
டிசம்பர் 17.2025; தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்புகள் விளைச்சல் முடிந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. குறிப்பாக திருக்காட்டுப்பள்ளி அதனை சுற்றியுள்ள நடுப்படுகை, வளப்பக்குடி, திருச்சென்னம்பூண்டி, கோவிலடி, அலமேலுபுரம்பூண்டி ஆகிய பகுதியில் பொங்கல் கரும்பு தொகை உரித்து வெட்டுவதற்கு தயார் நிலையில் உள்ளது.
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கிராம பகுதியில் விவசாயிகள் வருடம் தோறும் பொங்கலுக்கு பொங்கல் கரும்பு பயிரிட்டு விற்பனை செய்வார்கள்.
இந்த ஆண்டும் பொங்கலுக்கான கரும்பு பயிரிடப்பட்டு அறுவடை செய்யும் தருணத்தில் வைத்துள்ளனர். தங்களது வயல்களில் விவசாயிகள் ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் என வயல்களில் விவசாயம் செய்யப்பட்டுள்ள கரும்புகளுக்கு தோகை உரித்து வைத்துள்ளனர். இன்னும் பொங்கலுக்கு 40 நாட்கள் உள்ள நிலையில் கரும்பு விவசாயம் செய்துள்ள அனைத்து விவசாயிகளும் கரும்பு அறுவடை செய்வதற்கு ஏற்ற வகையில் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து வைத்துள்ளனர். பொங்கல் வரும் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே வெளியூர்களில் இருந்து வந்து விலைக்கு வாங்கக்கூடிய வாடிக்கையாளர்கள் தஞ்சை, புதுக்கோட்டை, சேலம் , திருச்சி, ஈரோடு போன்ற பகுதியில் இருந்து வந்து கரும்பு விவசாயம் செய்துள்ள விவசாயிகளிடம் முன்பணம் கொடுத்து கரும்புகளை கட்டு கணக்கில் வாங்குவதற்கு பெரிய கரும்பு, சிறிய கரும்புகள் என ஒதுக்கி வைத்துள்ளனர். பொங்கல் நாளுக்கு முந்திய வாரங்களில் இருந்து பொங்கல் சீர் கொடுப்பதற்கு கரும்புகள் வெட்டப்பட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு திருக்காட்டுப்பள்ளி பகுதியில் இருந்து அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டும் கரும்புகளை வெட்டி விற்பனை செய்வதற்காக விவசாயிகள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தயார் நிலையில் வைத்துள்ளனர். இந்தாண்டு மழை பாதிப்பு மற்றும் உற்பத்தி செலவினங்களை கணக்கில் கொண்டு கரும்புக்கு கட்டுப்படியான விலை கிடைக்குமா என மிகப்பெரிய எதிர்பார்ப்பில் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

திருக்காட்டுப்பள்ளி செங்கரும்பு – இனிய சுவையின் பின்னணி என்ன?
தஞ்சாவூர் மாவட்டம்
திருக்காட்டுப்பள்ளி பகுதியில் விளையும் செங்கரும்பு, அதன் அதிக இனிமை, சாறு நிறைவு மற்றும் மென்மையான தன்மை காரணமாக பொங்கல் பண்டிகை காலத்தில் பெரும் வரவேற்பைப் பெறுகிறது. காவிரி டெல்டா பகுதியின் இயற்கை வளங்களும், விவசாயிகளின் பாரம்பரிய அனுபவமும் இந்தச் செங்கரும்பின் சுவைக்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.
காவிரி டெல்டாவில் காணப்படும் அல்லுவியல் மண் வளம், கரும்பு வளர்ச்சிக்கு தேவையான கரிமச் சத்துகள் மற்றும் பொட்டாசியத்தை இயற்கையாக வழங்குகிறது. இதன் காரணமாக கரும்பில் சர்க்கரை அளவு அதிகரித்து, இயற்கையான இனிமை உருவாகிறது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், காவிரி மற்றும் அதன் கிளை கால்வாய்கள் மூலம் கிடைக்கும் நிலையான நீர்ப்பாசனம், கரும்பு செடிகள் முழுமையாக வளர உதவுகிறது. நீர்த் தட்டுப்பாடு இல்லாத சூழல் காரணமாக நார்ச்சத்து குறைந்து, சாறு நிறைந்த கரும்பு கிடைப்பதாக கூறப்படுகிறது.
பகல் நேர வெப்பமும், இரவு நேரத்தில் ஏற்படும் சற்றே குளிர்ச்சியும் இணைந்த காலநிலை மாற்றம், கரும்பில் சர்க்கரை சேமிப்பை அதிகரிக்கிறது. இதுவே திருக்காட்டுப்பள்ளி செங்கரும்பின் தனித்துவமான சுவைக்கு மற்றொரு காரணமாக பார்க்கப்படுகிறது.
பல தலைமுறைகளாக கரும்பு சாகுபடியில் ஈடுபட்டு வரும் இப்பகுதி விவசாயிகள், சரியான விதைத் தேர்வு, தேவைக்கேற்ற உரமிடல் மற்றும் நேர்மையான அறுவடை போன்ற நடைமுறைகளை பின்பற்றுவதால், பொங்கல் சந்தைக்கு ஏற்ற தரமான செங்கரும்பை வழங்க முடிகிறது.
இதன் விளைவாக, திருக்காட்டுப்பள்ளி பகுதியில் விளையும் செங்கரும்பு பொங்கல் பண்டிகைக்கான முக்கிய வணிகப் பயிராக திகழ்ந்து வருகிறது. உற்பத்தி செலவுகளை ஈடுகட்டும் வகையில் நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், விவசாயிகள் சந்தை நிலவரத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.






