சென்னை , ஏப்ரல் 29 : தமிழ்நாடு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில் வாக்காளர்கள் மற்றும் அரசியல் பார்வையாளர்களிடையே இந்த கணிப்புகளின் நம்பகத்தன்மை குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஏப்ரல் 29 ஆம் தேதி பல்வேறு ஆய்வு நிறுவனங்கள் தங்களின் வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டன. மாநிலத்தின் 234 தொகுதிகளிலும் எந்தக் கட்சி அல்லது கூட்டணி முன்னிலையில் இருக்கிறது என்பதை முன்கூட்டியே சுட்டிக்காட்ட முயலும் இந்த எக்ஸிட் போல்கள் உண்மைக்கு எவ்வளவு அருகில் இருக்கின்றன என்பதே தற்போதைய பிரதான கேள்வியாக மாறியுள்ளது.
நெல்லை தேர்தல் முடிவுகள் 2026: வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தீவிரம்
கடந்த கால தேர்தல் வரலாறுகளையும் புள்ளிவிவரங்களையும் ஆராயும் அரசியல் ஆய்வாளர்கள் எக்ஸிட் போல்களை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பது சரியான அணுகுமுறை அல்ல என்று சுட்டிக்காட்டுகின்றனர். ஏனெனில் இந்த கணிப்புகள் அனைத்தும் ஏதோ ஒரு தர்க்கத்தின் அடிப்படையிலும் களத்தில் வாக்காளர்களிடம் நேரடியாகப் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையிலுமே உருவாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் வணிக ரீதியாகவும் நம்பகத்தன்மை ரீதியாவுமே தேர்தல் கணிப்பு நிறுவனங்கள் இயங்குவதால் தொடர்ந்து இருமுறை தவறான கணிப்புகளை வெளியிடும் நிறுவனங்களின் சந்தை மதிப்பு மற்றும் நம்பகத்தன்மை சரிந்துவிடும் என்ற யதார்த்தமும் இதில் அடங்கியுள்ளது. எனவே எக்ஸிட் போல்களை பூரண உண்மை என்றோ இறுதித் தீர்ப்பு என்றோ எடுத்துக்கொள்ளாமல் தேர்தல் முடிவுகளை நோக்கிச் செல்லும் பாதையில் ஒரு வழிகாட்டி என்ற மனப்பாங்குடன் மட்டுமே அணுக வேண்டும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஐபிஎல் 2026: சர்ச்சையில் ரியான் பராக்; பிசிசிஐ அதிரடி நடவடிக்கை?
தமிழ்நாட்டின் பாரம்பரிய அரசியல் வரலாற்றை உற்றுநோக்கினால் இங்கு பெரும்பாலும் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவங்களுக்கு இடையிலான நேரடிப் போட்டியே பிரதானமாக இருந்து வந்துள்ளது. இத்தகைய ‘பைபோலர்’ தேர்தல் களங்களில் வாக்கு சதவீதம் மற்றும் அது இடங்களாக மாறும் விகிதம் ஆகியவற்றை ஓரளவிற்கு எளிதாகக் கணித்துவிட முடியும். உதாரணத்திற்கு கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் முதன்மைக் கூட்டணிகளுக்கு இடையே நிலவிய சுமார் ஆறு சதவீத வாக்கு வித்தியாசமே திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய பெரும்பான்மை வெற்றியைப் பெற்றுத்தந்தது. ஆனால் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழலை எதிர்கொண்டு நிற்கிறது.
இந்தத் தேர்தலில் புதிய அரசியல் சக்திகளின் வருகையும் பாரம்பரியக் கட்சிகளுக்கு மாற்றாக உருவெடுத்துள்ள புதிய கட்சிகளின் எழுச்சியும் முந்தைய தேர்தல் கணக்குகளையும் கணிப்பு உத்திகளையும் முழுமையாகச் சிதைத்துள்ளன. தேர்தல் களத்தில் பலம் வாய்ந்த ஒரு மூன்றாவது சக்தி தோன்றி அது சுமார் 12 சதவீதம் முதல் 16 சதவீதம் வரையிலான வாக்குகளைப் பெற்றாலும் கூட அந்த வாக்குகள் அனைத்தும் நேரடியாகச் சட்டமன்ற இடங்களாகவோ வெற்றியாகவோ மாறுவதில்லை என்பதுதான் இங்குள்ள தேர்தல் முறைமையின் எதார்த்தம். தமிழ்நாட்டின் தற்போதைய தேர்தல் சூழலில் ஒரு தொகுதியில் வேட்பாளர் வெற்றி பெறக் குறைந்தது 30 முதல் 35 சதவீத வாக்குகள் தேவைப்படுகின்றன. ஒரு புதிய கட்சிக்கு மாநிலம் தழுவிய அளவில் சராசரியாக 15 சதவீத வாக்குகள் இருந்தாலும் அவை குறிப்பிட்ட சில தொகுதிகளில் குவியாமல் பரவலாகப் பல இடங்களில் சிதறி இருக்கும்போது அது வெற்றியாக உருவெடுப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் தான் எக்ஸிட் போல்களில் வெளியாகும் ஒட்டுமொத்த வாக்கு சதவீதத்திற்கும் கட்சிகளுக்குக் கிடைக்கும் இடங்களின் எண்ணிக்கைக்கும் இடையே ஒரு பெரிய முரண்பாடு நிலவுகிறது.
இதற்கெல்லாம் மேலாகத் தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கே உரிய ‘சைலன்ட் வோட்டர்’ எனப்படும் அமைதியான வாக்காளர்களின் மனநிலை எப்போதுமே தேர்தல் கணிப்புகளுக்குப் பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. தேர்தல் நாளுக்குப் பிந்தைய கள ஆய்வுகளில் பங்கேற்கும் வாக்காளர்கள் அனைவரும் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்ற உண்மையான தகவலை வெளியில் பகிர விரும்புவதில்லை. சிலர் தங்களின் உண்மையான வாக்குத் தேர்வை மறைக்கலாம் அல்லது சில சூழல்களில் தவறான தகவல்களையும் கள ஆய்வாளர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். ‘நான் யாருக்கு வாக்களித்தேன்’ என்ற அடிப்படை கேள்வியிலேயே இத்தகைய பிழைகள் ஏற்படும்போது அது ஒட்டுமொத்த எக்ஸிட் போல்களின் துல்லியத்தன்மையையும் கணிசமாகப் பாதித்து விடுகிறது.
இங்கு எழும் முக்கியமான கேள்வி என்னவென்றால் எக்ஸிட் போல்கள் சேகரிக்கும் தரவுகள் தவறானவையா அல்லது அந்தத் தரவுகளை நாம் புரிந்துகொள்ளும் தர்க்கம் தவறானதா என்பதுதான். கள ஆய்வில் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு 15 சதவீத வாக்குகள் இருப்பதாகத் தரவுகள் காட்டும்போது அது மாநிலம் முழுமைக்கும் சமமாகப் பரவியிருக்க வாய்ப்பில்லை. மாறாக அக்கட்சிக்குச் செல்வாக்குள்ள சில குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டும் அந்த வாக்கு சதவீதம் 20 முதல் 30 சதவீதமாக உயர்ந்து அங்கு மாற்றங்களை ஏற்படுத்தலாம். இதன் விளைவாக எக்ஸிட் போல்கள் காட்டும் வாக்கு சதவீதம் உண்மைக்கு மிக அருகில் இருந்தாலும் அவர்கள் கணிக்கும் இடங்களின் எண்ணிக்கை யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டு அதிகப்படுத்தப்பட்டதாகத் தோன்றுவதற்கு இதுவே முதன்மைக் காரணம் ஆகும்.
வாக்குச் சிதறல் புதிய அரசியல் கட்சிகளின் பலப்பரீட்சை மற்றும் தங்களின் முடிவை ரகசியமாக வைத்துள்ள வாக்காளர்கள் எனப் பல காரணிகள் இணைந்து இந்தத் தேர்தலின் எக்ஸிட் போல் கணிப்புகளை மிகவும் சிக்கலான ஒன்றாக மாற்றியுள்ளன. எனவே எக்ஸிட் போல்கள் என்பவை தேர்தலின் இறுதித் தீர்ப்பு அல்ல அவை வெறும் அரசியல் காற்றின் திசையைக் காட்டும் ஒரு அறிகுறி மட்டுமே என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழகத்தின் 2026 சட்டமன்றத் தேர்தலின் நிஜமான இறுதி முடிவு என்ன என்பது வரும் மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது தான் அதிகாரப்பூர்வமாகத் தெரியவரும்.







