சென்னை , ஜூன் 13 : சட்டமன்ற கூட்டத்தொடர் – காவல் நிலையங்களில் அத்துமீறல்களை தவிர்க்க சென்னை போலீஸ் கமிஷனர் அதிரடி உத்தரவு

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் வரும் 18-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் சென்னை மாநகரக் காவல் துறையினருக்குப் பல்வேறு முக்கிய கட்டுப்பாடுகளையும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களையும் மாநகரக் காவல் ஆணையர் அமல்ராஜ் பிறப்பித்துள்ளார். குறிப்பாக காவல் நிலையங்களில் விசாரணை கைதிகள் மரணம் மற்றும் அத்துமீறல்களைத் தடுக்கும் வகையில் மிகக் கடுமையான ஒழுங்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் தனது சுற்றறிக்கையில் உத்தரவிட்டுள்ளார்.
காவல் நிலையங்களுக்கு அழைத்து வரப்படும் சந்தேக நபர்கள் மற்றும் விசாரணை கைதிகள் தொடர்பாகப் பல்வேறு புகார்கள் எழுந்து வரும் பின்னணியில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி காவல் ஆய்வாளரின் முன் அனுமதி இல்லாமலும் காவல் நிலையப் பொது நாட்குறிப்பில் (General Diary) முறைப்படி பதிவு செய்யப்படாமலும் எந்தவொரு நபரையும் சந்தேகத்தின் பேரில் காவல் நிலையத்திலோ அல்லது கைதிகள் அறையிலோ அடைத்து வைக்கக் கூடாது என்று கமிஷனர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். காவல் நிலையங்களுக்கு முறைப்படி அழைத்து வரப்படும் விசாரணை கைதிகளைக் காவலர்கள் மிகவும் கூர்ந்து விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
விசாரணை என்ற பெயரில் காவல் நிலையங்களுக்கு அழைத்து வரப்படுபவர்களை எக்காரணம் கொண்டும் துன்புறுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏதேனும் வழக்குகள் தொடர்பாகக் கைது செய்யப்படும் நபர்களை தேவையற்ற காலதாமதமின்றி விரைவாக விசாரணை செய்து, சட்ட நடைமுறைகளின்படி நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்த (Remand) நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் விசாரணைக்காக அழைத்து வரப்படும் நபர்கள் எவரேனும் மதுபோதையில் இருந்தாலோ அல்லது உடலில் காயங்களுடன் காணப்பட்டாலோ அவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். மருத்துவ அறிக்கை பெற்ற பின்னரே அவர்களிடம் விசாரணையைத் தொடங்க வேண்டும் என்றும் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
காவல் நிலைய எல்லைகளுக்குள் எந்தவித அசம்பாவிதங்களும் நிகழாமல் தடுக்கும் பொருட்டு காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும் மிகுந்த விழிப்புணர்வோடு பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவல் உதவி ஆணையர்கள் (ACs) தங்கள் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் இரவு நேரங்களிலும், அதிகாலை வேளைகளிலும் நேரில் சென்று திடீர் தணிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்தத் தணிக்கையின் போது காவல் நிலையக் கைதி அறையில் ஆவணப்படுத்தப்படாத நபர் யாரேனும் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டுள்ளாரா என்பதை உறுதி செய்து அத்தகைய சூழல் இல்லை என்பதை அவர்கள் கண்காணிக்க வேண்டும்.
மறுபுறம் தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தலைமைச் செயலக வளாகத்திற்குள் செல்லும் அனைத்து நபர்களையும் முறையான பாதுகாப்புச் சோதனைக்கு உட்படுத்திய பின்னரே உள்ளே அனுமதிக்க வேண்டும். சட்டசபை வளாகத்தின் உள்ளேயோ அல்லது தலைமைச் செயலக வளாகத்தின் வெளியேயோ, பொதுமக்களுக்குத் துண்டுப் பிரசுரங்களையோ அல்லது பிரச்சாரச் தாள்களையோ விநியோகிக்க எவரையும் அனுமதிக்கக் கூடாது. சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் நடவடிக்கைகளைக் காண வரும் பார்வையாளர்கள் உரிய அனுமதிச் சீட்டு (Pass) வைத்திருந்தால் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.
தலைமைச் செயலகப் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் அரசுக்கு முரணான சுவரொட்டிகளோ, சந்தேகப்படும்படியான பொருட்களோ, அநாமதேய வாகனங்களோ அல்லது நபர்களோ காணப்பட்டால் உடனடியாகத் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க வேண்டும் என்று சென்னை காவல் துறையினருக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில் காவல் ஆணையர் அமல்ராஜ் குறிப்பிட்டுள்ளார்.







