சொந்த மகளையே கர்ப்பமாக்கிய கொடூர தந்தைக்கு தூக்குத்தண்டனை விதித்து நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்றம் அதிரடி…

திருநெல்வேலி : ஜனவரி 07, 2026 ; நெல்லை அருகே பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு, தூக்கு தண்டனை விதித்து நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது .”சொந்த மகளையே தந்தை சீரழிப்பதை ஏற்க முடியாது” என நீதிபதி சுரேஷ்குமார் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் 43 வயதான உடை மரம் வெட்டும் தொழிலாளி. இவருக்கு இரண்டு மனைவிகள். இதில் இவருக்கும் இரண்டாவது மனைவிக்கும் பிறந்த 15 வயது மகளை, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தந்தையே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டபோது நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அப்போதைய வள்ளியூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகலை வழக்கு பதிவு செய்தார். பின்னர் இன்ஸ்பெக்டர் கௌரி மனோகரி இந்த வழக்கின் விசாரணையைத் தொடர்ந்தார். ஏடிஎஸ்பி சண்முகம், டிஎஸ்பி தர்ஷிகா ஆகியோரின் மேற்பார்வையில் விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. ​சிறுமியின் கருவில் உருவான சிசுவின் டிஎன்ஏ மாதிரியும், தந்தையின் டிஎன்ஏ மாதிரியும் ஒத்துப்போனது. இது அறிவியல் பூர்வமாக கடந்த அக்டோபர் மாதம் நிரூபிக்கப்பட்டது.

இந்த வழக்கில் நீதிமன்ற காவலர் ராஜேஸ்வரி சாட்சிகளையும், டிஎன்ஏ முடிவுகளையும் உரிய நேரத்தில் கோர்ட்டில் சமர்ப்பித்து, விசாரணை விரைவாக நடைபெற உதவினார்.

நெல்லை சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 11 மாதங்களாக நடந்த இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து, நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பு வழங்கினார். அப்போது குற்றவாளி கூண்டில் நின்ற தந்தையைப் பார்த்து நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.
​தீர்ப்பின் போது நீதிபதி சுரேஷ்குமார் கூறியதாவது:
​”இந்த நீதிமன்றம் உங்களுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க நினைத்தாலும், உங்களது மனைவியும், பாதிக்கப்பட்ட குழந்தையும் உங்களுக்கு உச்சபட்ச தண்டனை கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்கள். சொந்த மகளையே ஒரு தந்தை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்வது ஏற்க முடியாதது. அதனால் இந்த கோர்ட் உங்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கிறது,”
என்று கூறி உத்தரவிட்டார்.

​தொடரும் அதிரடி
கடந்த 11 நாட்களுக்கு முன்புதான் இதே நீதிமன்றத்தில், மகளை கர்ப்பமாக்கிய விவகாரத்தில் தந்தைக்கு நீதிபதி சுரேஷ்குமார் தூக்கு தண்டனை விதித்திருந்தார். தற்போது மீண்டும் ஒரு தந்தைக்கு அதேபோன்ற கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தீர்ப்பு குழந்தைகளை பாதுகாப்பதில் நீதிமன்றத்தின் கண்டிப்பான போக்கை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

ரூ.10 லட்சம் இழப்பீடு

நீதிபதி சுரேஷ்குமார் தனது தீர்ப்பில், ‘பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், குற்றவாளியான சிறுமியின் தந்தைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது’ என்றும் தெரிவித்துள்ளார்.

உடல்நலக்குறைவால் சிசு உயிரிழப்பு

கடந்த பிப்ரவரி மாதம் சிறுமி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு இருந்ததால், டாக்டர்களின் பரிந்துரையின் அடிப்படையில் கருக்கலைப்பு செய்யப்பட்டது. இதை நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டு, அதனால் ஏற்பட்ட மருத்துவ மற்றும் சமூக விளைவுகள் சிறுமியின் மன உளைச்சலை மேலும் அதிகப்படுத்தி உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

அதி தீவிரமான வழக்கு

நெல்லை நீதிமன்றம் இந்த வழக்கில் முழுமையான மதிப்பீடு என்ற முறையைக் கையாண்டுள்ளது. அதாவது நம்பிக்கைத் துரோகம், குழந்தை பாதிப்புக்குள்ளாகும் நிலை, திட்டமிட்ட செயல்பாடு, உடல் நல பாதிப்பு ஆகிய அனைத்து காரணிகளையும் இணைத்து இது அதி தீவிரமான ஒரு வழக்கு என்று முடிவு செய்துள்ளது.

அடிப்படை உணர்வை சிதைக்கிறது

தண்டனை என்பது தனிப்பட்ட குற்றவாளியை பாதிப்பது மட்டுமின்றி சமூக நெறிமுறைகளை உறுதிப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும் என நீதிமன்றம் கருதுகிறது. பெற்றோரே இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவது வீட்டின் மீதான அடிப்படை உணர்வைச் சிதைக்கிறது. எனவே இத்தகைய சூழல்களில் சட்டம், குழந்தைகளைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்கும் என்பதையும், நம்பிக்கையை மீறுபவர்கள் மீது தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் சமூகத்திற்கு உணர்த்த வேண்டியது அவசியம் எனத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »