இந்தியா அடுத்தடுத்து வானில் நடத்த இருக்கும் அதிசயங்கள் ! இஸ்ரோ தலைவர் நாராயணன் நெல்லையில் பரபரப்பு பேட்டி

திருநெல்வேலி டிசம்பர் 11 – 2025 ;இஸ்ரோவின் பிரம்மாண்ட திட்டங்கள்: ககன்யான் 2027-ல் விண்ணுக்கு; குலசேகரப்பட்டினம் ஏவுதளம் 2027 தொடக்கத்தில்; இந்திய விண்வெளி நிலையம் 2028-ல் தொடக்கம் – அதிகாரி தகவல்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) தலைவர் டாக்டர் நாராயணன், இஸ்ரோவின் எதிர்கால திட்டங்களைப் பற்றி செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் கூறியதாவது: ககன்யான் திட்டத்தின் முக்கிய நோக்கம், இந்திய ராக்கெட்டில் இந்திய விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பி பத்திரமாக திரும்பக் கொண்டுவருவதே. இதற்கான ராக்கெட் தயாரிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.

விண்வெளியில் ஆக்சிஜன், வெப்பநிலை, அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் சுற்றுச்சூழல் கட்டுப்பாடு அமைப்பு (ECLSS) சிறப்பாக உருவாக்கப்பட்டு வருகிறது. அதேபோல், ராக்கெட் சிக்கலின் போது வீரர்களை மீட்கும் குழு வெளியேறும் அமைப்பு (CES) வெற்றிகரமாக சோதனை முடித்துள்ளது.

இதற்காக ஏற்கனவே 8,000 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. மனிதர்களை ஏற்றிய ககன்யான் விண்கலம் 2027-ஆம் ஆண்டு விண்ணுக்கு அனுப்பப்படும். அதற்கு முன் ஆட்கள் இல்லாத மூன்று ராக்கெட்டுகள் சோதனையாக ஏவப்படும்.

இந்திய விண்வெளி நிலையம் (Bharatiya Antariksha Station) பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமாகும். மொத்தம் ஐந்து தொகுதிகளாக அமைக்கப்படும் இந்த நிலையத்தின் முதல் தொகுதி 2028-ல் விண்ணுக்கு அனுப்பப்படும் எனத் தெரிவித்தார்.

குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. 2023-ல் பிரதமர் அடிக்கல் நாட்டிய இத்திட்டம் இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளமாக உருவாகிறது. இது ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அடுத்த முக்கிய மையமாகும்.

இந்த ஏவுதளம் 2027 தொடக்கத்தில் செயல்படத் தொடங்கும் எனவும், இதை தமிழ்நாட்டுக்கானதாக அல்லாமல் இந்தியாவுக்கான பெருமை எனவும் கூறினார்.

அதேபோல், சந்திரயான்–4 திட்டம் நிலவில் தரையிறங்கி, அங்கிருந்து மாதிரிகளை சேகரித்து பூமிக்குக் கொண்டுவரும் நோக்குடன் நடைபெறுகிறது.

இஸ்ரோவின் முயற்சிகள் நாடு பாதுகாப்பிலும், சாதாரண மக்களின் வாழ்விலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்றும், இந்திய விண்வெளித் துறை உலகளவில் பெருமை சேர்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »