அரியலூர் , ஜூன் 11 : அரியலூர் அருகே பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியர் ஒருவரை அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை அடுத்த பூண்டி பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக அகஸ்டின் மங்கலராஜ் (54) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் கடந்த சில நாட்களாகத் தவறான நோக்கத்தில் தொடுதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் தனது வீட்டில் இருந்தபோது ஆங்கில ஆசிரியர் அகஸ்டின் மங்கலராஜ் வகுப்பறையில் தன்னைத் தவறான நோக்கில் தொட்டுப் பேசுவதாக சக மாணவியிடம் தெரிவித்துள்ளார். மாணவிகளின் இந்த உரையாடலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த மாணவியின் தாயார் மறுநாள் காலையிலேயே நேரடியாகப் பள்ளிக்குச் சென்று இதுகுறித்து தலைமையாசிரியரிடம் புகார் அளித்தார்.
புகாரின் தீவிரத்தன்மையைப் புரிந்துகொண்ட தலைமையாசிரியர் உடனடியாக இச்சம்பவம் குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பூண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புகார் குறித்த துறை ரீதியான விசாரணை நடத்துவதற்காகப் பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் பள்ளிக்கு வந்தனர்.
கல்வித் துறை அதிகாரிகள் ஆசிரியர் மீது விசாரணை நடத்தத் தங்கள் கிராமத்திற்கு வந்துள்ளதை அறிந்த அதே பள்ளியில் பயிலும் மற்ற சில மாணவிகளின் பெற்றோர்களும் பொதுமக்களும் பள்ளி வளாகத்தில் திரண்டனர். தங்கள் பிள்ளைகளிடமும் அந்த ஆசிரியர் இதுபோன்று தவறான முறையில் நடந்துகொண்டதாக அவர்கள் அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்தனர். இதனால் பள்ளி வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
சூழலின் தீவிரத்தைக் கருதி அங்கிருந்த பெற்றோர் ஒருவர் உடனடியாக காவல் துறைக்கும், காவல் உதவி மையத்திற்கும் தொலைபேசி வாயிலாகத் தகவல் அளித்து புகார் செய்தார். இத்தகவலின் அடிப்படையில் அரியலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் மற்றும் சிங்கப்பெண் காவல் சிறப்புப் படையினர் உடனடியாக பூண்டி கிராமத்தில் உள்ள அந்தப் பள்ளிக்கு விரைந்து வந்தனர்.
பள்ளிக்கு வந்த காவல் துறையினர் பாதிக்கப்பட்ட மாணவிகள், சக ஆசிரியர்கள், பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் பெற்றோர்கள் என அனைத்து தரப்பினரிடமும் தனித்தனியாக முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டனர்.
அனைத்து தரப்பு விசாரணையிலும் ஆசிரியர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முதற்கட்ட ஆதாரங்கள் இருப்பது தெரியவந்ததை அடுத்து காவல் துறையினர் ஆசிரியர் அகஸ்டின் மங்களராஜை முறைப்படி கைது செய்தனர். பின்னர் அவரை அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்வதற்கான தீவிர விசாரணையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.







