சண்டிகர் , ஏப்ரல் 29 : கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி சண்டிகரில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த விறுவிறுப்பான போட்டியில் 223 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி துரத்திக் கொண்டிருந்தது. ஆட்டத்தின் 16வது ஓவர் நடைபெற்ற போது மைதான நேரடி ஒளிபரப்பு கேமராக்கள் ராஜஸ்தான் அணியின் ஓய்வறையை நோக்கி திரும்பின. அப்போது சக வீரர்கள் முன்னிலையில் அமர்ந்திருந்த கேப்டன் ரியான் பராக் இ-சிகரெட் மூலம் வேப்பிங் (Vaping) செய்ததாகக் கூறப்படும் காட்சிகள் திரையில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தற்போதைய விதிமுறைகளின்படி மைதான வளாகம் அல்லது வீரர்கள் தங்கும் ஓய்வறைப் பகுதிகளில் புகைப்பிடிப்பதோ அல்லது வேப்பிங் போன்ற செயல்களில் ஈடுபடுவதோ முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. களத்தில் அணியை வழிநடத்தும் ஒரு கேப்டனே சக வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய இடத்தில் இந்த விதிமுறை மீறலில் ஈடுபட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்த விவகாரம் கிரிக்கெட் மைதான ஒழுங்குமுறைகளைத் தாண்டி இந்திய சட்டப்படியும் கடுமையான குற்றமாகப் பார்க்கப்படுகிறது. இந்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு கொண்டு வந்த சட்டத்தின்படி நாடு முழுவதும் இ-சிகரெட் பயன்பாடு, அதன் விற்பனை மற்றும் சேமிப்பு ஆகியவை முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளன. இந்த சட்டத்தின்படி முதல் முறை தவறு செய்பவர்களுக்கு ஒரு ஆண்டு வரை சிறைத்தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதே தவறை மீண்டும் செய்யும் பட்சத்தில் மூன்று ஆண்டுகள் சிறை மற்றும் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க சட்டத்தில் இடமுண்டு.
தற்போது சர்ச்சைக்குரிய வீடியோ காட்சிகள் பரவி வரும் நிலையில் பிசிசிஐ இந்த விவகாரத்தை அதிகாரப்பூர்வமாக கையில் எடுத்தால் ரியான் பராக் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்று கூறப்படுகிறது. முதற்கட்டமாக அவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து அபராதம் விதிக்கப்படலாம் அல்லது சில போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை சட்ட ரீதியான விசாரணையாக இது மாறினால் அவரிடம் இருக்கும் இ-சிகரெட்டின் அளவைப் பொறுத்து சட்ட நடவடிக்கைகள் அமையக்கூடும்.
இந்த விவகாரத்தால் சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் இருவேறான கருத்துகளை முன்வைத்து விவாதித்து வருகின்றனர். ஒரு தரப்பினர் இது ஒரு வீரரின் தனிப்பட்ட விஷயம் என்றும் போட்டி அழுத்தத்தின் காரணமாக நடந்திருக்கலாம் என்றும் அவருக்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர். ஆனால் பெரும்பாலானோரோ சர்வதேச அளவில் பல கோடி இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் ஒரு நட்சத்திர ஆட்டக்காரர் பொதுவெளியில் இப்படி பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதை ஏற்க முடியாது என்று கண்டித்துள்ளனர்.







