
ஜனவரி 01, 2026 : திருநெல்வேலி; வரலாற்று சிறப்புமிக்க நெல்லை அருள்மிகு நெல்லையப்பர் – காந்திமதி அம்பாள் கோவிலில் ரூ.3 கோடியே 95 லட்சம் மதிப்பில் புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள வெள்ளித்தேரின் வெள்ளோட்ட நிகழ்ச்சி, நாளை ( ஜனவரி 2ம் தேதி ) மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
தென் தமிழகத்தின் முக்கிய சிவாலயங்களில் ஒன்றாக விளங்கும் நெல்லை நெல்லையப்பர் கோவிலில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளித்தேர் கோவில் வீதிகளில் வெகு விமர்சையாக வலம் வந்து பக்தர்களின் கவனத்தை ஈர்த்தது. ஆனால் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில் அந்த வெள்ளித்தேர் முழுவதுமாக சேதமடைந்தது. இதன் பின்னர் நீண்ட காலமாக வெள்ளித்தேர் சீரமைக்கப்படாமல் பயன்பாட்டுக்கு வராமல் இருந்தது.
இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நெல்லையப்பர் – காந்திமதி அம்பாள் கோவிலில் புதிய வெள்ளித்தேர் தயாரிக்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து இந்து சமய அறநிலையத் துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அன்பளிப்பாக வெள்ளி வழங்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி தமிழகம் முழுவதும் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் பெருந்திரளாக வெள்ளி வழங்கினர். இதன் மூலம் மொத்தம் 425 கிலோ வெள்ளி சேகரிக்கப்பட்டது. ரூ.3.95 கோடி மதிப்பில், பாரம்பரிய கலைநுட்பத்துடன், கோவிலின் தொன்மை சிறப்பை பிரதிபலிக்கும் வகையில் 51 அடி உயரத்தில் புதிய வெள்ளித்தேர் தயாரிக்கும் பணிகள் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக திறமையான சிற்பிகள் மற்றும் கலைஞர்களால் மேற்கொள்ளப்பட்டன. தற்போது அந்தப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.
சமீபத்தில் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற அரச நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், “விரைவில் நெல்லையப்பர் கோவிலில் வெள்ளித்தேர் ஓடும்” என்று அறிவித்திருந்தார். அதன்படி தற்போது வெள்ளித்தேரின் வெள்ளோட்ட நிகழ்ச்சி நடைபெற உள்ளது..

வெள்ளித்தேரின் வரலாறு
ஸ்வேத கேது எனும் அரசன், தினமும் நெல்லையப்பரை வழிபட்டு வந்ததாக கோவில் தல புராணம் கூறுகிறது. தனது அந்திமக்காலம் நெருங்கியதை உணர்ந்த அரசன், இறைவனது ஆலயத்திலேயே அமர்ந்து சிவபூஜை செய்து கொண்டிருந்த போது, காலன் பாசக்கயிறை வீசி அவனை ஆட்கொள்ள முயன்றான். அப்போது அரசன் இறைவனை நோக்கி அபயம் வேண்ட, நெல்லையப்பர் காலனை காலால் கடிந்து, அரசனை காத்ததாக திருவிளையாடல் இதலாசத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இறைவன் “காலநாசன்” என்ற பெயராலும் போற்றப்படுகிறார்.
இந்த திருவிளையாடலை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் பூமி, உத்தரம், அஸ்தம் நட்சத்திர தினங்களில் பஞ்சமூர்த்திகள் ஒரே ரதத்தில் எழுந்தருளி திருவிழா உலா நடைபெறும் மரபு இருந்து வருகிறது. முன்னதாக பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரதத்தில் உலா வந்த நிலையில், அந்த ரதம் சீர்கேடு அடைந்ததால் தற்போது புதிய வெள்ளித்தேர் தயாரிக்கப்பட்டுள்ளது.
தாமிரபரணி கரையோரம் தன்னைத் தொழுவோரை கரை சேர்க்கும் தலமாக விளங்கும் இக்கோவிலில், பெருவிழாக்கள், தேரோட்டம், தெப்ப உற்சவம் உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்கின்றனர்.
தமிழ்நாடு சட்டமன்ற 2023–2024ஆம் ஆண்டு அறிவிப்பின் அடிப்படையில், 51 அடி உயரம் கொண்ட இந்த புதிய வெள்ளித்தேர் உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் அன்பளிப்பாக பெறப்பட்ட 425 கிலோ வெள்ளி முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வெள்ளோட்ட நிகழ்ச்சி வைகாசி வருடம் மார்கழி மாதம் 18ம் நாள், 02.01.2026 (வெள்ளிக்கிழமை), பொன்னி தீபம், மிருகசீரிஷ நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில், அருள்மிகு நெல்லையப்பர் – காந்திமதி அம்பாள் திருவருள் திணை செய்ய, மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை வெள்ளித்தேர் வெள்ளோட்டம் நடைபெற உள்ளது.
வெள்ளோட்ட நிகழ்ச்சிக்காக பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு இறையருள் பெற வேண்டும் என்றும் கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.






