எரிந்த காரில் கருகி கிடந்த 4 உடல்கள் ; தொழில் நஷ்டத்தால் தற்கொலையா ! சிசிடிவி மூலம் காரின் பதிவெண் தேடும் காவல்துறை..

IMG 20260317 WA0012 1

திசையன்விளை, மார்ச் 17, 2026;
திசையன்விளையில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள காரின் அருகே 2 லிட்டர் பிளாஸ்டிக் கேன்கள் 2 மற்றும் 1 லிட்டர் தண்ணீர் கேன்கள் 3, அதேபோல் 1 மதுபாட்டில் கிடந்துள்ளது. அதில் 1 பாட்டிலில் மட்டும் பாதியளவு தண்ணீர் இருந்துள்ளது. காரில் உள்ள 4 உடல்களும் ஒரே குடும்பமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் தொழிலில் நஷ்டம் போன்ற ஏதேனும் காரணத்தினால் காருக்குள் இருந்துகொண்டு பெட்ரோலை ஊற்றி தீவைத்து குடும்பத்துடன் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.
சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னகுமார் நேரில் விசாரணை நடத்தினார். தொடர்ந்து அவர் கூறியதாவது:-
இது காலையில் நடந்த விபத்து போல் தோன்றுகிறது. ஏனெனில் காரை தொட்டு பார்க்கும்போது அதில் வெப்பம் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. தடய அறிவியல் நிபுணர்கள் வந்து பார்வையிட்டு வருகிறார்கள். எரிந்த நிலையில் உள்ள உடலில் வேறு காயங்கள் எதுவும் இல்லை. விபத்தில் தீப்பிடித்து எரிந்த நிலையில் 4 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது என்பது தான் தற்போதைய தகவல்.
இவ்வாறு அவர் கூறினார்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே பெட்டை குளத்திலிருந்து கல்லுவிளை செல்லும் சாலையில் உள்ள பனங்காடு பகுதியில் இன்று அதிகாலை எரிந்த நிலையில் நின்று கொண்டிருந்த காரில் 4 பேர் கருகிய உடல்களாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்பகுதியில் வயல்வெளிக்கு சென்றவர்கள், பனைமரத்தடியில் கார் ஒன்று முழுவதும் எரிந்து எலும்புக்கூடாக காட்சியளித்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து, திசையன்விளை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் எழில் சுரேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

காரின் உள் பகுதியில் டிரைவர் இருக்கையில் ஒருவரும், பின்புற இருக்கைகளில் மூவரும் முற்றிலும் தீயில் கருகிய நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது. தகவல் அறிந்து வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தார்.

மேலும் சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரசன்னகுமார் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார். தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் இருந்து முக்கிய ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் யாரும் எரிந்த காரின் அருகில் செல்லாதபடி போலீசார் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முதல் கட்ட விசாரணையில், காரில் டிரைவர் இருக்கையில் ஆண் ஒருவரும், பின்புறத்தில் பெண் ஒருவரும், அவரை ஒட்டி இருபுறமும் இரண்டு குழந்தைகளும் அமர்ந்திருந்ததற்கான தடயங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் — கணவன், மனைவி மற்றும் 2 குழந்தைகள் — இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் காரின் சாவி ‘ஆன்’ நிலையில் இருந்ததும், டிரைவர் இருக்கை சாய்ந்த நிலையில் இருந்ததும் தெரியவந்துள்ளது. இதனால் நீண்ட தூர பயணமாக வந்தவர்கள் ஓய்வெடுக்க கார் ஓரமாக நிறுத்தி தூங்கியபோது, ஏ.சி. தொடர்பான கோளாறு அல்லது கசிவு காரணமாக தீப்பற்றி எரிந்திருக்கலாமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திசையன்விளை கார் எரிந்த சம்பவம் …

மெயின் ரோட்டில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் கார் பதிவு எண் கண்டறியும் முயற்சியில் களமிறங்கிய காவல்துறை..

கார் பதிவெண்ணை அறிய சிசிடிவி ஆய்வு செய்யும் போலீசார்

கார் தீப்பற்றி எரிந்த சம்பவத்தில் காரின் பதிவெண் கூட தெளிவாக தெரியவில்லை. அந்த அளவுக்கு கார் முற்றிலுமாக எரிந்துள்ளது. இதனால் திசையன்விளை-நாங்குநேரி மெயின்ரோட்டில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை போலீசார் ஆய்வு செய்து அதில் காரின் பதிவெண் தெரிகிறதா என்பதை போலீசார் ஆய்வு செய்த வருகின்றனர். மேலும் கார் எத்தனை மணிக்கு அந்த சாலையில் சென்று இருக்க வேண்டும், எத்தனை மணிக்கு சம்பவம் நடந்திருக்க வேண்டும் என்பதை அறிந்திட பிரதான சாலையில் உள்ள கட்டிடங்களில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி.க்களை ஆய்வு செய்யும் பணியை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர் என மாவட்ட காவல்துறை தகவல் தெரிவித்துள்ளார்.

news desk
news desk
Articles: 94

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »