கோவை , ஜூன் 11 : தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் திருப்பமாக, திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) நீடிப்பதற்கான சூழல் இன்று இல்லை என்று அக்கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தற்போதைய அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் கட்சியின் நிர்வாகக் குழு கூடி இந்த இறுதி முடிவை எடுத்துள்ளதாகத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில் கூட்டணியில் இருந்து CPI விலகுகிறதா என்ற செய்தியாளர்களின் நேரடி கேள்விக்கு பதிலளித்த மு. வீரபாண்டியன், தற்போதைய சூழலில் திமுக கூட்டணியில் இடம்பெற இயலாது என்று கூறினார். முன்னதாக நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில் இதுகுறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும் முறைப்படி நிர்வாகக் குழு கூடி எடுத்த முடிவையே தாம் செய்தியாளர்களிடம் பொதுவெளியில் அறிவிப்பதாகவும் அவர் விளக்கமளித்தார்.
Also : டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தீ விபத்து: முதல்வர் விஜய் புறப்பட்ட சில நிமிடத்தில் பரபரப்பு
தற்போதைய அரசியல் சூழலில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (இயுஎம்எல்) ஆகிய கட்சிகள் இருக்கும் இடத்தில் தாங்கள் இருக்க மாட்டோம் என்று திமுக கூறுவதாகக் குறிப்பிட்ட வீரபாண்டியன், இத்தகையதொரு தேர்தல் அணி சேர்க்கையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இன்று இல்லை என்றார். இந்த அரசியல் எதார்த்தங்களைக் கருத்தில் கொண்டுதான் தங்களது கட்சி இந்த முக்கிய முடிவை நோக்கி நகர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில் தங்களின் இந்த முடிவு மற்ற ஜனநாயக சக்திகளை முற்றிலுமாக கடந்து செல்வதாக அமைந்துவிடாது என்றும் இதில் தனிப்பட்ட பகை முரண்களுக்கு எவ்வித இடமும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதன்மையான அரசியல் எதிரி பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) மட்டுமே என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை என்று கூறிய அவர், நாட்டின் நலன் மற்றும் பொது நலன் சார்ந்து இடதுசாரி இயக்கங்களுடனும், அவர்களுடன் இணைந்து பயணிக்கும் பிற ஜனநாயக சக்திகளுடனும் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் தொடர்ந்து பயணிக்கும் என்று அழுத்தமாகக் குறிப்பிட்டார்.
திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக), தமிழக வெற்றிக் கழகம் (தவெக) உள்ளிட்ட கட்சிகளை ஒரு ஜனநாயக சக்தியாகவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மதிப்பிடுகிறது என்று கூறிய வீரபாண்டியன், வரவிருக்கின்ற உள்ளாட்சி, சட்டமன்ற அல்லது நாடாளுமன்றத் தேர்தல்களின் போது நிலவும் அரசியல் சூழல்களுக்கு ஏற்ப புதிய அணி சேர்க்கைகள் குறித்து கட்சி உரிய நேரத்தில் சிந்தித்து முடிவெடுக்கும் என்றார். கட்சியின் மத்திய கமிட்டி வழங்கியுள்ள வழிகாட்டுதலின்படி, மக்களின் கோரிக்கைகளுக்காகவும் உழைக்கும் வர்க்கத்திற்காகவும் தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றும் அவர் உறுதியளித்தார்.
இதற்கிடையே வரவிருக்கும் இடைத்தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு இடைத்தேர்தல் களம் நெருங்கும் சூழலில் கட்சி முறையாகக் கூடி தங்களின் அதிகாரப்பூர்வ முடிவை அறிவிக்கும் என்றும், அப்போது அதற்கான விடை மக்களுக்குக் கிடைக்கும் என்றும் அவர் கூறினார். செய்தியாளர்கள் எழுப்பிய பரபரப்பான கேள்விகளுக்குப் பதிலளித்த அவர் ஊடகங்களின் பரபரப்பு வார்த்தைகளைத் தாண்டி, மென்மையான மற்றும் அரசியல் அடர்த்திமிக்க வார்த்தைகளின் மூலமாகவே தங்களின் இந்த ஆழமான அரசியல் நிலைப்பாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தமிழக அரசியலில் அடுத்தகட்ட கூட்டணி மாற்றங்களுக்கான ஆரம்பப் புள்ளியாக CPI மாநில செயலாளரின் இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது.







