
சென்னை , ஏப்ரல் 24 : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் துபாய்க்குப் பயணம் மேற்கொண்டிருப்பது மாநில அரசியல் வட்டாரத்தில் தற்போதைய முக்கிய விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. தீவிர தேர்தல் பரப்புரைகளுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த வெளிநாட்டுப் பயணம் குறித்து சமூக வலைதளங்கள் மற்றும் அரசியல் களத்தில் விவாதங்கள் எழத் தொடங்கியுள்ளன.
தமிழகத்தின் 234 தொகுதிகளுக்குமான சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23 அன்று அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என்ற உறுதியான நம்பிக்கையை உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார். காங்கிரஸ் மற்றும் இடதுசாரி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்ட திமுக, ஆட்சியைத் தக்கவைக்க அணைத்து வியூகங்களையும் வகுத்திருந்தது. அதேநேரம், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணி மற்றும் பிற அரசியல் கட்சிகளும் இந்தத் தேர்தலில் கடுமையான சவாலை அளித்துள்ளதால், தேர்தல் களம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ALso : IPL 2026 இல் மும்பை இந்தியன்ஸ் தோல்வி – ஹார்திக் பாண்ட்யா முடிவை கடுமையாக விமர்சித்த அஷ்வின்
இந்தச் சூழலில், வாக்குப்பதிவு முடிவடைந்த உடனே துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குடும்பத்துடன் துபாய் புறப்பட்டுச் சென்றார். பொதுவாக, மிக நீண்ட மற்றும் கடுமையான தேர்தல் பணிகளுக்குப் பிறகு முக்கிய அரசியல் தலைவர்கள் சிலர் சில நாட்கள் தங்களை ஓய்வு படுத்திக் கொள்வதற்காகப் பயணம் மேற்கொள்வது வழக்கம். அந்த வகையிலேயே உதயநிதி ஸ்டாலினின் இந்த துபாய் பயணமும் முழுக்க முழுக்க ஒரு தனிப்பட்ட ஓய்வுப் பயணம் என்று அறிவாலயத் தரப்புகள் தரப்பில் கூறப்படுகிறது.
இருப்பினும், வாக்கு எண்ணிக்கை முடிந்து அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகவே இந்த வெளிநாட்டுப் பயணம் அமைந்துள்ளதால், இது அரசியல் ரீதியான கவனத்தையும் பெற்றுள்ளது. இந்தத் தேர்தலுக்கு முன்னதாக, திமுகவின் நட்சத்திரப் பேச்சாளராக மாநிலம் முழுவதும் உதயநிதி ஸ்டாலின் மிகத் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட அவர், தனது சொந்தத் தொகுதி மட்டுமன்றி தமிழகம் முழுவதும் 135-க்கும் மேற்பட்ட தொகுதிகளுக்கு நேரடியாகச் சென்று வாக்குச் சேகரித்தார். தனது பிரச்சாரக் கூட்டங்கள் எங்கும் பிரிவினைவாத அரசியலை வாக்காளர்கள் முற்றிலுமாகத் தோற்கடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முதன்மையாக முன்வைத்துப் பேசினார்.







