நெல்லை: நவ 24 – 2025 தாமிரபரணி ஆற்றில் அதிகப்படியான தண்ணீர் திறந்து விடப்படுவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது ! தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருங்கள் என ஒவ்வொரு தனி நபர் மொபைலுக்கும் அலர்ட் மெசெஜ் கொடுத்த பேரிடர் துறை..

நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரம் அடைந்துள்ளது. மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிகனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. குறிப்பாக 143 அடி முழு கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அந்த அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 130 அடியை தொட்டுள்ளது. அந்த அணை முழு கொள்ளளவை எட்டுவதற்கு இன்னும் 13 அடி மட்டுமே தேவைப்படுகிறது. அதேபோல் 156 அடி முழு கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையில் நீர்மட்டம் 150 அடியை எட்டியுள்ளது. அந்த அணை நிரம்புவதற்கு இன்னும் 6 அடி மட்டுமே தேவைப்படுகிறது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்னும் சில மணி நேரங்களில் அணை முழு கொள்ளளவை எட்டிவிடும்.
அதேநேரம் இந்த 2 அணைகளுக்கும் வினாடிக்கு 7 ஆயிரத்து 300 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணைகளில் இருந்து 2,800 கனஅடி நீர் உபரியாக வெளியேற்றப்படுகிறது. இதேபோல் 118 அடி முழு கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 103 அடியை கடந்துள்ளது. அணை நிரம்புவதற்கு இன்னும் 15 அடி நீர் மட்டுமே தேவைப்படும் நிலையில், அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 301 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

இதன் காரணமாக தாமிரபரணி கரையோற மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், காட்டாற்று வெள்ளத்தால் நதியில் கலக்கும் தண்ணீர் என தாமிரபரணி ஆற்றில் சுமார் 20 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
தாமிரபரணி ஆற்றில் அதிகப்படியான தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க பேரிடர் மேலாண்மை தனிநபர் ஒவ்வொருவருக்கும் செல்போன் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளது.

தாமிரபரணி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்வதால் ஆற்றுப்பகுதியில் குளிக்கவோ, அதன் அருகில் நின்று செல்பி எடுக்கவோ வேண்டாம் என்று பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையோர நீர்வழி தடத்தில் உள்ள முக்கூடல் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்ய தேசிய பேரிடர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு துறையினர் விரைந்துள்ளனர்.
/

பேரிடர் மீட்பு குழு
நெல்லைக்கு மாநில பேரிடர் மீட்பு படையினர் 26 பேர் கொண்ட குழு மாநகரில் இன்று முகாமிட்டுள்ள நிலையில், ராதாபுரத்தில் தேசிய பேரிடர் மீட்பு குழுவும் முகாமிட்டுள்ளது. இந்த குழுக்கள் இன்று முதல் மாவட்டம் முழுவதும் ஆய்வு செல்கின்றனர். ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மேலப்பாளையம் மேலநத்தம் தரைப்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சேரன்மகாதேவி அருகே மேலகூனியூரில் வள்ளி என்ற பெண்ணின் வீட்டுச்சுவர் கனமழையால் இடிந்து விழுந்தது. இதேபோல் மூலைக்கரைப்பட்டியில் ஒரு ஓட்டு வீட்டு சுவர் இடிந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.
முனைஞ்சிப்பட்டி அருகே முத்து வீரபுரத்தில் இருந்து சொக்கலிங்கபுரம் செல்லும் சாலையில் ராட்சத மரம் சாலை நடுவே விழுந்ததால் அதிகாலை 4 மணி முதல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து போக்குவரத்தை சரிசெய்தனர்.

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஊத்து, நாலுமுக்கு, காக்காச்சி, மாஞ்சோலை எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக ஊத்து எஸ்டேட் பகுதியில் 23 சென்டிமீட்டரும், நாலுமுக்கில் 22 சென்டிமீட்டரும், காக்காச்சியில் 21 சென்டிமீட்டரும், மாஞ்சோலையில் 19 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது. அங்கு 6-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் களக்காடு தலையணை, காரையாறு அகஸ்தியர் அருவிகளிலும் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.






