
Tamilnadu , May 12 : தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள், பள்ளிகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 717 TASMAC கடைகளை இரு வாரங்களில் மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் TASMAC மதுபான கடைகள் தொடர்பாக மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் இயங்கி வந்த 717 TASMAC மதுபான சில்லறை விற்பனை கடைகளை இரு வாரங்களுக்குள் மூட தமிழக முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடு தற்போது வெளியாகி மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் தற்போது 4,765 மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் நலன் கருதி முக்கிய நடவடிக்கையாக இந்த 717 கடைகள் மூடப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது..

எந்தெந்த பகுதிகளில் உள்ள TASMAC கடைகள் மூடப்படுகின்றன?
அறிக்கையின் படி, வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் அமைந்துள்ள TASMAC கடைகள் முதற்கட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அதன்படி:
- வழிபாட்டு தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள்
- கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள்
- பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள்
என மொத்தம் 717 TASMAC மதுபான கடைகள் இரு வாரங்களுக்குள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பொதுமக்கள் மற்றும் பெண்கள் அதிகம் கூடும் பகுதிகளில் உள்ள மதுபான கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது சமூக ரீதியாக முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.
CM விஜய் அரசின் முதல் பெரிய சமூக நடவடிக்கையா?
தமிழக வெற்றி கழக ஆட்சி அமைந்த பிறகு முதலமைச்சர் விஜய் எடுக்கும் முக்கிய நிர்வாக முடிவுகளில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. பிரச்சார காலத்திலிருந்தே பெண்கள் பாதுகாப்பு, போதை தடுப்பு மற்றும் இளைஞர்கள் நலன் குறித்து தொடர்ந்து பேசி வந்த விஜய், ஆட்சியின் ஆரம்ப கட்டத்திலேயே TASMAC அமைப்பில் மாற்றத்தை தொடங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் மதிப்பிடுகின்றனர்.
குறிப்பாக பள்ளிகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகே TASMAC கடைகள் செயல்படுவது குறித்து பல ஆண்டுகளாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு இருந்து வந்தது. மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது தவறான தாக்கம் ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டன. இந்த சூழலில் 717 கடைகளை நேரடியாக மூடும் முடிவு, சமூக பாதுகாப்பை மையமாகக் கொண்ட நிர்வாக நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்த 717 TASMAC கடைகளையும் இரண்டு வாரங்களுக்குள் மூட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்கான நிர்வாக மற்றும் துறை சார்ந்த பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக பட்டியல் தயார் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் உள்ள கடைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் TASMAC மூலம் ஆண்டுதோறும் அரசுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் 717 கடைகளை மூடுவது வருவாய் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற விவாதமும் எழுந்துள்ளது. ஆனால் சமூக நலன், பெண்கள் பாதுகாப்பு மற்றும் கல்வி சூழலை பாதுகாப்பது போன்ற அம்சங்களை முன்னிறுத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் இது முழுமையான மதுவிலக்கு நடவடிக்கை அல்ல என்றும், பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள கடைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகவே பார்க்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதை தடுப்பு மீது கவனம்
முதலமைச்சராக பொறுப்பேற்ற உடனேயே CM விஜய் மூன்று முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டதாக தகவல்கள் வெளியாகின. அதில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் முக்கிய இடம் பெற்றது. பிரச்சார காலத்திலிருந்தே “பெண்கள் பாதுகாப்பில் எந்த சமரசமும் இருக்காது” என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த விஜய், அதனை ஆட்சியின் ஆரம்ப கட்டத்திலேயே செயல்படுத்தும் நோக்கில் நகர்கிறார் என்ற பார்வை அரசியல் வட்டாரங்களில் உருவாகியுள்ளது. குறிப்பாக “சிங்கப்பெண்கள் அதிரடிப்படை” போன்ற பெண்கள் பாதுகாப்பு சார்ந்த திட்டங்கள் குறித்து அறிவிக்கப்பட்டிருப்பது அதற்கான அடையாளமாக பார்க்கப்படுகிறது.
அதேபோல் காவல்துறையில் தனியாக போதைப் பொருள் தடுப்பு பிரிவை உருவாக்கவும், அதற்காக தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..








