சென்னை ,ஜூன் 16: தமிழகத்தின் தற்போதைய நிதி மேலாண்மை மற்றும் பொருளாதார நிலை குறித்த விரிவான வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று மாலை 5:30 மணியளவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறார். தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்ற பின்னர் வெளியிடப்படும் முதல் முக்கிய நிதியாதார ஆவணமாக இது பார்க்கப்படுகிறது.

முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது பதவியேற்பு மேடையிலேயே தமிழகத்தின் தற்போதைய நிதியாதாரங்கள் மற்றும் கடன் சுமைகள் குறித்த உண்மை நிலவரங்களை மக்கள் முன் கொண்டு சேர்க்கும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த விரிவான அறிக்கையைத் தயாரிப்பதற்குக் கால அவகாசம் தேவைப்பட்ட நிலையில் ,நிதித்துறையின் ஆய்வுகள் முழுமையாக நிறைவடைந்து இன்று மாலை அறிக்கை பொதுவெளியில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக் காலத்தில் ,அப்போதைய நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 100 பக்கங்களுக்கும் மேலான ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருந்தார். அன்றைய காலகட்டத்தில் தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் சுமை 5.77 லட்சம் கோடியாகப் பதிவாகியிருந்தது. அதன் அடிப்படையில் மாநிலத்தின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் சராசரியாக 2,63,976 ரூபாயும் தனிநபர் ஒருவரின் மீது தலா 1.10 லட்சம் ரூபாயும் பொதுக்கடன் சுமை இருப்பதாக அன்றைய அறிக்கையில் கணக்கிடப்பட்டிருந்தது.
மேலும் 2013-14 ஆம் நிதியாண்டு முதல் மாநிலம் தொடர் வருவாய் பற்றாக்குறையைச் சந்தித்து வந்ததும் ,2020-21 இல் மாநில உற்பத்தியில் இந்த பற்றாக்குறை 3.16 விழுக்காடாக உயர்ந்திருந்ததும் முந்தைய அறிக்கையின் மூலம் தெரியவந்தது. பொதுத்துறை நிறுவனங்களின் நஷ்டம் குறிப்பாக மின்சாரத் துறையின் டான்ஜெட்கோ நிறுவனம் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு 2.36 ரூபாய் இழப்பைச் சந்தித்ததும் ,போக்குவரத்துப் பொதுத்துறை நிறுவனங்களில் பேருந்துகள் இயக்கப்பட்ட ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 51.15 ரூபாய் இழப்பு பதிவாகியிருந்ததும் சுட்டிக்காட்டப்பட்டது. போக்குவரத்துத் துறையின் ஒட்டுமொத்த கடன் சுமை சுமார் 1.99 லட்சம் கோடியாக இருந்த வேளையில் ,மாநிலத்தின் ஒட்டுமொத்த வருவாய் விகிதம் 8.4 சதவீதத்திலிருந்து 5.4 சதவீதமாகக் குறைந்திருந்தது. அரசு வழங்கும் மானியங்களைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த வருவாய் செலவினத்தில் மானியங்களின் பங்கு 27.06 விழுக்காடாக உயர்ந்திருந்ததும் ,அதில் மின்சார மானியத்தின் பங்களிப்பு மிக அதிகமாக இருந்ததும் கடந்த 2021 ஆம் ஆண்டு அறிக்கையில் விரிவாகப் பட்டியலிடப்பட்டிருந்தது.
தற்போது புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில் ,கடந்த ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு துறையும் எந்தெந்த அளவுகளில் செயல்பட்டுள்ளன ,அவற்றின் தற்போதைய கடன் சுமை எவ்வளவு ,இனிவரும் காலங்களில் மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் தேவையான வருவாய் தேவைகள் என்னென்ன என்பது குறித்த துல்லியமான தரவுகள் இன்றைய வெள்ளை அறிக்கையில் இடம்பெறுகின்றன. அத்துடன் ஒவ்வொரு துறையின் தற்போதைய வருவாய் ஈட்டும் திறன் எந்த அளவில் உள்ளது என்பதும் இதில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இந்த வெள்ளை அறிக்கை தயாரிப்பிற்கு முன்னதாக ,முதலமைச்சர் ஜோசப் விஜய் அனைத்து அரசுத் துறைகளின் செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் தொடர்ச்சியான ஆய்வுக்கூட்டங்களை நடத்தினார். ஒவ்வொரு துறையிலும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் ,உடனடியாகச் செய்யப்பட வேண்டிய கட்டாய நடவடிக்கைகள் ,நிலுவையில் உள்ள கடன் சுமை மற்றும் புதிய திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவைப்படும் நிதியாதாரம் ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில் முதல்கட்டமாக அனைத்துத் துறைகளிடமிருந்தும் பெறப்பட்ட விரிவான புள்ளிவிவரங்கள் மற்றும் நிதித்துறை அதிகாரிகளின் கள ஆய்வுகளின் தொகுப்பாக இந்த வெள்ளை அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு நிர்வாகத்தின் அடுத்தகட்டப் பொருளாதார நகர்வுகளுக்கும் வரவிருக்கும் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளுக்கும் வழிகாட்டியாக அமையவுள்ள இந்த வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று மாலை செய்தியாளர்கள் முன்னிலையில் முறைப்படி வெளியிடுகிறார்.








