டாஸ்மாக் கொள்முதல் முறைகேடு தடுப்பு: அரசு கஜானாவிற்கு ரூ.1,200 கோடி வருவாய் – அமைச்சர் விக்னேஷ்

கோவை , ஜூன் 6: தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிப்பதே தமிழக வெற்றி கழக அரசின் முதன்மை லட்சியம் என்றும் அண்டை மாநில எல்லைகள் மற்றும் உள்வட்டாரப் பகுதிகளில் உள்ள போதைப்பொருள் விநியோகச் சங்கிலி மிக விரைவில் முழுமையாக உடைக்கப்படும் என்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் டாஸ்மாக் நிர்வாகத்தில் கடந்த காலங்களில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் மற்றும் தற்போதைய அரசின் அதிரடி சீர்திருத்தங்கள் குறித்து விரிவாக விளக்கமளித்தார்.

TASMAC Procurement Scam Curbed: Tamil Nadu Government Saves ₹1,200 Crore, Says Minister Vignesh

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் துறையின் செயல்பாடுகளைத் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் எடுத்தவுடனேயே விளம்பரத்திற்காகக் கூச்சலிடும் வழக்கம் தங்களுக்கு இல்லை என்றார்.கடந்த ஐந்தாம் தேதி முதலமைச்சர் தளபதியின் ஒப்புதலோடு பிறப்பிக்கப்பட்ட அரசாணை இத்துறையில் ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த காலங்களில் மது உற்பத்தியாளர்களிடமிருந்தும், மொத்த விற்பனையாளர்களிடமிருந்தும் கொள்முதல் செய்யப்படும் ஒரு கேஸ் மதுபானத்திற்கு முறையே 90 ரூபாய், பீர் வகைகளுக்கு 40 ரூபாய், ஒயின் வகைகளுக்கு 20 ரூபாய் எனத் தனிநபர்கள் மற்றும் குறிப்பிட்ட அரசியல் கட்சிகளின் குடும்ப உறுப்பினர்களின் கைகளுக்கு சட்டவிரோதமாகப் பணம் சென்றுள்ளது.ஆண்டுக்குச் சராசரியாக 88 லட்சம் கேஸ்கள் கொள்முதல் செய்யப்படும் நிலையில் இதன் மூலம் மாதம் ஒன்றுக்கு சுமார் 100 கோடி ரூபாய் வீதம் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

ALso : வால்பாறையில் ஆபத்தை உணராமல் கூழாங்கல் ஆற்றில் இறங்கி செல்பி எடுக்கும் சுற்றுலாப் பயணிகள்…

செந்தில் பாலாஜி மீது வழக்குத் தொடர ஆளுநருக்கு தமிழக அரசு கடிதம்

இந்த முறைகேடான நிதி ஓட்டத்தை முற்றிலும் தடுத்து நிறுத்தி அந்தப் பணம் முழுமையாக அரசு கஜானாவிற்குச் சென்றடைய வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டதன் பேரில் உடனடியாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதன் மூலம் கடந்த 20 நாட்களில் மட்டும் சுமார் 1,200 கோடி ரூபாய் வருமானம் அரசு கஜானாவிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.எந்த ஒரு அரசியல் கட்சியும் தங்களது கட்சி நிதி ஆதாரத்தைப் பாதிக்கும் இதுபோன்ற அதிரடி முடிவை எடுக்கத் துணியாது என்றும் மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

டாஸ்மாக் கடைகள் தனியார்மயமாக்கப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை மறுத்த அமைச்சர் கடைகளுக்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டங்களில் தமக்கும் முதலமைச்சருக்கும் உடன்பாடு உண்டு என்றார்.முந்தைய ஆட்சியில் 50,000 ரூபாய் மட்டுமே வருவாய் ஈட்டும், பார் வசதி இல்லாத சிறிய கடைகளைத் தேடிப் பிடித்து மூடிவிட்டு கடைகளை மூடிவிட்டதாகப் பொய் பிரச்சாரம் செய்தனர்.ஆனால் தற்போதைய அரசு மூடியுள்ள 717 கடைகளில், ஒரு கடையின் ஒருநாள் வருவாய் 5 லட்சம் முதல் 25 லட்சம் ரூபாய் வரையாகும்.இந்த விவேகமான மூடல் நடவடிக்கையால் அரசுக்குச் சுமார் 7,000 முதல் 8,000 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படும் சூழல் இருந்தாலும் இதர துறைகளின் மூலம் வருவாயைப் பெருக்கி அடுத்தகட்டமாக அனைத்து மதுக்கடைகளையும் மூடுவதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும் என்றார்.பெண்களின் கோரிக்கையை ஏற்று, மது விற்பனை நேரத்தைக் குறைப்பது குறித்தும் அரசு ஆலோசித்து முடிவெடுக்கும் என்று அவர் உறுதியளித்தார்.

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதைத் தடுக்க இந்த மாத இறுதிக்குள் அனைத்துக் கடைகளிலும் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையிலேயே (MRP) விற்பனை நடப்பது உறுதி செய்யப்படும்.கடந்த ஆட்சியில் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தனிப்படை அமைத்துக் கமிஷன் வசூலிப்பதிலேயே குறியாக இருந்தனர்.தற்போதைய அரசு கடைகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கான க்யூஆர் கோடு வசதிகளை ஏற்படுத்தியிருந்தாலும் ஒரே நேரத்தில் கூட்ட நெரிசல் ஏற்படும் போது விற்பனையாளர்களுக்கு ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களைக் கண்டறிந்து அதனைச் சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.கடந்த காலங்களில் முறைகேடுகளில் ஈடுபட்டு விசாரணைக்கு உள்ளானவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தங்களது கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பாரபட்சமின்றி சட்டப்படியான நடவடிக்கைகள் பாயும் என்றும், முந்தைய ஆட்சியாளர்கள் செய்த தவறுகள் தொடர்ந்து ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்தார்.

மேலும் கடந்த காலங்களில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 600-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.கடைகளில் பாட்டிலுக்கான 10 ரூபாய் கூடுதல் வைப்புத் தொகையை (Deposit) பொதுமக்கள் வாங்காவிட்டாலும் அதனை ஊழியர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது.2021 முதல் நாளொன்றுக்கு ஒரு கோடி பாட்டில்கள் விற்பனையாகும் சூழலில் பாட்டிலுக்கு 10 ரூபாய் வீதம் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளது.இதில் விற்பனையாளர்களுக்குச் சொற்பத் தொகையைக் கொடுத்துவிட்டு பெரும் புள்ளிகளே பணத்தைச் சுருட்டியுள்ளனர்.இனிமேல் எந்தவொரு ஊழியராவது கூடுதல் பணம் வாங்கினால் சமூக வலைதளக் கண்காணிப்புக் குழுவின் பரிந்துரைப்படி உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள்.துறையில் மொத்தமிருந்த 33,000 பணியிடங்களில் தற்போது வயது மூப்பு மற்றும் இதர காரணங்களால் 23,000 பேர் மட்டுமே பணியாற்றி வரும் நிலையில் தகுதியான ஊழியர்களின் பணிப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் அமைச்சர் விக்னேஷ் கோவையில் தெரிவித்தார்.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1133

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »