
டிசம்பர் 31,2025 திருநெல்வேலி; நெல்லை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புகளில் ஒன்றான நயினார் குளத்தில் படகு சவாரி செய்யும் திட்டம், வரும் தைப்பொங்கல் முதல் தொடங்க உள்ளது. அதற்கான சோதனை ஓட்டம், நெல்லை மாநகர மேயர் தலைமையில் நடைபெற்றது.
தாமிரபரணி ஆறு மூலம் எத்தனையோ ஏரிகள், பாசன குளங்கள் தண்ணீரை பெற்று, வயல்வெளிகளில் நெற்பயிர் செழித்து வளருவதற்கு ஆதாரமாக திகழ்கிறது. அத்தகைய நீர்நிலைகளில் ஒன்றாக நெல்லை மாநகரின் மையப்பகுதியில் 244 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்து காட்சியளிக்கிறது நயினார் குளம். பரபரப்பான நெல்லை மாநகரின் மையப் பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் இந்த குளத்தின் கரையில் நின்று நெல்லையப்பர் கோவில் கோபுரங்களின் அழகை பார்த்து ரசிக்கும்போது, காற்றுக்கு ஆர்ப்பரித்து கரையில் மோதி, சிதறும் தண்ணீர் நம் மீது விழுந்து சிலிர்க்க வைக்கும். வெளியூர்களில் இருந்து வரும் மக்கள் இந்த குளத்தை கடக்கும் போது, குளத்தில் காற்றினால் எழும் அலைகளை கண்டு இது குளமா ? கடலா என சந்தேகம் எழும் அளவிற்கு இருக்கும். இந்த நயினார் குளத்தை சுற்றுலா தலமாக மேம்படுத்த கடந்த 2011-ம் ஆண்டு ரூ.60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்மூலம் குளத்தை சுற்றிலும் நடைபாதை அமைக்கப்பட்டது. மேலும் குளத்தின் தெற்கு பகுதியில் படகு போக்குவரத்து, மிதக்கும் ஓட்டல் தொடங்குவதற்கு தேவையான கான்கிரீட் நடைபாதையும் பார்வையாளர் மாடம் ஆகியவை உருவாக்கப்பட்டது. அந்த திட்டம் பல்வேறு காரணங்களால் திறப்பு விழாவே காணாமல் போனது.
இந்த நிலையில் நெல்லை மாநகரில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் பழைய கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடங்கள் கட்டும் பணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் நயினார்குளம் கரையில் ரூ.14 கோடி செலவில் நடைபாதை, சிறுவர்கள் விளையாட ஊஞ்சல், மற்றும் சுகாதார வளாகம் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டு இதில் பூங்கா, சுகாதார வளாகம் உள்ளிட்டவை திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது. நெல்லை மாநகரில் அறிவியல் மையம், சினிமா தியேட்டர்கள் சிறு சிறு பூங்கா தவிர பெரிய அளவில் பொழுதுபோக்கு அம்சங்கள் எதுவும் இல்லை, எனவே நயினார் குளத்தை சுற்றுலா தலமாக மேம்படுத்தி, படகு சவாரிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தச் சூழலில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களுக்கு சென்றால் படகு சவாரி முக்கிய இடம் பிடிக்கிறது. அதேபோல் வடகிழக்கு பருவமழை சீசன் காலத்தில் தண்ணீர் நிரம்பும் நயினார் குளத்தில் படகுசவாரி திட்டத்தை தொடங்க முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் முயற்சிகள் மேற்கொண்டது. இந்த நிலையில் நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் படகு சவாரி திட்டத்தின் முன்னோட்டத்தை மேற்கொண்டனர்.

நயினார் குளத்தில் படகு பயணம் மேற்கொள்ளும் இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து பணிகளை விரைவுபடுத்தி ஜனவரி மாதம் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தன்று இந்த திட்டத்தை தொடங்கி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். இந்த சேவைக்கான கட்டண விபரங்கள் வழிமுறைகள், விதிமுறைகள் என்ன என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. நெல்லை மாநகர பகுதியின் மையத்தில் அமைந்துள்ள நயினார் குளத்தில் படகு சவாரி, பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய புதிய திட்டம் அமலுக்கு வருவது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், குழந்தைகள் இளைஞர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.






