
திருநெல்வேலி ; மார்ச் 27, 2026 திருச்சியை சேர்ந்த சிவகாமி என்பவர் கடந்த வாரம் நெல்லை சரக டிஐஜி அலுவலகத்தில் பரபரப்பான புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அபுதாபி மின்வாரிய துறைக்கு தேவையான சர்வீஸ் பணிகளை செய்யும் நிறுவனத்தை தனது கணவர் ரவி நடத்தி வந்தார். அதை கவனித்துக் கொண்டிருந்த தன் மகளையும் நிறுவனத்தில் வேலை பார்த்த கணக்காளர் முத்துராமலிங்கம் என்பவர்,என் கணவர் ரவி இறப்புக்கு பின் அபகரித்துக் கொண்டதாக கூறி அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து கோடிக்கணக்கான மதிப்புள்ள தனது நிறுவனத்தையும் தனது மகளையும் மீட்டு தர வேண்டும் என மனு அளித்திருந்தார். இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், இன்று அபுதாபியில் சிவகாமிக்கு சொந்தமான நிறுவனத்தை விலைக்கு வாங்கியதாக புகார் கூறப்பட்ட தென்காசியை சேர்ந்த முத்துராமலிங்கம், நெல்லை சரக டிஐஜி அலுவலகத்தில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி கொலை மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்திருந்தார் அது குறித்து முத்துராமலிங்கம் பேட்டியில் கூறியதாவது….
“நான் கடந்த 2018 ம் ஆண்டு துபாய் நாட்டிற்கு வேலைக்குச் சென்றேன். அங்கு ஆல்பா பார் என்ற கம்பெனியில் வேலை பார்த்தேன். பின்னர் 2022 ம் ஆண்டு பிளக்ஸ் டிரான்ஸ்மிட் என்ற கம்பெனியை சொந்தமாகத் தொடங்கினேன். நான் வேலை பார்த்த ஆல்பா கம்பெனியின் உரிமையாளர் எஸ்.ஆர்.ரவி கடந்த 2023 ம் ஆண்டு இறந்து விட்டார். அதன்பிறகு அவரது மகள் ஸ்ரீதேவி அந்த கம்பெனியை நிர்வகித்து வந்தார். ஆனால் அதிக கடன் சுமை காரணமாக கம்பெனியை விற்பனை செய்ய முடிவு செய்தனர். முறையான தணிக்கை அறிக்கையுடன், துபாய் நீதிமன்றம் மூலம் அந்த கம்பெனியை நான் விலைக்கு வாங்கினேன். இதற்காக ஒரு தொகையை கொடுத்துவிட்டு மீதமுள்ள பணத்தை ஓராண்டு கழித்து தருவதாகக் கூறினேன். இதில் எந்த மோசடியும் நடைபெறவில்லை. ஆனால், ரவியின் மனைவி சிவகாமி நான் அவரது மகளை மிரட்டி கம்பெனியை பறித்துக்கொண்டதாகப் பொய் புகார் கூறுகிறார். இதற்கிடையே சொக்கம்பட்டி பாண்டியா என்பவர் சமூக வலைதளங்களான முகநூல், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் என் மீது அவதூறு பரப்பி வருகிறார். மேலும் ஸ்ரீதேவி தாயார் சிவகாமி உடன் இணைந்து அவர் என்னை துப்பாக்கியால் சுடவும், கூலிப்படையை வைத்து கொலை செய்யவும் முயற்சி செய்தார். இது குறித்து ஏற்கனவே தென்காசி காவல்துறை புகார் செய்திருக்கிறேன். மேலும் அவரது உறவினர்களான முகேஷ், சதீஷ்குமார், பிரான்சிஸ் ஆகியோர் எனது குடும்பத்தினரை நோட்டமிட்டு வருகின்றனர். அவரின் மற்றொரு உறவினர் ஜானகி பஸ் சர்வீஸ் நடத்தி வரும் நவீன் என்பவர் வாகனத்தை ஏற்றி கொலை செய்வதாக மிரட்டுகிறார். எனது உயிருக்கும், எனது குடும்பத்தினருக்கும் ஆபத்து உள்ளது. எங்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் தமிழ்நாடு அரசும், போலீசாரும்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். எனவே, கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
மகளை ஏமாற்றி நிறுவனத்தை அபகரித்துக் கொண்டதாக கூறப்பட்ட நிலையில் தாயின் புகாருக்கு மறுப்பு தெரிவித்து மகள் ஸ்ரீதேவி அளித்த பேட்டியில் கூறும்போது….
துபாய் கம்பெனியை நானாகவே விற்றேன்
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதேவி. இவரது தந்தை எஸ்.ஆர்.ரவி.
துபாய் நாட்டின் அபுதாபியில் நடத்தி வந்த கம்பெனியை, தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் விலைக்கு வாங்கினார். இந்த விவகாரத்தில் தனது தாயார் சிவகாமி கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஸ்ரீதேவி மறுப்பு தெரிவித்து நெல்லை சரக டிஐஜி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “எனது தந்தை கடந்த 2023 ம் ஆண்டு ஜனவரி மாதம் இறந்துவிட்டார். அதன்பிறகு நான் இரண்டு ஆண்டுகள் கம்பெனியை நடத்தினேன். அதிக கடன் இருந்ததால் மேற்கொண்டு கம்பெனியை நடத்த முடியவில்லை. வேறு வழியின்றி முத்துராமலிங்கத்திடம் கம்பெனியை விலைக்கு விற்றேன். துபாய் நாட்டின் சட்டப்படி கடந்த 2025 ம் ஆண்டு மார்ச் 5 ம் தேதி கம்பெனியை அவருக்கு மாற்றி கொடுத்தேன். என்னை யாரும் மிரட்டவில்லை. நான் விருப்பப்பட்டுதான் கம்பெனியை விற்றேன். எனது தாயார் கூறுவது தவறான செய்தி. எனது தந்தை இறந்த பிறகு எங்கள் குடும்பத்தில் உள்ள நான்கு பேருக்கும் சொத்துக்களை பிரித்தோம். நான் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்ததால் அந்த கம்பெனியை எனக்கு ஒதுக்கினர். எனது தாயார் மீது துபாய் நகரில் ஒரு வழக்கு இருந்ததால் அவரால் அங்கு வர முடியவில்லை. தாயார் உட்பட குடும்பத்தினர் அனைவரும் தடையில்லா சான்று அளித்த பிறகே கம்பெனியை எனது பெயருக்கு மாற்றினேன். அதன்பிறகு நஷ்டம் ஏற்பட்டதால்தான் கம்பெனியை விற்றேன். எனவே என்னை மிரட்டி கம்பெனியை வாங்கியதாக சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான செய்திகளை நீக்க வேண்டும் என்று போலீசாரிடம் புகார் அளித்துள்ளேன்” என்றார்.






