
டிசம்பர் 25-2025; அருவியில் குளிக்க கடந்த 37 நாட்களாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இன்று முதல்
மணிமுத்தாறு அருவியில் குளிக்க
சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளதால் மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக அரையாண்டு விடுமுறை மற்றும் கிறிஸ்மஸ் பண்டிகை என தொடர் விடுமுறை காரணமாக மக்கள் மணிமுத்தாறு அருவியை நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர்..
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவி மாவட்டத்தில் மிகவும் பிரபலமான சுற்றுலா தளம். ஆண்டின் அனைத்து நாட்களிலும் அருவியில் தண்ணீர் கொட்டுவதே இப்பகுதியின் சிறப்பு. குடும்பமாய் வரும் போதும் தனித்து வரும்போதும் போக்குவரத்து மற்றும் உணவுக்கான செலவு என்பது மிகவும் குறைவாகவே இருக்கும் என்பதால் எப்போதும் இந்த அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக வந்து குளித்து மகிழ்வது வழக்கம்.
இதனிடையே வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை, ஊத்து எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்து வந்ததன் காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடந்த நவம்பர் மாதம் 18ம் தேதி சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை சார்பில் அங்கு தடை விதிக்கப்பட்டது. புறநகர் பகுதிகளில் மழை ஓய்ந்த நிலையிலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வந்ததால் மணிமுத்தாறு அருவியில் தொடர்ந்து நீர்வரத்து குறையாமல் இருந்து வந்தது. இதன் காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மலைப்பகுதியிலும் கடந்த சில நாட்களாக மழை குறைந்ததன் எதிரொலியாக இன்று அருவியில் நீர்வரத்து குறைந்து குளிப்பதற்கு ஏற்ற சூழல் உருவானது. இதனால் இன்று முதல் சுற்றுலா பயணிகள், அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். இதனால் சுமார் 37 நாட்கள் தடைக்கு பின்னர் மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காரணம், தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறை தொடங்கியிருப்பதால் குழந்தைகளை அழைத்துக் கொண்டு சுற்றுலா செல்வதற்கும், அதுவும் குறைந்த பட்ஜெட்டில் சுற்றுலா சென்று வருவதற்கும் ஏற்ற இடம் மணிமுத்தாறு அருவி மற்றும் அதனை சுற்றியுள்ள பூங்கா என்பதால் மக்கள், அருவியை கண்டு குளித்து கொண்டு சென்ற உணவை உண்டு குடும்பத்தினருடன் மகிழ மணிமுத்தாறு நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். பேருந்து சேவை தடையின்றி இருப்பதால் அனைத்து மக்களும் விடுமுறையை கொண்டாட சுற்றுலாவிற்கு செல்ல தயாராகி வருகின்றனர்.






