
டிசம்பர் 21.2025 ; திருநெல்வேலி மாவட்டம் கரையிருப்பு பகுதியில் பாஜக வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் நாகராஜன் இல்ல விழாவிற்கு வருகை தந்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, திருநெல்வேலியில் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரைக்குத் தக்க பதிலடி கொடுத்து அவர் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசுகையில், “மதச்சார்பின்மை மற்றும் மகாத்மா காந்தி குறித்து மேடைகளில் பேசும் முதல்வர் மு.க.ஸ்டாலின், உண்மையில் அந்த மதச்சார்பின்மையைக் கடைபிடிப்பதில்லை என்பதை நான் குற்றச்சாட்டாகவே முன்வைக்கிறேன். கிறிஸ்துமஸ் விழாவிற்குச் சென்று வாழ்த்து சொல்லும் முதல்வருக்கு, தீபாவளிப் பண்டிகைக்கு ஒரு வாழ்த்துச் சொல்லக்கூட மனம் வரவில்லை. ஒரு குறிப்பிட்ட மதத்தைப் புறக்கணிக்கும் இவருக்கு மதச்சார்பின்மை என்ற வார்த்தையைப் பேசத் தகுதியில்லை” என்று சாடினார்.
100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம் குறித்துப் பேசிய நயினார் நாகேந்திரன், “எதிர்க்கட்சியாக இருந்தபோது இத்திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என்று கூறிய திமுக, ஆட்சிக்கு வந்தவுடன் பல குளறுபடிகளைச் செய்து திட்டத்தையே நிறுத்தி வைத்தது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஏழைகளின் நலன் கருதி இத்திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தியுள்ளார். குறிப்பாக, அறுவடை மற்றும் நாத்து நடுதல் போன்ற விவசாயக் காலங்களில் ஆட்கள் தட்டுப்பாடு ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு, விவசாயப் பணிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இத்திட்டத்தைச் சீரமைத்து 125 நாட்களை உறுதி செய்துள்ளார்” என்றார்.

தொல்லியல் துறை தொடர்பான முதல்வரின் விமர்சனத்திற்குப் பதிலளித்த அவர், “நெல்லை மாவட்ட அருங்காட்சியகம் என்பது ஒரு நல்ல விஷயம் என்றாலும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ஏற்கெனவே இப்பகுதியை ஆய்வு செய்து ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களுக்காகப் பல திட்டங்களை முன்னெடுத்துள்ளார் என்பதை மறக்க முடியாது. தமிழர்களின் கலாச்சாரத்தைப் பிரதமர் மோடி அவர்கள் உலக அளவில் கொண்டு சென்றுள்ளார். காசி மற்றும் குஜராத்தில் தமிழ் சங்கமம் நடத்தியது, 63 மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்த்தது, ஐநா சபை வரை ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளை ஒலிக்கச் செய்தது எனத் தமிழின் பெருமையை பாஜக அரசு நிலைநாட்டியுள்ளது. இதற்கு எந்த ஆதாரமும் இன்றி முதல்வர் குறை கூறுவது ஏற்கத்தக்கதல்ல” என்று குறிப்பிட்டார்.
மேலும், நிதி ஒதுக்கீடு குறித்துப் பேசிய அவர், “கடந்த 11 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மட்டும் சாலைகள், பாலங்கள், விமான நிலையங்கள் என 14 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது. இன்று நெல்லையில் முதல்வர் திறந்து வைத்த 150 கோடி ரூபாய் மதிப்பிலான மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை என்பது மத்திய அரசின் ‘PMSSY’ திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது. இதில் 100 கோடி ரூபாய் மத்திய அரசின் பணம், 30 கோடி ரூபாய் மட்டுமே மாநில அரசின் நிதி. அதேபோல் 92 கோடி ரூபாய் மதிப்பிலான கிரிட்டிக்கல் கேர் சென்டரும் பிரதமர் மோடியின் திட்டம்தான். மத்திய அரசின் திட்டங்களைத் தொடங்கி வைத்துவிட்டு, மாநில அரசு தன் ஸ்டிக்கரை ஒட்டும் வேலையைத் தொடர்ந்து செய்கிறது. ரேஷன் கடைகளில் மத்திய அரசு இலவசமாக வழங்கும் பொருட்களுக்கும் மாநில அரசு தன் பெயரில் ஸ்டிக்கர் ஒட்டுகிறது” என்று குற்றம் சாட்டினார்.
இறுதியாகப் பேசிய அவர், “இந்த ஸ்டிக்கர் ஒட்டும் அரசு விரைவில் முடிவுக்கு வரும். வருகிற 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சி அகற்றப்பட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் ஆட்சியில் அமரும் என்பதை மக்கள் உறுதி செய்வார்கள்” எனத் தனது பேட்டியில் தெரிவித்தார். நயினார் நாகேந்திரனின் இந்தப் பேட்டி அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.






