சாதிவெறி தேசத்தின் சாபக்கேடு; சாதியை தாண்டி ஒரு  அரசு அமைந்துள்ளது; மக்களின் மனமாற்றமே உண்மையான ஜனநாயகம்: மதுரை உயர் நீதிமன்ற கிளை அதிரடி!!

மதுரை , ஜூன் 12: நெல்லை ஐடி பொறியாளர் கவின் ஆணவக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவல் உதவி ஆய்வாளர் சரவணனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையின்போது சாதிவெறி மற்றும் ஆணவக் கொலைகளுக்கு எதிராக நீதிபதி புகழேந்தி வெளியிட்ட கருத்துக்கள் தமிழக அரசியல் மற்றும் சமூக தளங்களில் தற்போதைய மிக முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளன.

image 165

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஐடி பொறியாளர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது. இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய சுஜித்தின் தந்தையான காவல் உதவி ஆய்வாளர் சரவணன், தாய் கிருஷ்ணகுமாரி மற்றும் இவர்களின் உறவினர் ஜெயபால் ஆகியோர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து அவர்களைக் கைது செய்தது. இந்த வழக்கு தற்போது நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட நீதிமன்றத்தில் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவல் உதவி ஆய்வாளர் சரவணன் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

ALso read : சாத்தான்குளம் வழக்கில் முன்னாள் காவலர்களுக்கு அதிர்ச்சி.. ஏ-கிளாஸ் சிறை கோரிக்கை நிராகரிப்பு!

இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு விசாரணைக்கு மனுதாரர் முழு ஒத்துழைப்பு வழங்குவார் என்றும் சாட்சியங்களைக் கலைக்க மாட்டார் என்றும் நீதிமன்றம் விதிக்கும் அத்தனை நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுவார் என்றும் வாதிட்டார். இதனைத் தொடர்ந்து பல்வேறு நிபந்தனைகளுடன் நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மனுதாரர் இந்த வழக்கின் சாட்சியங்களைச் சந்திக்கவோ அல்லது அவர்களைக் கலைக்கவோ எந்தவொரு முயற்சியிலும் ஈடுபடக் கூடாது என எச்சரித்த நீதிபதி, மறு உத்தரவு வரும் வரை மனுதாரர் கோவையில் தங்கி அங்குள்ள காவல் நிலையத்தில் தினசரி நேரில் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பிணையப் பத்திரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன.

இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது ஆணவக் கொலைகள் குறித்தும் சமூகத்தில் வேரூன்றியிருக்கும் சாதிவெறி குறித்தும் மதுரை அமர்வு தெரிவித்த கருத்துக்கள் மிக முக்கியமானவையாகப் பார்க்கப்படுகின்றன. கௌரவக் கொலை என்பது சாதியப் பாகுபாட்டின் உச்சகட்டம் மற்றும் சாதிவெறியின் நேரடி வெளிப்பாடு என்று சாடிய நீதிபதி, சாதிவெறி என்பது இந்த தேசத்திற்குப் பிடித்த ஒரு சாபக்கேடு என்று உச்ச நீதிமன்றமே குறிப்பிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார். மேலும் துரதிர்ஷ்டவசமாக இது போன்ற கௌரவக் கொலைகளின் முதல் சம்பவம் இதுவல்ல என்றும் கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் மாநிலத்தில் 59 கௌரவக் கொலைகள் பதிவாகி உள்ளதாகவும் நீதிபதி வருத்தத்துடன் பதிவு செய்தார். சாதிவெறி மக்களின் மனதில் எவ்வளவு ஆழமாக வேரூன்றி ஒட்டுமொத்த சமூக அமைப்பையும் சீரழித்து வருகிறது என்பதற்கு இந்த புள்ளிவிவரங்களே சாட்சி என்றும் அவர் குறிப்பிட்டார்.

சமூகத்தில் நிலவும் சாதிய மனநிலை குறித்துப் பேசிய நீதிபதி, ஒருவர் எவ்வளவு சக்தி வாய்ந்தவராக அல்லது சலுகைகள் பெற்றவராக இருந்தாலும் சமூகத்தில் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வடிவத்தில் சாதி வெறியைக் கொண்டுள்ளனர் என்று தெரிவித்தார். இந்த கசப்பான உண்மையிலிருந்து மதுரை அமர்வு நீதிபதிகளாகிய நாங்களும் தப்பவில்லை என்று குறிப்பிட்ட அவர் நீதிமன்ற வழக்குகள் அனைத்தும் முற்றிலும் தகுதியின் அடிப்படையிலேயே தீர்க்கப்பட்டாலும் கூட நாங்கள் வழங்கும் உத்தரவுகளுக்குச் சாதியின் அடிப்படையில் உள்நோக்கங்கள் கற்பிக்கப்படுவது வேதனையளிப்பதாகக் கூறினார். காமராஜர், முத்துராமலிங்க தேவர், வாவு சிதம்பரம் போன்ற மாபெரும் மக்கள் தலைவர்கள் கூட தற்போது சாதி அடிப்படையில் மட்டுமே சுருக்கப்பட்டு முன்னிறுத்தப்படுகிறார்கள் என்றும் மக்களின் இந்த ஒட்டுமொத்த மனநிலையை மாற்ற வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

இத்தகைய மனமாற்றத்தை ஒரு அரசால் மட்டுமே முழுமையாகக் கொண்டுவர முடியும் என்பதால் அதற்கான வலுவான முன்னெடுப்புகளை அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்று மதுரை அமர்வு அறிவுறுத்தியுள்ளது. சில அரசியல் கட்சிகள் தங்களின் வாக்குகளைத் திரட்டுவதற்காகச் சாதியைப் பயன்படுத்தி ஏற்கனவே சமூகத்தில் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல இந்த சமூகத் தீமைக்கு மேலும் தூபம் போடுகின்றன என்று நீதிபதி கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக இந்த சாதிய மனப்பான்மை தென் மாவட்டங்களில் மிக அதிகமாகப் பரவியுள்ளது என்றும் நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக்காட்டினார்.

நமது எல்லையில் ராணுவ வீரர்கள் எதிரியின் தாக்குதலை எதிர்கொண்டு தாய்நாட்டைக் காப்பதற்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்யும்போது அவர்களின் ரத்தத்திலோ அல்லது தேசபக்தியிலோ எந்தவொரு சாதியின் முத்திரையும் இருப்பதில்லை என்று குறிப்பிட்ட நீதிபதி, அவர்களின் வாழ்க்கையும் தியாகமும்தான் நமது அரசியலமைப்பின் அடித்தளமாக விளங்கும் ஒற்றுமை மற்றும் சமத்துவக் கொள்கைகளை உள்ளடக்கிய சான்றுகளாகத் திகழ்கின்றன என்றார். கௌரவக் கொலைகளில் எந்தவொரு கௌரவமும் இல்லை என்பதும் அது ஒரு வெட்கக்கேடான செயல் என்பதும் சமூகத்தால் உணரப்பட வேண்டும் என்று கூறிய நீதிபதி, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது மக்கள் சாதி மற்றும் சமூகம் போன்ற காரணிகளைப் பெருமளவில் புறக்கணித்துத் தங்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து ஒரு அரசாங்கத்தை அமைத்துள்ளனர் என்று பாராட்டினார்.

மக்களின் இந்த அரசியல் மனநிலை அவர்களின் சமூக வாழ்க்கையிலும் பிரதிபலித்து முழுமையாக மாறும்போதுதான் அரசாங்கத்தால் உண்மையான மாற்றத்தைக் கொண்டுவர முடியும். எனவே இந்த அரசு வெறும் நிர்வாகத்தோடு நின்றுவிடாமல், மக்களின் மனதிலிருந்து சாதியை முற்றிலும் ஒழிப்பதற்கான முழுப் பொறுப்பையும் முறையான முன்முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு மிகத் தெளிவாகத் தனது உத்தரவில் வலியுறுத்தியுள்ளது.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1213

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »