செஞ்சி, ஜூன் 3: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு, அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செஞ்சி அடுத்த அம்மாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் (50) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.இவர் மேல் ஓலக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.கடந்த ஆண்டுக்கான நல்லாசிரியர் விருதையும் இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணமான ஒரு மாதத்திலேயே மனைவியைப் பிரிந்த இளங்கோவன், தனது தாயாருடன் வசித்து வந்தார்.ஆசிரியர் பணி மட்டுமன்றி, சுயதொழிலாகப் பழைய இரும்புப் பொருட்களை வாங்கி விற்கும் தொழிலையும், வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழிலையும் அவர் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், கடந்த சில தினங்களாக இளங்கோவனின் நடமாட்டம் இல்லாத சூழலில், அவரது தாயும் சகோதரிகளும் கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து அவரது தொலைபேசிக்குத் தொடர்பு கொண்டுள்ளனர்.ஆனால், இளங்கோவன் அழைப்பை ஏற்காததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், அவரது அக்காவின் மகனை வீட்டிற்கு நேரில் சென்று பார்க்குமாறு அறிவுறுத்தினர்.
Also read: பைனான்ஸ் உரிமம் புதுப்பிக்க ₹10,000 லஞ்சம்: பெண் விஏஓ, புரோக்கர் கைது
இதனைத் தொடர்ந்து, நேற்று மாலை 3 மணி அளவில் இளங்கோவனின் வீட்டிற்குச் சென்ற அவரது அக்கா மகன், வீட்டின் உட்பகுதியிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதைக் கவனித்துள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக உறவினர்களுக்குத் தகவல் கொடுத்து வரவழைத்தார்.அவர்கள் முன்னிலையில் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, இளங்கோவன் உடல் உருமாறி, அழுகிய நிலையில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.இச்சம்பவம் குறித்து கிராம மக்கள் உடனடியாக வளத்தி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த வளத்தி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர்.சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத், செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளர் ரமேஷ் ராஜ் மற்றும் தடயவியல் நிபுணர் ராஜிவ் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.உயிரிழந்த இளங்கோவனின் உடல் கிடந்த அறையிலும், வீட்டின் மற்ற பகுதிகளிலும் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது தடயவியல் சோதனையில் கண்டறியப்பட்டது.மோப்ப நாய் மற்றும் தடையங்களை மறைப்பதற்காகவே கொலையாளிகள் மிளகாய் பொடியைத் தூவியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதையடுத்து, காவல்துறையினர் இளங்கோவனின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மிளகாய் பொடி தூவப்பட்டிருந்த விதம் மற்றும் உடலின் நிலை ஆகியவற்றைக் கொண்டு, இது திட்டமிட்ட கொலை என்பதை உறுதி செய்துள்ள காவல்துறையினர், கொலையாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துத் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
கொலைக்கான காரணம் குறித்துப் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இளங்கோவன் செய்து வந்த வட்டித் தொழில் மற்றும் இரும்பு வியாபாரத்தில் ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக இக்கொலை நடந்ததா அல்லது குடும்பப் பின்னணி ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் தனிப்படையினர் தங்களது விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
மேலும், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு செஞ்சி அடுத்த நெகனூர் ஏரிக்கரை அருகே ஆசிரியர் இளங்கோவனை மர்ம நபர்கள் சிலர் கொலை செய்ய முயன்றதாக ஒரு சம்பவம் ஏற்கனவே அரங்கேறியுள்ளது.அப்போதே அவர் காவல்துறையில் புகார் அளித்திருந்த நிலையில், தற்போது அவர் வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளது உள்ளூர் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த முறை நடந்த கொலை முயற்சிக்கும், தற்போது நடந்துள்ள இந்த சம்பவத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற அடிப்படையிலும் காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
வட்டித் தொழில் போட்டி, பழைய பகை அல்லது தொழில் ரீதியான எதிர்ப்புகள் என அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து வரும் வளத்தி காவல்துறையினர், இளங்கோவனின் அலைபேசி அழைப்பு விவரங்களையும் (CDR) சேகரித்து வருகின்றனர்.கடந்த மூன்று நாட்களில் அவரிடம் பேசிய நபர்கள் யார் யார், இறுதியாகத் தொடர்பில் இருந்தவர்கள் யார் என்ற விவரங்களின் அடிப்படையில் சந்தேகத்திற்குரிய நபர்களைப் பட்டியலிட்டு விசாரணை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.நல்லாசிரியர் விருது பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அம்மாக்குளம் கிராமம் மற்றும் கல்வி வட்டாரத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.








