கடலூர் , ஜூன் 13 : கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே கடற்பகுதியில் ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு எக்காரணம் கொண்டும் அனுமதி அளிக்கக் கூடாது என்றும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் உலகப் புகழ்பெற்ற பிச்சாவரம் அலையாத்தி காடுகள் மற்றும் கடலோரச் சூழலியல் முழுமையாக அழிந்துவிடும் என்றும் மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் எச்சரித்துள்ளார்.

ஹிந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்ளோரேஷன் என்ற தனியார் நிறுவனம் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டைக்கு அருகில் கடலில் சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் நான்கு ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளைத் தொடங்கியுள்ளது. இதற்காக 425 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனுமதி கோரி தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் அந்த நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இந்த விவகாரம் தற்போது கடலோர மாவட்ட மீனவர்கள் மற்றும் சூழலியல் ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், இந்தத் தனியார் நிறுவனத்தின் விண்ணப்பம் என்பது கடலூர் மாவட்டக் கடலோரப் பகுதியைச் சீரழிப்பதற்கான ஒரு பெரிய ஆபத்தின் தொடக்கம் என்று சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிறுவனத்திற்கு அனுமதி கிடைத்தால் இதனைத் தொடர்ந்து ஓஎன்ஜிசி மற்றும் வேதாந்தா போன்ற பெருநிறுவனங்களும் இப்பகுதியில் பிரம்மாண்டமான முறையில் எண்ணெய் கிணறுகளை அமைக்கக் காத்துக்கொண்டிருக்கின்றன என்றும் எனவே இந்த ஆபத்தை ஆரம்பத்திலேயே தமிழக அரசு கிள்ளி எறிய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Also : சட்டப்பேரவை கூட்டத்தொடரை முன்னிட்டு சென்னை முழுவதும் போலீசாருக்கு எச்சரிக்கை உத்தரவு
எண்ணெய் கிணறுகள் கடலில் 18 கிலோமீட்டர் தள்ளிதானே அமைகின்றன என்று இதனைச் சாதாரணமாகக் கடந்துவிடக் கூடாது என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்தத் திட்டம் அமையவிருக்கும் பகுதி ஆழமற்ற கடல் பகுதி (Shallow Water) என்பதால் இதன் பாதிப்புகள் நேரடியாகத் தமிழகத்தின் ஒட்டுமொத்த கடலோரப் பகுதியையும் கடுமையாகத் தாக்கும் என்று விவரித்துள்ளார். அங்கு எண்ணெய் கிணறுகள் அமைக்கப்படும் போது வெளியேறும் ரசாயனங்களும், எதிர்பாராமல் ஏற்படும் எண்ணெய் கசிவுகளும் கடல் நீரில் கலந்து, அந்தப் பகுதியின் ஒட்டுமொத்த கடல் சூழலியலையும் நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாற்றிவிடும் என்று கவலை தெரிவித்துள்ளார்.
மேலும் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான நில அதிர்வு சோதனைகளின் போது கடலுக்கு அடியில் நொடிக்கு நொடி கேட்கும் பயங்கரமான வெடிச்சத்தங்கள், மீன்களின் நுண் உணர்வுகளைத் தாக்கிச் சிதைத்துவிடும். இதனால் அந்தப் பகுதியில் வாழும் மீன்கள் பெருமளவில் மடிந்து போகும் அல்லது தங்களின் வாழ்விடத்தை விட்டு முற்றிலுமாக வெளியேறிவிடும் ஆபத்து உள்ளது. இதன் விளைவாக மீன்வளமே இல்லாத ஒரு வெற்றுப் பிரதேசமாக இந்தக் கடற்பகுதி மாறிவிடும் என்று மீனவர்களின் வாழ்வாதாரப் பாதிப்புகள் குறித்து ஜெயராமன் விரிவாகப் பட்டியலிட்டுள்ளார்.
இந்தத் திட்டத்தால் ஏற்படப் போகும் மிக முக்கியப் பாதிப்பாக உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகவும், இயற்கை அரணாகவும் விளங்கும் பிச்சாவரம் அலையாத்தி காடுகளின் அழிவை அவர் குறிப்பிட்டுள்ளார். கடல் சூழல் மாறுபடும் போது, இந்த அலையாத்தி காடுகள் ஒட்டுமொத்தமாக அழிந்துபோகும் நிலைக்குத் தள்ளப்படும் என்றும் அதன் பின்னர் இப்பகுதி ஒரு சுற்றுலாத் தலமாகவே நீடிக்காது என்றும் எச்சரித்துள்ளார். கடற்கரை கிராமங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டு, மீனவர்கள் தங்களின் பாரம்பரிய மீன்பிடித் தொழிலை இழந்து சொந்த நிலத்தை விட்டே வெளியேறும் அவலநிலை உருவாகும்.
கடலில் ஒரே ஒரு எண்ணெய் கிணறு அமைக்கப்பட்டால் கூட பாதுகாப்பு என்ற பெயரில் மீனவர்களின் படகுகள் எதுவும் அதன் அருகே செல்ல அனுமதிக்கப்படாது என்றும், மீனவர்கள் அடித்து விரட்டப்படுவதுடன் அந்தப் பகுதிக்குள் நுழைவதே சட்டவிரோதமான செயலாக மாற்றப்பட்டுவிடும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
திட்டத்தின் சட்டப்பூர்வ அம்சங்கள் குறித்துப் பேசிய ஜெயராமன், பரங்கிப்பேட்டை என்பது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தின் கீழ் வரும் கடலூர் மாவட்டத்தின் ஐந்து வட்டங்களில் ஒன்றாகும் என்பதை நினைவூட்டியுள்ளார். இந்த வேளாண் மண்டலப் பாதுகாப்புப் பகுதிக்குள் இந்தக் கடற்பகுதியும் உள்ளடங்குகிறது. மேலும் சர்வதேச விதிகளின்படி கடற்கரையிலிருந்து 22 கிலோமீட்டர் (12 நாட்டிக்கல் மைல்) வரையிலான கடல் பகுதி மாநில அரசின் முழுமையான அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால், இந்த 18 கிலோமீட்டர் தொலைவில் அமையவிருக்கும் திட்டத்தைத் தடுத்து நிறுத்த தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
முந்தைய அரசு ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்காமல் இருந்த அதே கொள்கையையே தற்போதைய தமிழக அரசும் தொடர வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது. நிலப்பரப்பாக இருந்தாலும் சரி கடல் பகுதியாக இருந்தாலும் சரி, டெல்டா மற்றும் கடலோரப் பகுதிகளில் இத்தகைய அழிவுப் பூர்வமான திட்டங்களை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு உறுதியாகத் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் பரங்கிப்பேட்டை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் உள்ள பல்வேறு சமூக, வாழ்வாதார அமைப்புகளை ஒருங்கிணைத்து, சாதி, மதம், அரசியல் கட்சிகளைக் கடந்து ஒரு கூட்டுப் போராட்டத்தை நடத்தப் போவதாகவும் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. எனவே மக்கள் மத்தியில் ஒரு கொந்தளிப்பான போராட்டச் சூழல் உருவாவதற்குத் தமிழக அரசு இடம் கொடுக்கக் கூடாது என்றும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் பொருட்டு இந்த ஹைட்ரோகார்பன் விண்ணப்பத்தைப் பரிசீலிக்காமல் உடனடியாக நிராகரித்துத் திட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் ஜெயராமன் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.







