
திருநெல்வேலி : பிப்ரவரி 25, 2026 ; ஆசை ஆசையாக வாங்கிய புதிய காரில் ஆரம்பத்திலேயே கோளாறு ! மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோருக்கு ரூ.12.74 லட்சம் வழங்க ஆணையம் அதிரடி உத்தரவு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
திருநெல்வேலி சந்திப்பு மதுரை ரோடு காவலர் குடியிருப்பில் வசித்து வரும், வெடிகுண்டு தடுப்பு புலனாய்வு பிரிவில் பணிபுரியும் காவல் உதவி ஆய்வாளர் பாஸ்கர் அவர்களின் மனைவி பிரேமா பாக்கியத்தாய்,
கடந்த 19.06.2024 அன்று ரூ.9,08,089 மதிப்பில் புதிய ஹூண்டாய் காரை சுசி ஆட்டோ மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் வாங்கினார். வாகனம் வாங்கிய சில நாட்களிலேயே “Starting Problem” உள்ளிட்ட பல கோளாறுகள் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து வாகனம் பழுது நீக்கம் செய்ய விற்பனை நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆய்வின் போது, வாகனத்தின் பேனட்டில் எலி புகுந்து சென்சார் பகுதியிலுள்ள வயர்களை கடித்ததால் ரூ.75,000 செலவாகும் என்றும், அந்த தொகையை காப்பீட்டிலிருந்து பெறப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்தது.

ஆனால், அந்த வாகனத்தின் காப்பீடு வேறு நபர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது.
மேலும், அந்த ஹூண்டாய் வாகனம் ஏற்கனவே “சாந்தி” என்ற மற்றொரு நபருக்கு விற்பனை செய்யப்பட்டதை மறைத்து பிரேமா பாக்கியத்தாயிடம் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பிரேமா பாக்கியத்தாய், வழக்கறிஞர் பிரம்மா மூலம் திருநெல்வேலி நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். புதிய வாகனம் வழங்க வேண்டும் அல்லது முழுத் தொகையை வட்டியுடன் திருப்பி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
நிர்வாக காரணங்களால் வழக்கு திருநெல்வேலி கூடுதல் நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்திற்கு மாற்றப்பட்டது.
வழக்கை விசாரித்த ஆணைய தலைவர் பிறவி பெருமாள் மற்றும் உறுப்பினர் சண்முகப்பிரியா, ஹூண்டாய் விற்பனை நிறுவனம் செய்தது முறையற்ற வாணிபமும் சேவை குறைபாடுமாகும் என தீர்மானித்தனர்.
அதன்படி,
வாகனத்தின் முழு விற்பனைத் தொகை ரூ.9,08,089/-
காப்பீட்டு தொகை ரூ.34,075/-
பதிவு மற்றும் தொடர்புடைய செலவுகள் ரூ.1,12,214/-
மொத்தம் ரூ.10,54,378/- தொகையை 9% வருட வட்டியுடன் சேர்த்து ரூ.12,14,267/- திருப்பி வழங்க உத்தரவிட்டது.
மேலும், மன உளைச்சலுக்காக ரூ.50,000/- நஷ்டஈடு மற்றும் வழக்கு செலவிற்காக ரூ.10,000/- வழங்கவும் உத்தரவிட்டது.
இதனால் மொத்தம் ரூ.12,74,267/- பிரேமா பாக்கியத்தாய்க்கு வழங்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த தொகையை 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்றும், தவறினால் கூடுதல் வட்டி விதிக்கப்படும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது போன்ற நுகர்வோர் உரிமைகளை உறுதிப்படுத்தும் தீர்ப்புகள், ஆணையம் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை..






