
திருநெல்வேலி, மார்ச் 17, 2026 ;
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நெல்லை மேலப்பாளையம் ஆட்டுச்சந்தையில் இன்று அதிகாலையிலிருந்து மக்கள் மற்றும் வியாபாரிகள் கூட்டம் அலைமோதியது. ஒரே நாளில் சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுவதால் வியாபாரிகள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட மேலப்பாளையம் பகுதியில் செயல்படும் கால்நடை சந்தை, தென் மாவட்டங்களில் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாகும். இங்கு வாரம் தோறும் செவ்வாய்க்கிழமைகளில் கோழி, ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் விற்பனை நடைபெறுவது வழக்கம்.
வருகிற 21-ந்தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதை ஒட்டி, இன்று நடைபெற்ற சந்தையில் அதிகாலை முதலே விற்பனை சூடு பிடித்தது. திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் வியாபாரிகள் பெருமளவில் திரண்டனர்.
இந்த சந்தைக்கு சுமார் 2800-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ரூ.5,000 முதல் ரூ.45,000 வரை விலைகளில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. குறிப்பாக பண்டிகையை முன்னிட்டு நல்ல இன ஆடுகளுக்கு அதிக கேள்வி இருந்ததால், விலை உயர்வு காணப்பட்டது.

சந்தையில் விவசாயிகளும் பொதுமக்களும் நேரடியாக ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்ததால் இடைநிலையர்கள் குறைந்து, விற்பனை விரைவாக நடந்தது. இதனால் விற்பனையாளர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் நல்ல லாபம் கிடைத்ததாக கூறப்படுகிறது.
பண்டிகை தேவைக்காக குடும்பங்களும், ஹோட்டல் மற்றும் இறைச்சி விற்பனையாளர்களும் அதிக அளவில் ஆடுகளை வாங்கிச் சென்றனர். சந்தை முழுவதும் பரபரப்பான வணிக சூழல் நிலவியது.
மேலும் தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படை அதிகாரிகள், ரம்ஜான் பண்டிகைக்காக ஆடுகளை வாங்க வந்த வியாபாரிகள் எடுத்துச் செல்லும் பணம் குறித்து தேவையற்ற சோதனைகள் அல்லது தொந்தரவுகள் ஏற்படுத்தப்படாது என முன்கூட்டியே அறிவித்திருந்தது. இதனால் வியாபாரிகள் எந்த அச்சமும் இன்றி சுதந்திரமாக வர்த்தகம் செய்தனர்.
ரம்ஜான் பண்டிகை நெருங்கும் நிலையில், அடுத்த சில நாட்களிலும் மேலப்பாளையம் ஆட்டுச்சந்தையில் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.






