கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நள்ளிரவில் கடற்கரைக்கு அழைத்து சென்று மனைவியை துப்பட்டாவால் நெறித்து கொன்ற கணவன் கைது. குடும்ப பிரச்சனை பின்னணி குறித்து முழு தகவல்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பொன்னாணி கடற்கரையில் நள்ளிரவில் 19 வயது இளம்பெண் கழுத்து நெறித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது கணவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். குடும்பத் தகராறு மற்றும் சந்தேகத்தின் பேரில் இந்த கொடூரம் அரங்கேறியிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மலப்புரம் மாவட்டம் பொன்னாணி பகுதியைச் சேர்ந்தவர் முகமது (23). இவருக்கும் பாத்திமா (19) என்ற பெண்ணுக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நான்கு மாதங்களில் ஓர் ஆண் குழந்தை உள்ளது. திருமணமான சில மாதங்களிலேயே முகமதுவுக்கு மனைவி மீது தீவிர சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பாத்திமா யாரிடம் பேசினாலும், அது ஆண் நண்பர்களிடம்தான் பேசுகிறார் எனக் குற்றம் சாட்டி, முகமது தொடர்ந்து வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
பாத்திமாவின் சமூகத் தொடர்புகளைத் துண்டிக்கும் வகையில் கடுமையான கட்டுப்பாடுகளை முகமது விதித்துள்ளார். உறவினர்களுடன் கூட பேச அனுமதிக்காததால், பாத்திமா கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாக அக்கம் பக்கத்தினர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். இரவில் தூங்கவிடாமல் பாத்திமாவைத் துன்புறுத்துவதையும் முகமது வழக்கமாகக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், கடந்த 28-ஆம் தேதி நள்ளிரவில் இத்தம்பதிக்கு இடையே மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ‘காற்று வாங்க கடற்கரைக்குச் செல்லலாம்’ எனக் கூறி, தூங்கிக் கொண்டிருந்த குழந்தையையும் எடுத்துக்கொண்டு பாத்திமாவை முகமது வெளியே அழைத்துச் சென்றுள்ளார். நள்ளிரவு நேரத்தில் பொன்னாணி கடற்கரையில் அமர்ந்து இருவரும் பேசிக்கொண்டிருந்தபோதும் தகராறு நீடித்துள்ளது.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் உச்சகட்டமாக, ஆத்திரமடைந்த முகமது, பாத்திமா அணிந்திருந்த துப்பட்டாவைப் பறித்து அவரது கழுத்தை இறுக்கியுள்ளார். இதில் மூச்சுத்திணறி பாத்திமா கடற்கரையிலேயே உயிரிழந்தார். பாத்திமா இறந்ததை உறுதி செய்த முகமது, அவரது உடலை அங்கேயே போட்டுவிட்டு, தனது நான்கு மாதக் குழந்தையுடன் நள்ளிரவிலேயே அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
மறுநாள் அதிகாலை கடற்கரைக்கு வந்த பொதுமக்கள், பெண் ஒருவரின் சடலம் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து பொன்னாணி போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அந்தப் பெண் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் பாத்திமா என்பதும், அவரது கணவர் முகமது குழந்தையுடன் தலைமறைவாக இருப்பதும் தெரியவந்தது. தலைமறைவான முகமதுவைத் தேட போலீஸார் தனிப்படை அமைத்திருந்த நிலையில், பரப்பனங்காடி பகுதியில் நபர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயல்வதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
அங்கு விரைந்த ரயில்வே போலீஸார், தற்கொலைக்கு முயன்ற நபரை மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர்தான் மனைவியைக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய முகமது என்பது உறுதி செய்யப்பட்டது. மனைவியைக் கொலை செய்த குற்ற உணர்ச்சியால் தானும் தற்கொலை செய்ய முயன்றதாக அவர் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து முகமதுவைக் கைது செய்த போலீஸார், குழந்தையைப் பத்திரமாக மீட்டு உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து சமூக நல ஆர்வலர்கள் மற்றும் மனநல ஆலோசகர்கள் கூறுகையில், “இத்தகைய குற்றங்களை வெறும் குடும்பப் பிரச்சினையாக மட்டும் கடந்து போய்விட முடியாது. குடும்ப அமைப்பிற்குள் நிலவும் கடுமையான தனிநபர் கட்டுப்பாடுகள், அதீத சந்தேகம் (Toxic Possessiveness) மற்றும் மனநல ஆதரவு இல்லாமையே இத்தகைய கொடூர முடிவுகளுக்குக் காரணமாகின்றன. குறிப்பாக, இளம் தம்பதியரிடையே பரஸ்பர நம்பிக்கையின்மையும், பாதுகாப்பற்ற உணர்வும் அதிகரிக்கும் போது அது வன்முறையாக மாறுகிறது. தம்பதியருக்குள் மனக்கசப்பு ஏற்படும் போது, அதனைத் தங்களுக்குள்ளேயே முடக்கி வைக்காமல், குடும்பத்தினரிடமோ அல்லது தொழில்முறை மனநல ஆலோசகர்களிடமோ பகிர்ந்து ஆலோசனைகளைப் பெறுவது இத்தகைய பேரிழப்புகளைத் தவிர்க்க உதவும்” எனத் தெரிவித்துள்ளனர்.







