நெல்லை ,ஜூன் 18: திருநெல்வேலி சந்திப்பில் இருந்து மானூர்,உக்கிரன்கோட்டை,தெற்கு மற்றும் வடக்கு வாகைகுளம் வழியாக ஆலங்குளம் அருகேயுள்ள ரெட்டியார்பட்டி வரை நாள்தோறும் 4C என்ற தடம் எண் கொண்ட அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. உக்கிரன்கோட்டை மற்றும் ரெட்டியார்பட்டி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் தெற்கு மற்றும் வடக்கு வாகைகுளம் கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் தங்களது அன்றாடப் பள்ளிப் பயணத்திற்கு இந்தப் பேருந்தையே முழுமையாகச் சார்ந்துள்ளனர்.

காலையில் பள்ளி தொடங்கும் நேரத்தில் இந்த வழித்தடத்தில் ஒரே ஒரு அரசுப் பேருந்து மட்டுமே இயக்கப்படுவதால்,கிராமப்புற மாணவர்களின் கூட்ட நெரிசல் இதில் கட்டுக்கடங்காமல் காணப்படுகிறது. போதிய இடவசதி இல்லாத காரணத்தால்,வேறு வழியின்றி நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் தினந்தோறும் பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கியபடி உயிருக்கு ஆபத்தான முறையில் பயணம் செய்ய வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த வழித்தடத்தில் கூடுதல் பேருந்து சேவைகளை இயக்க வேண்டும் என்பது அப்பகுதி கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல்: 2,960 வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்க்கும் பணி துவக்கம்
இந்த நிலையில்,இன்று காலை வழக்கம்போல 4C அரசுப் பேருந்து தெற்கு வாகைகுளம் பகுதிக்கு வந்தது. அப்போது பள்ளிக்குச் செல்ல வேண்டிய மாணவ மாணவிகள் பேருந்தில் ஏற முயன்றனர். ஆனால் பேருந்தின் உள்ளே இடமில்லாததால்,கணிசமான மாணவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை. இதன் காரணமாகப் பல மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கிய நிலையிலேயே ஆபத்தான பயணத்தைத் தொடர வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மாணவ மாணவிகளும் அப்பகுதி பொதுமக்களும் பேருந்தை மேற்கொண்டு செல்ல விடாமல் சிறைபிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி நேரத்தின்போது நடைபெற்ற இந்த எதிர்பாராத போராட்டத்தால் அந்த கிராமப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்துத் தகவல் அறிந்த மானூர் காவல் ஆய்வாளர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து,படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்ய முயன்ற மாணவ மாணவிகளைப் பேருந்தின் உள்ளே பாதுகாப்பாக ஏற்றி,அவர்களைப் பள்ளிக்கு அனுப்பி வைத்தார். மேலும்,பள்ளி மாணவர்களின் இந்த போக்குவரத்துப் பிரச்சினைக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,இனிமேல் இதுபோன்ற ஆபத்தான சூழல் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளப்படும் என்றும் காவல் ஆய்வாளர் பொதுமக்களிடம் உறுதியளித்தார்.
அண்மையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது,மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகனிடம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணிப்பது குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்குப் பதிலளித்த மாவட்ட ஆட்சியர்,இப்பிரச்சினை குறித்து உரிய ஆய்வு நடத்தப்பட்டுத் தேவையான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார்.







