திசையன்விளையில் பயங்கரம் ! எரிந்த காரில் 4 பேர் கருகிய நிலையில் மீட்புகொலையா? தற்கொலையா? போலீசார் தீவிர விசாரணை

image search 1773721355793

திசையன்விளை, மார்ச் 17, 2026;
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே பெட்டை குளத்திலிருந்து கல்லுவிளை செல்லும் சாலையில் உள்ள பனங்காடு பகுதியில் இன்று அதிகாலை எரிந்த நிலையில் நின்று கொண்டிருந்த காரில் 4 பேர் கருகிய உடல்களாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்பகுதியில் வயல்வெளிக்கு சென்றவர்கள், பனைமரத்தடியில் கார் ஒன்று முழுவதும் எரிந்து எலும்புக்கூடாக காட்சியளித்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து, திசையன்விளை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் எழில் சுரேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

காரின் உள் பகுதியில் டிரைவர் இருக்கையில் ஒருவரும், பின்புற இருக்கைகளில் மூவரும் முற்றிலும் தீயில் கருகிய நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது. தகவல் அறிந்து வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தார்.

மேலும் சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரசன்னகுமார் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார். தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் இருந்து முக்கிய ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் யாரும் எரிந்த காரின் அருகில் செல்லாதபடி போலீசார் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முதல் கட்ட விசாரணையில், காரில் டிரைவர் இருக்கையில் ஆண் ஒருவரும், பின்புறத்தில் பெண் ஒருவரும், அவரை ஒட்டி இருபுறமும் இரண்டு குழந்தைகளும் அமர்ந்திருந்ததற்கான தடயங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் — கணவன், மனைவி மற்றும் 2 குழந்தைகள் — இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் காரின் சாவி ‘ஆன்’ நிலையில் இருந்ததும், டிரைவர் இருக்கை சாய்ந்த நிலையில் இருந்ததும் தெரியவந்துள்ளது. இதனால் நீண்ட தூர பயணமாக வந்தவர்கள் ஓய்வெடுக்க கார் ஓரமாக நிறுத்தி தூங்கியபோது, ஏ.சி. தொடர்பான கோளாறு அல்லது கசிவு காரணமாக தீப்பற்றி எரிந்திருக்கலாமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து, இது கொலையா, தற்கொலையா அல்லது விபத்தா என பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

சாலையில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள பனங்காடு பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

news desk
news desk
Articles: 94

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »