்சியைத் திறந்த மனதுடன் பாராட்டியதன் மூலம், பொறுமையுடன் மாற்றத்தை மதிப்பிட வேண்டும் என்ற ஆரோக்கியமான அரசியல் மனநிலையை அவர் விதைத்துள்ளார்.

அரசியலுக்கு வராத காரணத்தை ஏற்கனவே விரிவாக அறிக்கையாக வெளியிட்டதாகவும், அது தனிப்பட்ட முடிவு என்றும் அவர் கூறினார்.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1179

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »