
சிறப்பு செய்தி : விஜயின் முதல்வர் பதவியேற்பு, உறுதிமொழி, சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, ஊழல் எதிர்ப்பு குறித்து ரங்கராஜ் பாண்டே பகிர்ந்த அரசியல் பகுப்பாய்வு.
“ஜோசப் விஜய் எனும் நான் இந்திய அரசியல் அமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும் மாறா பற்றும் கொண்டிருப்பேன்” என்ற வார்த்தைகளை ஒரு முறை கூட காகிதத்தை பார்க்காமல், நேராக கேமராவை நோக்கி, மக்களை பார்த்தபடி கூறிய தருணம் தமிழ்நாட்டு அரசியலில் பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது.
முதல்வராக பதவியேற்ற நடிகர் விஜயின் அந்த தருணம் அரசியல் ரீதியாக மட்டுமல்ல, உளவியல் ரீதியாகவும் பெரிதாக பேசப்படுகிறது. குறிப்பாக “ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதி மொழிகிறேன்” என்ற வரி சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவியது. மூத்த பத்திரிகையாளர் Rangaraj Pandey இந்த நிகழ்வை பற்றி பகிர்ந்த கருத்துகள் தற்போது அரசியல் வட்டாரங்களில் முக்கிய விவாதமாக மாறியுள்ளன.
“மனப்பாடம் அல்ல.. உணர்வுபூர்வமான உறுதி” என்ற பாண்டே
ரங்கராஜ் பாண்டே தனது பகுப்பாய்வில் முக்கியமாக சுட்டிக்காட்டியது, விஜய் உறுதிமொழியை வெறும் நடைமுறையாக பார்க்கவில்லை என்பதையே.
அவர் கூறியதாவது:
வழக்கமாக பதவியேற்பு நிகழ்ச்சிகளில் பலர் உறுதிமொழியை வாசித்து கூறுவார்கள். தவறு ஏற்பட்டால் மீண்டும் படிக்க சொல்வார்கள். ஆனால் விஜய் எந்த வார்த்தையையும் பார்க்காமல், இடைவெளி இல்லாமல் முழுமையாக கூறியது தன்னம்பிக்கையையும் மனத் தயார்ப்பாட்டையும் காட்டுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
அதேபோல் கையெழுத்திடும் தருணத்திலும் விஜய் எழுந்து நின்றபடி கையெழுத்திட்டது, மூத்த தலைவர் கே. செங்கோட்டையன் பதவியேற்றபோது எழுந்து மரியாதை செலுத்தியது போன்ற விஷயங்களையும் பாண்டே கவனிக்க வேண்டிய அரசியல் அடையாளங்களாக விவரித்தார்.
“மக்கள் விரும்பிய மாற்றத்தின் விளைவு” என்கிற அரசியல் வாசிப்பு
தமிழ்நாட்டில் நீண்ட காலமாக “இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாற்று தேவை” என்ற மனநிலை உருவாகி வந்ததாகவும், அதை சரியாக புரிந்துகொண்டவர் விஜய் எனவும் பாண்டே கூறுகிறார்.அவரது பார்வையில், இந்த வெற்றி வெறும் சினிமா புகழால் கிடைத்தது அல்ல. மக்கள் மனதில் உருவான அதிருப்தி, மாற்றம் வேண்டுமெனும் எதிர்பார்ப்பு மற்றும் கூட்டணியில்லாமல் தனித்து நிற்கும் அரசியல் முடிவு ஆகியவை இணைந்ததன் விளைவாக இந்த வெற்றி உருவானது.
அவர் குறிப்பிட்ட முக்கியமான அம்சம் என்னவென்றால்: “ஸ்டாலின் வேண்டாம் என்ற மனநிலை இருந்தது. ஆனால் அதற்கு மாற்றாக யார் என்ற கேள்வியில் குழப்பம் இருந்தது. அந்த இடைவெளிக்குள் விஜய் வந்தார்” என்பதே.
சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு மீது விஜய் வைத்த கவனம்
விஜய் தனது ஆரம்ப அறிவிப்புகளில் இலவச திட்டங்களை விட சட்டம் ஒழுங்கு, ஊழல் இல்லாத நிர்வாகம், பெண்கள் பாதுகாப்பு போன்றவற்றை முன்னிலைப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது. பாண்டே கூறியபடி: “ஒரு பெண் இரவு 12 மணிக்கும் பாதுகாப்பாக வெளியே செல்ல முடிந்தால் அதுவே நல்லாட்சி” என்ற கருத்தே இந்த அரசின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என அவர் விளக்கினார். மேலும் போதைப்பொருள் கட்டுப்பாடு, நிர்வாகத்தில் தொழில்நுட்ப பயன்பாடு, லஞ்சமில்லா சேவைகள், e-governance, வீட்டுக்கு ரேஷன் விநியோகம் போன்ற விஷயங்களும் எதிர்கால ஆட்சியின் முக்கிய அடையாளங்களாக இருக்கலாம் என அவர் கூறினார்.
“ஆடாதீங்க” என்ற விஜய் எச்சரிக்கை ஏன் முக்கியம்?
தனது கட்சியினருக்கே “ஆடாதீங்க” என விஜய் எச்சரிக்கை விடுத்தது அரசியல் ரீதியாக மிகப் பெரிய செய்தியாக மாறியுள்ளது.
கடந்த ஆட்சிகளில் பொதுமக்கள் எதிர்கொண்ட முக்கிய பிரச்சனைகள் அதிகார துஷ்பிரயோகம், உள்ளூர் அளவிலான அழுத்தங்கள், கட்சி ஆதிக்கம் போன்றவை என்பதால், விஜயின் இந்த எச்சரிக்கை நடுத்தர மற்றும் சாதாரண மக்களிடம் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
“மக்களுக்கு பெரிய இலவச திட்டங்கள் வேண்டாம். தொந்தரவு இல்லாத வாழ்க்கை வேண்டும்” என்ற பாண்டேயின் கருத்து , மேலும் பதவியேற்பு நிகழ்ச்சியில் “வந்தே மாதரம்” பாடப்பட்ட வரிசை குறித்தும் சர்ச்சை எழுந்தது.
இதற்கு பதிலளித்த பாண்டே, தேசிய கீதம், தேசிய பாடல், தமிழ் தாய் வாழ்த்து ஆகியவை நடைமுறைகளின் அடிப்படையில் இடம்பெற்றதாக கூறினார். அவரது விளக்கத்தில், “தமிழ்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்தில் பாடப்பட்டது என்பது தமிழ் அடையாளத்தை குறைப்பதல்ல” என்றும், மத்திய அரசின் சமீபத்திய வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப தேசிய பாடலுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
விஜயின் ஆட்சிக்கு மக்கள் ஏன் காத்திருக்கிறார்கள்?
இந்த பதவியேற்பு விழாவின் மையத்தில் இருந்த முக்கிய உணர்வு “மாற்றம்” என்பதுதான். விஜயை ஆதரித்தவர்கள் சினிமா ரசிகர்கள் மட்டுமல்ல, நிர்வாக மாற்றத்தை எதிர்பார்த்த சாதாரண மக்கள் என்றும் பாண்டே குறிப்பிட்டார்..








