நெல்லை , ஜூன் 11 : அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு தண்டனை வழங்கிய விவகாரத்தில் போக்குவரத்து கழக அதிகாரிகள் செய்த அடுக்கடுக்கான காலதாமதத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு வட்டியுடன் சேர்த்து இழப்பீடு வழங்க திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் இழுத்தடித்த அதிகாரிகளின் அலட்சியப் போக்கைக் கண்டித்துள்ள நீதிபதி, வட்டித் தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் சம்பளத்தில் இருந்தே வசூலிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்திருப்பது அரசுத் துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி கோட்டத்திற்கு உட்பட்ட நாகர்கோவில் ராணித்தோட்டம் கிளையில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தவர் ஏ. கிறிஸ்டோபர் ஜெபதாஸ். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆறாம் தேதி இரவு நேரத்தில் நாகர்கோவிலில் இருந்து களியக்காவிளை நோக்கி அரசுப் பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார். பேருந்து உச்சக்கடை வளைவுப் பகுதியில் திரும்பியபோது எதிரே மிக அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக பேருந்தின் மீது பலமாக மோதியது. இந்த பயங்கர விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்திய போக்குவரத்து கழக நிர்வாகம், விபத்துக்கு ஓட்டுநரின் கவனக்குறைவுதான் முக்கிய காரணம் என்று முடிவெடுத்தது. இதற்கென துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, கிறிஸ்டோபர் ஜெபதாஸிற்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான ஊதிய உயர்வை (Increment) நிறுத்தி வைத்து கடந்த 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒழுங்கு நடவடிக்கை தண்டனை விதிக்கப்பட்டது.
also read : டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தீ விபத்து: முதல்வர் விஜய் புறப்பட்ட சில நிமிடத்தில் பரபரப்பு
நிர்வாகத்தின் இந்த ஒருதலைப்பட்சமான தண்டனை உத்தரவை எதிர்த்து போக்குவரத்து கழக பணியாளர் சம்மேளனம் சார்பில் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தில் முறைப்படி வழக்கு தொடரப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் விரிவாக விசாரித்த நீதிமன்றம், ஓட்டுநர் மீது தவறு இல்லை என்பதை உறுதி செய்ததுடன் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. மேலும் விபத்தின் காரணமாக ஓட்டுநருக்கு மறுக்கப்பட்ட அனைத்து பணப்பலன்களையும் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் போக்குவரத்துக் கழக நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.
நீதிமன்றம் இத்தகைய தெளிவான தீர்ப்பை வழங்கிய பிறகும் போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் அதனை உடனடியாக அமல்படுத்த முன்வரவில்லை. நீதிமன்ற தீர்ப்பு நகலை இணைத்து தனக்கு சேர வேண்டிய தொகையை வழங்குமாறு ஓட்டுநர் கிறிஸ்டோபர் ஜெபதாஸ் பலமுறை நேரில் முறையிட்டும், கடிதங்கள் அனுப்பியும் நிர்வாகத் தரப்பில் இருந்து எவ்வித சாதகமான பதிலும் வரவில்லை. அதிகாரிகளின் இந்த அலட்சியப் போக்கால் பல ஆண்டுகள் கடந்த நிலையில் தனக்கு வரவேண்டிய நிலுவைத் தொகையை சட்டப்பூர்வமாகக் கணக்கிட்டு வழங்கக் கோரி ஓட்டுநர் சார்பில் மீண்டும் தொழிலாளர் நீதிமன்றத்தில் கணக்கீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான இறுதி விசாரணையை திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி அ. பிலிப் நிக்கோலஸ் அலெக்ஸ் மேற்கொண்டார். வழக்கை முழுமையாக ஆராய்ந்த நீதிபதி, அதிகாரிகளின் தாமதத்தை கடுமையாக சாடி இறுதித் தீர்ப்பை வழங்கினார். அதன்படி பாதிக்கப்பட்ட ஓட்டுநருக்கு 2011 ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2026 பிப்ரவரி மாதம் வரையிலான காலத்திற்கு வழங்கப்படாமல் விடுபட்ட வித்தியாச சம்பளத் தொகையான ஆறு லட்சத்து 93 ஆயிரத்து 825 ரூபாயை போக்குவரத்து கழகம் உடனடியாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதுமட்டுமன்றி நீதிமன்ற உத்தரவு இருந்தும் கடந்த ஏழு ஆண்டுகளாக உரிய தொகையை வழங்காமல் காலதாமதம் செய்து, தொழிலாளியை அலைக்கழித்ததற்காக அதற்குரிய வட்டித் தொகையாக மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை கூடுதலாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.
மேலும், இந்த வழக்கில் மிக முக்கிய திருப்புமுனையாக, நிர்வாகத்தில் உள்ள சில குறிப்பிட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் தனிப்பட்ட தவறுகளாலும் அலட்சியத்தாலுமே இந்த வட்டித் தொகையைச் செலுத்த வேண்டிய கட்டாயம் பொதுத்துறை நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ளது என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, தொழிலாளிக்கு வழங்கப்படும் இந்த மூன்றரை லட்சம் ரூபாய் வட்டித் தொகையை பொதுப் பணத்தில் இருந்து செலவிடக் கூடாது என்றும், காலதாமதத்திற்கு காரணமான சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கண்டறிந்து, உரிய நிர்வாக நடைமுறைகளைப் பின்பற்றி அவர்களின் சம்பளத்தில் இருந்தே இந்தத் தொகையை வசூலித்துக் கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பு, தீர்ப்பு வந்தும்கூட கோப்புகளை நகர்த்தாமல் காலதாமதம் செய்யும் அரசு அதிகாரிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.







